இன்றைக்குள் ரூ.9.5 லட்சம் வரி பாக்கியை செலுத்துவாரா கேஜ்ரிவால்?

அன்னா ஹஸாரேவின் குழுவின் முக்கிய உறுப்பினரான அர்விந்த் கேஜ்ரிவால் ஒரு முன்னாள் இந்திய வருவாய்த் துறை அதிகாரி. கடந்த 2006ம் ஆண்டு அவர் அரசு பணியை ராஜினாமா செய்தார். ஆனால் அவரது ராஜினாமா இன்னும் ஏற்றுக்கொள்ளப்படாமல் நிலுவையில் உள்ளது. ராஜினாமா செய்த கேஜ்ரிவால் அரசு ஒப்பந்தத்தை மீறியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அவர் பணியில் இருக்கையில் கடந்த 2000ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2002ம் ஆண்டு வரை மேல்படிப்பு படிக்க விடுப்பில் சென்றார். அப்போது அவர் செலுத்தாத வரி பாக்கி ரூ. 9.5 லட்சத்தை அக்டோபர் மாதம் 27ம் தேதிக்குள்(இன்று) செலுத்துமாறு கூறி வருமானவரித்துறை கேஜ்ரிவாலுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி நோட்டீஸ் அனுப்பியது. அந்த தொகையை செலுத்த இன்று தான் கடைசி நாள்.
அந்த பாக்கியை செலுத்தினால் தான் கேஜ்ரிவாலின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கேஜ்ரிவால் கூறியதாவது,
அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்களின் வற்புறுத்தலால் தான் வருமானவரித்துறை எனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது அரசியல் நோக்கத்தோடு செய்யப்பட்டுள்ளது. நான் ஒப்பந்தத்தில் உள்ளவாறு 3 ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு தான் கடந்த 2006ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ராஜினாமா செய்தேன். என் மீது வேண்டும் என்றே குற்றம்சாட்டுகின்றனர்.
என் வங்கி கணக்கில் ரூ. 20 முதல் 25,000 ரொக்கம் மட்டுமே உள்ளது என்று நான் அவர்களுக்கு தெரிவித்துவிட்டேன். நான் வாங்கிய விருதுப் பணத்தில் பெரும் பகுதியை நன்கொடை அளித்துவிட்டேன் என்று அவர்களிடம் கூறினேன். கடந்த 4 ஆண்டுகளாக பதிலே தெரிவிக்காமல் இருந்த அவர்களிடம் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி கடிதம் வந்தது என்றார்.


Click it and Unblock the Notifications
