முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை : ஈரோடு, கரூரில் கடையடைப்பு
ஈரோடு:முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சினையில் கேரள அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து ஈரோடு மற்றும் கரூரில் முழு அடைப்பு போராட்டத்தில் வணிகர்கள் ஈடுபட்டுள்ளனர். அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் கடையடைப்பு போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
முல்லைப்பெரியாற்றில் புதிய அணை, தமிழகத்திற்கு தண்ணீர் இதுவே கேரள அரசின் நிலைப்பாடாகும். இதற்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட மக்களும் பல்வேறு போராட்டங்களை நடத்தி எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றனர். வியாழக்கிழமையன்று முல்லைப்பெரியாறு பாசன மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. பலகோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டாலும், அணைப்பிரச்சினையில் உணர்ச்சிகரமான நிலையை வணிகர்கள் பதிவு செய்தனர்.
ஈரோடு கடையடைப்பு
இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிகர் சங்களின் கூட்டமைப்பு இன்றைய தினம் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதனையொட்டு நகரம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நீர் மட்ட அளவை 142 அடியாக உயர்த்த வேண்டும். முல்லை பெரியாறு அணைக்கு சேதம் ஏற்படாமல் தடுக்க மத்திய பாதுகாப்பு படையை மத்திய அரசு அனுப்ப வேண்டும். எச்சூழலிலும் கேரள அரசு புது அணை கட்ட அனுமதிக்கக்கூடாது என்றும் வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வை மத்திய, மாநில அரசுகளுக்கு தெரிவிக்க இந்த கடையடைப்பு நடத்தப்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.
வெறிச்சோடிய கரூர்
இதே கோரிக்கையை வலியுறுத்தி கரூர் நகரில் உள்ள வணிகர்களும் ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நகர் முழுவதும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளதால் ஜவுளி உற்பத்தி நகரமே வெறிச்சோடியுள்ளது. வணிகர்களின் போராட்டத்திற்கு ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் நகரங்களில் ஆட்டோக்களும் இயக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications