பாபர் மசூதி தினம்- தமிழகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு-ரயில்களில் பார்சல் அனுப்ப தடை
சென்னை: பாபர் மசூதி இடிப்பு நினைவுதினத்தையொட்டி தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில்களில் பார்சல்கள் அனுப்ப டிசம்பர் 6ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் நினைவு தினம் டிசம்பர்6ம் தேதி வருகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பும், கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்திலும் விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள், மக்கள் பெருமளவில் கூடும் பகுதிகளில் பாதுகாப்பும், கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ரயில்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ரயில் நிலைய நுழைவாயில்களில் மெட்டர் டிடெக்டர் கருவி மூலம் பயணிகளைச் சோதனையிடுகின்றனர்.
சென்னை எழும்பூர் மற்றும் சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து செல்லும் ரயில்களில் 3 நாட்களுக்கு பார்சல்கள் அனுப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை லாட்ஜில் சிக்கிய இருவர்
இதற்கிடையே, திருவல்லிக்கேணியில் உள்ள தர்பார் என்ற லாட்ஜில் நாச வேலையில் ஈடுபடத் திட்டமிட்டிருந்ததாக 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த விடுதியில் நடந்த சோதனையின்போது, மயிலாடுதுறை நீடூர் கிராமத்தைச் சேர்நத் சாதிக்பாட்ஷா என்ற துராப் (28), கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த மக்தூம் அலி ஆகியோர் என்று தெரியவந்தது. இருவரும் போலீஸாரிடமிருந்து தப்பி ஓட முயன்றபோது துப்பாக்கி முனையில் இருவரையும் போலீஸார் பிடித்தனர்.
அவர்களிடமிருந்து பட்டன் கத்திகள், அரிவாள்கள் ஆகியவை சிக்கின. இருவரும் டிசம்பர் 6ம் தேதி நாச வேலைகளில் ஈடுபட திட்டமிட்டிருந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இருவரையும் போலீஸார் கோர்ட்டில் நிறுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications