விமானத்தில் பட்டாசுகளை கொண்டு செல்ல முயன்ற பயணிகளுக்கு அதிகாரிகள் எச்சரிப்பு
சென்னை: விமானத்தில் பட்டாசுகளை எடுத்து செல்ல முயன்ற பயணிகளை விமான நிலைய அதிகாரிகள் எச்சரித்து அனுப்பினர்.
விமானத்தில் வெடிப் பொருட்கள் மற்றும் எளிதில் தீப்பற்றி எரியக் கூடிய பொருட்களை கொண்டு செல்ல கூடாது. இந்த நிலையில் வெளிநாட்டு பயணிகள் சிலர் பட்டாசுகளை விமானத்தில் கொண்டு செல்ல முயன்ற போது, அதிகாரிகளிடம் சிக்கினர்.
சென்னை, மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு கோலாலம்பூர் புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர் அப்போது மதுரையை சேர்ந்த யுவராணி மற்றும் மலேசியாவை சேர்ந்த 3 பேர் சூட்கேசில் பட்டாசுகளை வைத்து இருந்தனர். அவர்களை எச்சரித்த அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்ட பட்டாசுகளை, அவர்களை வழியனுப்ப வந்த உறவினர்களிடம் கொடுத்து அனுப்பினர்.
அதேபோல், இரவு 11.30 மணிக்கு சிங்கப்பூர் செல்லும் டைகர் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பட்டுக்கோட்டையை சேர்ந்த டாக்டர் செந்தில்குமார்(45) என்பவர் சூட்கேசில் பட்டாசுகளை வைத்திருந்தார். அதையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து, அவரை எச்சரித்தனர். நள்ளிரவு 12 மணிக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் சோதனை நடத்தி, சிங்கப்பூரை சேர்ந்த ராஜாமணி ரங்கசாமி(37) என்பவரிடம் இருந்து பட்டாசுகளை அதிகாரிகள் கைப்பற்றினர்.
அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட பட்டாசுகளின் மொத்த மதிப்பு 50 ஆயிரம் ரூபாய் ஆகும். சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளில் பட்டாசு விலை அதிகம் என்பதால், சென்னையில் இருந்து வாங்கி செல்வதாக அதிகாரிகளிடம் பிடிப்பட்டவர்கள் தெரிவித்தனர். பட்டாசுகளை விமானத்தில் கொண்டு செல்ல தகுந்த பாதுகாப்புடன், புக்கிங் செய்து எடுத்து செல்ல வேண்டும். இல்லாவிட்டால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது, என அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications