கூடங்குளம் போராட்டத்தை மத்திய அரசு கொச்சைப்படுத்துகிறது! - வைகோ

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் கட்டப்பட்டு வரும் அணு மின்நிலையத்திற்கு எதிராக மீனவ கிராம மக்களும், சமூக ஆர்வலர்களும் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அணுமின் நிலையத்தை நிரந்தரமாக மூடக் கோரி கடந்த மாதம் மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததை அடுத்து போராட்டக்குழுவினர் இடிந்தகரையில் மீண்டும் அக்டோபர் 18 ம் தேதி முதல் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடலில் கடிதம் அனுப்புதல்
பள்ளி மாணவர்கள் கடிதம் எழுதி மூடப்பட்ட பாட்டில்களில் வைத்து கடல் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பிவைத்தனர். பச்சிளம் குழந்தைகளை தொட்டில் கட்டி நூதன போராட்டத்திலும் அணு உலை எதிர்ப்பாளர்கள் போராட்டம் நடத்தினர்.
வைகோ பங்கேற்பு
அணு உலை எதிர்ப்பாளர்கள் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப்போராட்டம் 19 வது நாளை எட்டியுள்ளது. அணு மின் நிலையத்திற்கு எதிராக இடிந்தகரையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது பேசிய அவர், போராட்டக்குழுவினரை மத்திய அரசு கொச்சைப்படுத்துவதாக குற்றம் சாட்டினார். போராட்டக்குழுவினரும், பாதிரியார்களும் அந்நிய சக்திகளிடம் பணத்தை பெற்றுக்கொண்டு போராட்டம் நடத்துவதாக கூறுவது கண்டிக்கத்தக்கது என்றும் வைகோ தெரிவித்தார். கூடங்குளம் அணுமின்நிலைய விவகாரத்தில் மாநில அரசு இரட்டை வேடம் போடுவதாகவும் வைகோ புகார் கூறினார்.
மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் அணு உலையை நிரந்தரமாக மூடவேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தினார். வைகோ உடன் நெல்லை, குமரி மாவட்ட மதிமுக தொண்டர்களும் பங்கேற்றுள்ளனர். அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் நெல்லை மாவட்டத்தைச்சேர்ந்த மீனவர்களும் பங்கேற்றுள்ளனர். தங்களின் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச்செல்லவில்லை.
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம்
இதனிடையே அணுமின்நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அங்குள்ள அதிகாரிகளுடன் முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பேச்சுவார்த்தை நடத்த கூடங்குளம் வர உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்த பேச்சுவார்த்தைக்குப்பின்னர் போராட்டக்குழுவினருடன் டாக்டர் அப்துல்கலாம் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications