குமரியில் கடல் சீற்றம்- ரூ.1 கோடி மதிப்புள்ள 500 படகுகள் சேதம்?
நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் சூறைக்காற்று, கடல் சீற்றத்தால் மீனவ கிராமங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நேற்று இரவு முதல் குமரி மாவட்டம் முழுவதும் பலத்த சூறை காற்றுடன் மழை கொட்டியது. பல இடங்களில் மரங்கள் முறிந்து மின் கம்பங்கள் சாய்ந்தன. கடல் சீற்றத்தின் காரணமாக பல இடங்களில் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளை அலைகள் இழுத்துச் சென்றன.
நாகர்கோவில் அருகே பள்ளம்பாறை கிராமத்தில் இருந்து மீனவர்கள் நாட்டு படகு, பைபர் படகுகளில் மீன்பிடிக்க கிளம்பிக் கொண்டிருந்தனர். அப்போது கடலில் ராட்சத அலைகள் எழுந்தன. கடலில் நங்கூரம் அமைத்து விடப்பட்டிருந்த படகுகளை தூக்கி எறிந்தன. இதனால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதில் 15க்கும் மேற்பட்ட படகுகள் முற்றிலும் சேதமடைந்தன. 200க்கும் மேற்பட்டபடகுகள் தூக்கி எறியப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர். வீடுகளின் கூரைகளும் காற்றில் தூக்கி எறியப்பட்டதாக தெரிவித்தனர்.
பள்ளம்பாறை பகுதியைச் சேர்ந்த ஜான் பீட்டர், ஆண்டனி, ஜோசப் ஆகியோரின் படகுகளை நடுக்கடலுக்குள் அலைகள் இழுத்துச் சென்றன. படகுகளை மீட்க மீனவர்கள் போராடினர். கடலுக்கு கிளம்பும் முன் இச்சம்பவம் நடந்ததால் மீனவர்கள் உயிர் தப்பினர். நடுக்கடலில் படகுகளை மீட்க சென்ற மீனவர்கள் அலைகளில் சிக்கினர். பின் அவர்கள் போராடி மீட்கப்பட்டனர். தகவல் அறிந்ததும் தாசில்தார் புரூஸ், மீன்வளத்துறை உதவி இயக்குனர் ரூபர்ட் ஜோதி உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு வந்து மீனவர்களிடம் விசாரித்தனர்.
இது குறித்து கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி குழு இயக்குனர் கில்டன் கூறுகையில், சூறைக்காற்றால் சுமார் 500 படகுகள் வரை சேதமடைந்திருக்கலாம், மொத்த மதிப்பு ரூ.1 கோடி வரை இருக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications