எனது ரத யாத்திரை முடிந்தது, ஊழலுக்கு எதிரான போர் தொடர்கிறது-அத்வானி

கருப்புப் பண ஒழிப்பை வலியுறுத்தி நாடு தழுவிய ரதயாத்திரையை பீகாரில் தொடங்கினார் அத்வானி. தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள் வழியாக தொடர்ந்த இந்த யாத்திரை இன்று டெல்லியில் முடிவுக்கு வந்தது.
இதையொட்டி ராம்லீலா மைதானத்தில் பிரமாண்ட பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் அத்வானி பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,ஊழலையும், கருப்புப் பணத்தையும் எடுக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுக்க ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தவறி விட்டது. வலுவான லோக்கபால் சட்டத்தின் மூலம் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும்.
நாடு கண்டஅரசுகளிலேயே 2வது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான் மிகவும் மோசமானது, ஊழல் நிறைந்தது. இன்று நாட்டில் ஊழல் தலைவிரித்தாடுகிறது என்றால் அதற்கு இந்த அரசுதான் காரணம். இதுதான் இதுவரை இருந்த அரசுகளிலேயே மிக மிக மோசமானது.
ஊழலை ஒழிப்பதில் அரசியல் துணிச்சல் தேவை. அது தற்போதைய அரசிடம் இல்லை.
எனது ரத யாத்திரை முடிவடைந்திருக்கலாம். ஆனால், ஊழலுக்கு எதிரான போராட்டம் ஓயாது, அந்தப் போர் தொடரும்.
உடனடியாக இந்த அரசு பதவி விலக வேண்டும். ஆனால் இந்த அரசு அதுவாக போகாது. நாட்டுமக்கள் விழித்தெழுந்தால்தான் அது நடக்கும்.
நாட்டின் அரசியல் வானைச் சூழ்ந்துள்ள பனிமூட்டம், மக்கள் விழித்தெழும்போதுதான் விலகும் என்றார் அத்வானி.
பாஜக தலைவர்நிதின் கத்காரி, மூத்த தலைவர்களான சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி உள்ளிட்ட தலைவர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications