சேலத்தில் கணவன் சிறையில் அடைப்பு: மனைவி மகளுடன் தற்கொலை
சேலம்: சேலத்தில் கணவன் சிறையில் அடைக்கப்பட்ட சோகத்தில் மனைவி, தனது மகளுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த பூசாரிப்பட்டியைச் சேர்ந்தவர் ராமன்(65). ஜோதிடர். அவருக்கு கோகிலா(55) என்ற மனைவியும், கீதா(32) என்ற மகளும் இருந்தனர். கீதா அவரது கணவரை பிரிந்து மகன் நாஞ்சில் வளவன்(8) உடன் தந்தை ராமன் வீட்டில் வசித்து வந்தார்.
அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த நாஞ்சில்வளவன், கடந்த 2008ம் ஆண்டு பள்ளி அருகே இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டான். இது குறித்து போலீசார் தகுந்த விசாரணை நடத்தவில்லை என்று ராமன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ராமனின் கோரிக்கையை ஏற்று நாஞ்சில்வளவன் இறப்பு குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நாஞ்சில்வளவன் படித்த பள்ளி முதல்வர் அசோகன்(50) பைக்கில் சென்றபோது வழி மறித்த ராமன் அவரிடம் தகராறு செய்துள்ளார். ஆத்திரத்தில் அசோகனை ராமன் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் தலையில் காயமடைந்த அசோகன் அளித்த புகாரின் பேரில் ராமன் கைது செய்யப்பட்டார்.
இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த கோகிலா, கீதா ஆகியோர் வீட்டு சமையலறையில் உள்ள கேஸ் சிலிண்டரை திறந்துவிட்டு தீ வைத்தனர். அதில் ஏற்பட்ட தீவிபத்தில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருதி இறந்தனர். இது குறித்து தகவல் அறிந்த தீவட்டிபட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு பாஸ்கரன் உத்தரவின்பேரில் துணை கண்காணிப்பாளர் முத்துக் கருப்பன், இன்ஸ்பெக்டர் பாஸ்கர்பாபு ஆகியோர் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமனின் சகோதரர் தனபால் கொடுத்த புகாரின் பேரில் அசோகனை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications