ரூ.82 கோடியில் 50 நவீன கிடங்குகள்: ஜெ. உத்தரவு

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான சிறு மற்றும் குறு விவசாயிகள் பயிர்க் கடனை திரும்பிச் செலுத்த வேண்டும் என்ற எண்ணத்திலும், பயிர்களை நீண்ட நாட்கள் பாதுகாப்பாக வைத்திருக்க முடியாது என்பதாலும், அறுவடை முடிந்தவுடன் கிடைத்த விலைக்கு தங்கள் விளை பொருட்களை விற்றுவிடுகின்றனர். இதன் காரணமாக, தாங்கள் விளைவித்த பயிர்களுக்கு நல்ல விலை கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.
விலை விழ்ச்சியின் போது பொருட்களை பாதுகாத்து, பின்னர் விலை ஏற்றத்தின்போது விற்பனை செய்வது விவசாயிகளின் வருவாயை பெருக்க உதவும் என்பதையும், அறுவடைக் காலங்களில் உற்பத்தி அதிகரிப்பால் விலை வீழ்ச்சியும், தேவை அதிகரிக்கும்போது, உற்பத்தி இல்லாததால் விலை ஏற்றமும் ஏற்படுவது தடுக்கப்படும் என்பதையும், கருத்தில் கொண்டு, எடைபோடும் இயந்திரங்கள், எடைமேடைகள், ஈரப்பதமானி போன்ற வசதிகளுடன் கூடிய நவீன முறையிலான சேமிப்புக் கிடங்குகளை கூடுதலாக உருவாக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
50 நவீன கிடங்குகள்
இதன்படி, லாரி நிறுத்தும் வசதியுடன் கூடிய 10,000 டன் கொள்ளளவில், 25 கோடி ரூபாய் செலவில், ஈரோடு விற்பனைக்குழு, கருமண்டி செல்லிப்பாளையம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்; மதுரை விற்பனைக்குழு, மதுரை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்; தஞ்சாவூர் விற்பனைக்குழு, பூதலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்; கடலூர் விற்பனைக் குழு, விருத்தாச்சலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்; விழுப்புரம் விற்பனைக் குழு, விக்கிரவாண்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் ஆகிய இடங்களில் 5 கிடங்குகள் அமைக்கப்படும்.
லாரி நிறுத்தும் வசதியுடன் கூடிய 5000 டன் கொள்ளவில் 20 கோடி ரூபாய் செலவில் 8 கிடங்குகள் ஏற்படுத்தப்படும். மேலும் 37 கோடி ரூபாய் செலவில்,2000 டன் கொள்ளவில், காஞ்சிபுரம் விற்பனைக் குழு, மதுராந்தகம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்; கடலூர் விற்பனைக் குழு, கடலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் உள்ளிட்ட இடங்களில் 37 கிடங்குகளும், ஆக மொத்தம் 82 கோடி ரூபாய் செலவில், நவீன வசதிகளுடன் கூடிய 50 கிடங்குகள் புதியதாக அமைக்கப்பட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம் விவசாயிகள் தாங்கள் பயிரிடும் பொருட்களை நல்ல முறையில் பாதுகாத்து, அவற்றை நல்ல விலைக்கு விற்பனை செய்ய வழி ஏற்படும். விவசாயிகளின் பொருளாதார நிலையில் நல்ல மாற்றம் ஏற்பட்டு அவர்கள் கடன் சுமையிலிருந்து முற்றிலுமாக விடுபடவும் ஏதுவாகும் என்று அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications