தேர்தல் தகராறு: மதிமுக கவுன்சிலரை வெட்டிய அதிமுக கவுன்சிலர் உள்பட 3 பேர் கைது
கோவில்பட்டி: தேர்தல் தகராறில் கோவில்பட்டி நகராட்சி 20வது வார்டு மதி்முக கவுன்சிலர் தேவேந்திரனை அதிமுக கவுன்சிலர் மகேஸ்வரன் மற்றும் அவரது நண்பர் சேர்ந்து அரிவாளால் வெட்டினர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி 20வது வார்டு மதி்முக கவுன்சிலர் தேவேந்திரன். 22வது வார்டு அதிமுக கவுன்சிலர் மகேஸ்வரன். இவர்கள் இருவரும் நேற்று கோவில்பட்டி மாதாங்கோவில் ரோட்டில் தங்களது ஆதரவாளர்களுடன் துணை தலைவர் தேர்தல் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. மகேஸ்வரனும், அவரது நண்பர் விஷ்ணு சங்கரும் சேர்ந்து தேவேந்திரனை அரிவாளால் சரமாரியாகத் தாக்கினர். இதில் படுகாயமைடந்த தேவேந்திரன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதையடுத்து தேவேந்திரன் ஆதரவாளர்கள் விஷ்ணு சங்கர் வீட்டுக்கு சென்று அவரது தாய் தனலெட்சுமியிடம் கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால்
மனமுடைந்த அவர் விஷம் குடித்தார். அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். தேவேந்திரன் தரப்பை சேர்ந்த சிவகுமார், முருகன், குருசாமி ஆகியோர் மகேஸ்வரன் மற்றும் விஷ்ணு சங்கரை கைது செய்யக் கோரி மருத்துவமனை முன்பு சாலை மறியல் நடத்தினர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து அவர்களை அப்புறப்படுத்தினர். தேவேந்திரன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விஷ்ணு சங்கர், மகேஸ்வரன் மற்றும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். தனலெட்சுமியை தற்கொலைக்கு துண்டியதாக தேவேந்திரன் ஆதரவாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications