இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழ்ப் பெண்களை சீரழிக்கும் ராணுவம்: அறிக்கை
கொழும்பு: இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழப் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் இன்னும் நடைபெறத் தான் செய்கிறது என்று சர்வதேச மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழ்ப் பெண்களுக்கு எதிராக வன்முறைச் சம்பவங்கள் தற்போதும் நடந்து வருவதாக ப்ருசெல்ஸ் நகரைச் சேர்ந்த சர்வதேச மனித உரிமைகள் குழு ஒன்று தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் நடந்து வருவதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன. போரில் கணவர் இறந்ததாலோ அல்லது பெற்றோர் இறந்ததாலோ பல பெண்கள் தனியாக வசிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
சில பெண்களின் கணவர்களை விசாரணைக்காக ராணுவத்தினர் பிடித்து வைத்து இருப்பதால் அந்த பெண்கள் தனிமையில் வசிக்கிறார்கள். சில பெண்கள் குழந்தைகளுடன் வசிக்கிறார்கள். அப்படி வசிக்கும் பெண்கள் தாங்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படலாம் என்ற அச்சத்திலேயே வாழ்கிறார்கள். சில பெண்கள் பாலியல் பலாத்காரமும் செய்யப்படுகிறார்கள்.
தங்களுடைய கணவர் அல்லது குடும்பத்தில் உள்ள மற்ற ஆண்கள் என்ன ஆனார்கள் என்பது பற்றி விசாரிப்பதற்காக ராணுவத்தினரிடம் செல்லும் சமயங்களில் அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள். அந்த பகுதிகளில் ராணுவத்தினரை கட்டுப்படுத்தவும் முடியாது.
பாலியல் பலாத்கார கொடுமைக்கு ஆளாகும் பெண்கள் அதுபற்றி யாரிடமும் புகார் செய்வதும் இல்லை. அப்படி புகார் செய்தால் ராணுவத்தின் பிடியில் இருக்கும் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று அஞ்சுகிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டை இலங்கை ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் நிஹல் ஹபுராச்சி மறுத்துள்ளார். தமிழ்ப் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் எதுவும் நடந்ததாக தகவல் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications