தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதா? - ஜெயலலிதா ஆவேசம்

தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டம் டெல்லியில் சனிக்கிழமை நடந்தது. கூட்டத்துக்கு பிரதமர் மன்மோகன்சிங் தலைமை தாங்கினார். இதில் மாநில முதல்வர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை வெளியிட்டனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில் இந்த கூட்டத்தில் தமிழக நிதி மந்திரி ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார். அவர் முதல்வரின் பேச்சு அடங்கிய அறிக்கையை சமர்ப்பித்தார். அதில் ஜெயலலிதா கூறியிருப்பதாவது:
மத்திய அரசு நல்ல சாதனைகள் செய்வதை விட்டு, விட்டு பாரபட்சமான செயல்களில் ஈடுபடுவதை இந்த தேசிய வளர்ச்சிக்குழு கூட்டத்தில் வேதனையுடன் பதிவு செய்கிறேன். காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு மத்திய அரசு பாதிதான் வளைந்து கொடுக்கிறது.
மாற்றாந்தாய் மனப்பான்மை
காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யாத மாநில மக்களும் இந்திய குடிமகன்கள்தான் என்பதை மத்திய அரசு புரிந்து கொள்ளவில்லை. அந்த மாநிலங்களின் நியாயமான தேவைகளை கூட மத்திய அரசு செய்வ தில்லை. நாங்கள் பல தடவை கோரிக்கை விடுத்தும் தமிழ் நாட்டுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு எதுவும் செய்யப்படவில்லை. ஆனால் கூட்டணியில் உள்ள ஒரே காரணத்துக்காக மேற்குவங்க மாநிலத்துக்கு சிறப்பு திட்டம் அறிவித்தனர்.
இது காங்கிரஸ் இல்லாத அரசுகள் மீது மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்வதையே காட்டுகிறது. மத்திய அரசு சமீப காலங்களில் அறிவித்த திட்டங்கள் இயற்கையாகவே ஜனநாயகத்துக்கு எதிரானவை ஆகும்.
வன்முறையை தடுக்க மத்திய அரசு 2011-ம் ஆண்டு சட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டம் மாநில அரசுகளின் உரிமைகளை பறிப்பதாக உள்ளது. எல்லா அதிகாரங்களையும் மத்திய அரசிடம் குவியச் செய்வதாக உள்ளது. இதனால் மாநில அரசுகள் அதிகாரம் இல்லாததாக ஆக்கப்பட்டுள்ளன. மேலும் 356-வது சட்டப்பிரிவை பயன்படுத்தி மாநில ஆட்சியை கலைக்க முடியும் என்ற அச்சுறுத்தலை நீடிக்க செய்யும் முயற்சியாக இது உள்ளது.
வாட் வரி பிரச்சினை
மாநில அரசுகளுக்கு வருவாய் தருவது வாட் வரிதான். அதற்கும் தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. மாநில அரசுகளின் சம்மதம் பெறாமலே வாட் வரி விதிப்புக்கு மத்திய அரசு முயல்கிறது. இது மாநில அரசுகளை வெகுவாக பாதிக்கும். தற்போதைய நிலவரப்படி, மத்திய அரசு திட்ட மிட்டுள்ள வாட் வரித் திட்டம் மாநில அரசின் நிதி ஆதாரம் மீதான தாக்கு தலாகும். எனவே இந்த வாட் வரி விதிப்பை ஏற்க முடியாது.
மருத்துவம், என்ஜினீயரிங் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு விஷயத்தில் உள்ளூர் நிலவரங்களை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. மாநில அரசுகளின் கருத்துக்களையும் கேட்கவில்லை. கல்வி துறையில் மத்திய அரசு தேவை இல்லாமல் இப்படி அடிக்கடி குறுக்கீடு செய்கிறது. பாக் ஜலசந்தியில் அடிக்கடி தமிழ்நாட்டு மீனவர்கள் சிங்களர்களால் தாக்கப்படுகிறார்கள். இதை இந்தியர்கள் மீதான தாக்குதலாக இதுவரை மத்திய அரசு பார்க்கவில்லை.
மீனவர் விவகாரத்தில் பாராமுகம்
இந்த விவகாரத்தை தமிழ்நாட்டுக்கு மட்டுமே ஏற்பட்டுள்ள ஒரு சிறு பிரச்சினை என்ற கோணத்துடன் மத்திய அரசு கையாள்வது வேதனை தருகிறது. தமிழ்நாட்டு மீனவர்களின் உயிரைப் பற்றி பேசுவதை அர்த்தமற்றதாக மத்திய அரசு கருதுவது போல் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்தை நடத்துவதால் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை என்றே அஞ்சுகிறேன்.
திட்டக்கமிஷனின் அறிக்கையில், இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் குறித்து கூறப்பட்டுள்ளது. ஆனால் அதை சமாளிக்க எந்த வழிகாட்டுதல்களும் இல்லை. 12-வது ஐந்தாண்டு திட்டத்தை வரையறுக்கும் நிலையில், 11-வது ஐந்தாண்டு திட்டத்தின் போது ஏற்பட்ட பிரச்சினைகளையும் தோல்விகளையும் ஆராய வேண்டும். உலக பொருளாதார சீர்குலைவை நாமும் சந்தித்துள்ளோம். என்றாலும் உலகளாவிய பொருளாதார சக்தி கிழக்கு நோக்கி திரும்பியுள்ளதால், இந்தியா, உலகின் பொருளாதார சக்தி மிக்க நாடாக உருவெடுக்க முடியும்.
உறுதியான பொருளாதார நிர்வாகத்தால், புதுமையான வியூகங்களால், இந்தியா உலக அளவில் சரியான இடத்தை எட்ட முடியும். 11-வது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் தமிழ்நாடு உள்பட சில மாநிலங்களில் வளர்ச்சி விகிதம் எட்டப்பட வில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டக் காலத்தில் 9 சதவீத வளர்ச்சிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் 4 ஆண்டுகளில் 8 சதவீத வளர்ச்சியே தமிழகம் பெற்றுள்ளதாக தெரிகிறது.
இந்த திட்டக்காலத்தின் முதல் 4 ஆண்டுகளில் வேளாண்மை மற்றும் உற்பத்தி துறைகளில் இலக்கு எட்டப்படவில்லை. ஆகையால் கடந்த மே மாதம் தான் பொறுப்பேற்ற எனது அரசு இந்த துறைகளுக்கு முன்னுரிமை கொடுத்து வளர்ச்சியை மேம்படுத்தும். இந்த துறைகள் மீது நாங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டி உள்ளது. 12-வது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் 10 சதவீத வளர்ச்சிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதை எட்டுவது எளிதான காரியமல்ல என்றாலும் இந்த இலக்கை எட்ட கடுமையாக முயற்சிப்போம்.
விலைவாசி
விலைவாசி உயர்வு காரணமாக கொள்கை திட்டங்களில் தோல்வி ஏற்பட்டுள்ளது. விலைவாசி உயர்வை தடுக்க மத்திய அரசு தவறி விட்டது. இந்த நிலையில் பெட்ரோல், டீசல், மண்எண்ணை, சமையல் கேஸ் போன்றவற்றின் விலையை மத்திய அரசு அடிக்கடி உயர்த்தி மக்கள் மீது சுமையை ஏற்றி உள்ளது. உதாரணமாக 2004-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை டீசல் விலை 13 தடவை உயர்த்தப்பட்டுள்ளது. 1 லிட்டர் டீசல் ரூ. 29.30 ஆக இருந்தது. தற்போது அது ரூ. 43.86 ஆக உயர்ந்துள்ளது.
அதே போல பெட்ரோல் விலை இந்த காலத்தில் 19 தடவை உயர்த்தப்பட்டதால் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 41.25லிருந்து ரூ. 67.72ஆக உயர்ந்துள்ளது. இதே கால கட்டத்தில் சமையல் எரிவாயு விலை ரூ.249லிருந்து ரூ. 404 ஆக அதிகரித்துள்ளது. எரி பொருட்கள் விலையை இப்படி பல தடவை உயர்த்தினால் பண வீக்கத்தை எப்படி குறைக்க முடியும் என்று எதிர்பார்க்கிறீர்கள்.
ஏழைகளை பாதிக்கும் திட்டங்கள்
வளர்ச்சி திட்டங்களில் சில மாநிலங்களுக்கு வெற்றியும், சில மாநிலங்களுக்கு தோல்வியும் ஏற்பட்டது. நகரம், ஊரகப்பகுதிகளில் சமமான வளர்ச்சி ஏற்பட வேண்டும். ஆனால் மத்திய அரசிடம் இத்தகைய திட்டம் இல்லை. ஏழைகளை பாதிக்கும் வகையிலேயே திட்டங்கள் அமைவது வேதனை தருகிறது.
மத்திய அரசு 13 திட்டங்களை அறிவித்தது. ஆனால் இந்த திட்டங்கள் அடிதட்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வில்லை. தமிழக அரசு ராஜீவ்காந்தி கிராமன் வித்யூகரன் யோஜன மற்றும் பிரதான் மந்திரி கிராமன் சதக் யோஜன திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. எனவே 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் இதற்கான நிதி அளிக்கப்பட வேண்டும். இல்லையெனில் இந்த திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும். 2-வதாக இந்த சமூக திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் மாநில அரசுகளுக்கு சில சிக்கல்கள் உள்ளன.
ராஷ்டீரிய சுவ்திய பீமா யோஜன மற்றும் இந்திராகாந்தி மெட்டார்நிட்டி பெனிபிட் புரோக்கிராம் போன்ற திட்டங்கள் சிறு பகுதியைதான் சென்றடைகிறது. மத்திய அரசு தேசிய திட்டங்கள் மூலம் உதவி செய்ய நினைத்தால், அது பற்றி சீராக தெளிவுபடுத்த வேண்டும். உதாரணத்துக்கு எனது அரசு சமீபத்தில் மாதாந்திர சமூக பாதுகாப்பு ஓய்வூதியத்தை ரூ. 500-ல் இருந்து ரூ. 1000 ஆக உயர்த்தியது.
மத்திய அரசும் இதற்கு ஏற்ப உயர்த்த வேண்டும். ஆனால் மத்திய அரசு தேசிய சமூக உதவி திட்டத்தின்கீழ் பல ஆண்டுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட ரூ. 200யே இப்போதும் கொடுத்து வருகிறது. மத்திய அரசு பல திட்டங்களில் நேரடியாக நிதியை வங்கிகள் மூலம் கொடுக்கிறது. இது மாநில அரசுகளை ஓரம் கட்டும் செயலாகும்.
மத்திய அரசு இப்படி நேரிடையாக நிதி வழங்குவதால் மாநில அரசுகளுக்கு பல்வேறு நிர்வாக சுமை ஏற்படுகிறது. எனவே மத்திய அரசு இத்தகைய நிதியை மாநில அரசுகளுக்கு கொடுப்பது தான் சரியான அணுகு முறையாக இருக்கும். மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்ட திட்டப்படி நிதியை பயன்படுத்துவதில் திருத்தம் செய்ய வேண்டும். இந்திரா அவாஸ் யோஜனா திட்டத்தின்படி கொடுக்கப்படும் 207 சதுர அடி போதுமானது அல்ல. தமிழ்நாட்டில் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 350 சதுர அடியில் ரூ. 1.80 லட்சம் செலவில் வீடு கட்டும் திட்டத்தை அமல்படுத்தியுள்ளோம்.
இந்திரா அபாஸ் யோஜனா திட்டத்தின்படி தமிழக அரசு ரூ. 1 லட்சம் வீடு கட்ட கொடுக்கிறது. இதில் தமிழக அரசு பங்கு ரூ. 66,250. மத்திய அரசு ரூ. 33,750 மட்டுமே நிதி கொடுக்கிறது. இந்த நிதியை அதிகரிக்க வேண்டும். ஏழை விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயிகளுக்கு உதவவில்லை
விவசாயிகளுக்கு உதவும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறதா என்பதில் எனக்கு சந்தேகமாக உள்ளது. மத்திய அரசின் கொள்கைகள் காரணமாக விவசாய பொருட்கள், குறிப்பாக டி.ஏ.பி., பொட்டாஷ் மற்றும் யூரியா உரங்களின் விலைகள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து விட்டன. டிஏபி, பொட்டாஷ் உரங்களை போதுமான அளவுக்கு கொடுத்து உதவுங்கள் என்று நாங்கள் பல தடவை கேட்டும், மத்திய அரசு கண்டு கொள்ளாமல் உள்ளது.
பயிர் உற்பத்திக்கு இந்த உரம் முக்கியமானதாகும். இதே நிலை நீடித்தால் 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் எப்படி குறிப்பிட்ட இலக்கை எட்டி முடியும்? அடுத்த 5 ஆண்டுகளில் விவசாயத்தின் வருவாயை இரட்டிப்பாக உயர்த்த உறுதி பூண்டுள்ளோம். இதற்காக நவீன கருவிகள் வழங்குவதுடன் 60 ஆயிரம் குடும்பங்களுக்கு கறவை மாடுகளும், 4 ஆடுகளும் இலவசமாக கொடுத்து வருகிறோம். இது தவிர ஊரகப்பகுதிகளில் வலுவான பொருளாதார கட்டமைப்பை உருவாக்க நாங்கள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளோம்.
இந்த நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு உதவ வேண்டும். வேளாண்துறையை மேம்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு உண்மையிலேயே விரும்பினால், மாநில திட்டங்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும். தேசிய வேளாண் மேம்பாட்டு திட்டத்தின்படி ஒதுக்கப்படும் நிதி மாநில அரசுகளை பாதிக்க செய்வதாக உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பெரிய நீர்பாசன திட்டங்களுக்கு குறைந்த நிதியே கிடைக்கிறது.
தமிழக நீர்பாசன திட்டங்கள் பருவ மழைகளையே நம்பி உள்ளன. எனவே தமிழக அரசு நதிநீர் இணைப்பை தனது நிதி ஆதாரத்தை கொண்டே செயல்படுத்தி வருகிறது. மீன்பிடி தொழிலுக்கும் சரியான முறையில் கவனம் செலுத்தப்படவில்லை என்பது மத்திய அரசின் திட்டங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.
தமிழக கடலோர பகுதி மீனவர்களுக்கு மீன்பிடி தொழில் வாழ்வாதார போராட்டமாக உள்ளது. தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிங்களர்களால் தாக்கப்படுகிறார்கள். இந்த விவகாரத்தில் மத்திய அரசு கண்டும் கானாமல் இருப்பது எங்களுக்கு மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எதிர் காலத்திலாவது மத்திய அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் மிகக் கடுமையான மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மத்திய மின் உற்பத்தி நிலையங்கள் நிர்ணயிக்கப்பட்ட மின் உற்பத்தியை செய்வதில்லை. இதை மத்திய அரசு சரி செய்ய முன்வரவில்லை. இதே நிலை நீடித்தால் நாங்கள் எப்படி தொழில் துறையில் சாதிக்க முடியும்? எனவே எதிர்காலத்திலாவது மத்திய அரசு இந்த விஷயத்தில் உதவ வேண்டும். சூரிய மின் உற்பத்திக்கு மத்திய அரசு உதவ வேண்டும். அது போல போக்குவரத்து துறை மேம்படுத்தப்பட வேண்டும்.
துறைமுக உள் கட்டமைப்பும் வேதனை தரும் நிலையிலேயே உள்ளது. நகர்ப்பகுதிகள் அதிகரிப்பதால் அதற்கு ஏற்ப கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டியது உள்ளது. மோட்டார் வாகன உற்பத்தி துறையில் தமிழகம் வலுவாக உள்ளது. தொழில் வளர்ச்சியில் தமிழ்நாட்டில் சுற்றுச் சூழல் பாதிக்கிறது.
தமிழ்நாட்டில் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு இலவச லேப்-டாப் கொடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு மத்திய அரசு உதவ வேண்டும். தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு மத்திய அரசு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மாநில அரசுகள் விதிக்கும் கோரிக்கைகளை மத்திய அரசு கண்டு கொள்வதே இல்லை. நாங்கள் பல தடவை மண்எண்ணை கேட்டும் தரப்படவில்லை. மாநில அரசுகளை பல வீனப்படுத்தும் செயல்களில் மத்திய அரசு ஈடுபடுகிறது. மேலும் பொதுப் பிரச்சினைகளை மாநில அரசுகள் எதிர்கொள்ள விட்டு விடுகிறது. இந்த நிலை மாறும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது பேச்சு குறிப்பில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications