'இது எனக்குப் பழக்கம்தான்...' - மெகா தோல்வியைச் சமாளிக்கும் விஜயகாந்த்

சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து களமிறங்கிய தேமுதிக, 29 இடங்களில் வென்று எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பிடித்தது. உடனே, தேமுதிக ஆதரவால்தான் அதிமுகவே தனிப்பெரும் மெஜாரிட்டி பெற்றதாக தேமுதிகவினர், குறிப்பாக விஜயகாந்தும் அவர் மனைவி பிரேமலதாவும் பேச ஆரம்பித்துவிட்டனர்.
சமயத்தில் ஜெயலலிதாவுக்கே அறிவுரை கூறவும் இவர்கள் தவறவில்லை. இதில் கடுப்பான முதல்வர், இந்த அதிகப்பிரசங்கித்தனமெல்லாம் என்கிட்ட வேண்டாம் என்று சட்டமன்றத்திலேயே மூக்குடைத்தார்.
தேமுதிகவுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று திட்டமிட்டு உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணியிலிருந்து கழட்டிவிட்டார் ஜெயலலிதா. எந்தக் கட்சியும் வேண்டாம் என்று கூறிவிட்டு, தன்னந்தனியாக அனைத்து இடங்களிலும் அதிமுக வேட்பாளர்கள் நின்றனர்.
கூட்டணியில் இடம் கிடைக்காத அவமானம் மற்றும் ஆத்திரத்தில், சட்டமன்றத் தேர்தல் முடிந்த 5 மாதத்தில், ஜெயலலிதாவை திட்ட ஆரம்பித்துவிட்டனர் விஜயகாந்த்தும் அவர் மனைவி பிரேமலதாவும். பண்ருட்டி அடக்கி வாசிக்க ஆரம்பித்துவிட்டார்.
மார்க்சிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட விஜயகாந்தின் தேமுதிக படுதோல்வியைத் தழுவியது. சில இடங்களில் மூன்றாவதாகவும், சில இடங்களில் நான்கு ஐந்தாவது இடத்துக்கும் தள்ளப்பட்டது.
இந்தத் தோல்வியை சமாளிக்கும் விதத்தில் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
அதில், "தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். நான் சென்ற ஒவ்வொரு இடத்திலும் பல்லாயிரக்கணக்கான மக்களை சந்தித்து எனது கருத்துக்களை எடுத்துச்சொல்லும் வாய்ப்பினை பெற்றேன்.
இதன் மூலம் தமிழ்நாட்டில் தே.மு.தி.க. ஒரு மக்கள் இயக்கமாக உருவெடுத்து வருகிறது என்பதும், அதனுடைய சின்னமான முரசு சின்னம் தமிழ் நாட்டில் மூலை, முடுக்குகளில் எல்லாம் ஒலிக்க ஆரம்பித்து விட்டது என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.
இந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் ஓயாது உழைத்த கழகக் கண்மணிகளுக்கும், ஆதரவாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் எனது இதயமார்ந்த பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
பொதுவாக ஆளும் கட்சி உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் வெற்றி பெறுவது வாடிக்கை. அரசின் நலத் திட்டங்களுக்கும், உள்ளாட்சி மன்றங்களுக்கு அளிக்கின்ற நிதியுதவியும் அப்பொழுது தான் வந்து சேரும் என்று மக்கள் எதிர்பார்ப்பதில் நியாயம் உண்டு. அதுவும் இந்த ஆட்சிப்பொறுப்பேற்று 5 மாதங்கள் கூட ஆக வில்லை. இந்தச் சூழ்நிலையில் இந்த ஆட்சியின் மீது உள்ளாட்சி மன்றத்தேர்தலில் வாக்காளர்கள் நம்பிக்கை வைப்பதும், அரசின் நலத்திட்டங்கள் தங்களுக்கு வந்து சேரும் என்று எதிர்பார்ப்பதும் இயற்கைதான்.
ஆகவே, இந்தத் தேர்தல் முடிவுகளில் எந்த வியப்பும் இல்லை. தமிழ்நாட்டு அரசியலில் தே.மு.தி.க. தனக்கென ஒரு அரசியல் பாதையை வகுத்துக் கொண்டுள்ளது என்பதும், தே.மு.தி.க. துவங்கப்பட்ட நாளில் இருந்து கடந்த சட்டமன்றத் தேர்தல்களைத் தவிர, பல தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டே பழக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே.
தமிழ்நாட்டு மக்களிடையே அங்கீகாரம் பெற்ற அரசியல் சக்தியாக வளர்ந்து வருகிறது என்பதும், இன்றைய இளைஞர்களின் மாபெரும் இயக்கமாக மலர்ந்து வருகிறது என்பதும் வரலாறாகும். விவசாயி தனது விளை நிலத்தில் பயிரிடுகிறபொழுது ஒரு மகசூல் பொய்த்துப் போகிறது என்பதாலேயே, விளைநிலமும் கெட்டு விடுவதில்லை. விவசாயியும் நம்பிக்கையை இழந்து விடுவதில்லை. அடுத்த மகசூலுக்கு அவர் தயாராவது இயற்கையே.
அதுபோல் தே.மு.தி.க. தமிழ்நாட்டு மக்களுக்காக, அதுவும் குறிப்பாக ஏழை, நடுத்தர மக்களுக்காக தொடர்ந்து தொண்டாற்ற தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். பண பலம், படை பலம், ஆசாபாசங்களுக்கு ஆட்படுதல் போன்றவற்றையெல்லாம் மீறி, தே.மு.தி.க. அணியினருக்கு வாக்களித்த வாக்காள பெருமக்களுக்கு எனது இதய மார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications