காரைக்குடியில் பிரதமருக்கு எதிராக கறுப்புக் கொடி: வைகோ- நெடுமாறன் அறிவிப்பு
சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்துக்கு நலனுக்கு எதிராகவும், கேரளாவுக்கு ஆதரவாகவும் நடந்து வரும் பிரதமர் மன்மோகன் சிங் வரும் 26ம் தேதி காரைக்குடிக்கு வரும்போது அவருக்கு எதிராகக் கறுப்புக் கொடி பேராட்டம் நடத்தப்படும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்தமிழ் நாட்டின் வருங்காலத்தை நாசமாக்கும் விதத்தில், முல்லைப் பெரியாறு அணையை உடைக்க திட்டமிட்டு செயல்படும் கேரள அரசின் போக்கைத் தடுக்காமலும், தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த வகை செய்யாமலும் தமிழகத்துக்கு துரோகம் இழைத்து வருகிற காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு, தமிழக மக்களினுடைய எதிர்ப்பைக் காட்டவும், கண்டனம் தெரிவிக்கவும், வரும் 26ம் தேதி காரைக்குடிக்கு வரும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மதிமுக சார்பில் கறுப்புக் கொடி காட்டும் அறவழிப் போராட்டம் நடைபெறும்.
இப்போராட்டத்திற்கு துணைப்பொதுச் செயலாளர்கள் மல்லை சத்யா, துரை.பாலகிருஷ்ணன், சிவகங்கை மாவட்ட செயலாளர் புலவர் செவந்தியப்பன் ஆகியோர் தலைமை ஏற்பார்கள்.
இந்த அறவழிப் போராட்டத்தில் கழகத் தோழர்களும், விவசாயப் பெருமக்களும், தமிழக உரிமைக் காப்பாளர்களும் பெருமளவில் பங்கேற்க வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.
நெடுமாறனும்...:
தமிழர் தேசிய இயக்கத் தலைவரும், முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நிறைவேற்றத் தவறியும், அணையைப் பாதுகாக்க மத்திய தொழில் பாதுகாப்புப் படையை அனுப்ப வேண்டும் என்ற தமிழகக் கோரிக்கையை ஏற்க மறுத்தும் பிரதமர் மன்மோகன் சிங் தமிழக நலன்களுக்கு எதிராகச் செயல்படுகிறார்.
கூடங்குளம் அணுமின் உலைப் பிரச்சனையில் போராட்டக் குழுவினருடன் ஒருபுறம் பேச்சு நடத்திக் கொண்டே மறுபுறம் 15 நாட்களில் அணு மின் உலை செயல்படத் தொடங்கும் ஏதேச்சதிகார முறையில் அறிவித்திருக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங்.
தமிழக மக்களின் நலன்களை சிறிதும் எண்ணிப் பாராமல் தொடர்ந்து செயல்பட்டு வரும் பிரதமர் மன்மோகன் சிங் தமிழர்களை துச்சமாக மதித்து தமிழகத்திற்கு வருவதை வன்மையாக கண்டிக்கிறேன்.
அவருக்கு எதிராக வரும் 26ம் தேதியன்று மாலை காரைக்குடியில் கறுப்புக் கொடி போராட்டம் கா.பரந்தாமன் தலைமையில் நடத்தப்படும். தோழமை அமைப்புகளுடன் இணைந்து நடைபெறவிருக்கும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு தமிழர்களின் கொதிப்புணர்வை பிரதமருக்கு தெரிவிக்க முன்வருமாறு அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
பிரதமருக்கு எதிராக தனது தலைமையில் பிரதமருக்கு எதிராக கறுப்புக் கொடி போராட்டம் நடத்தப்படும் என்று தேமுதிக தலைவர் விஜய்காந்தும் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
26ம் தேதி காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்க பிரதமர் வருவது நினைவுகூறத்தக்கது. 25ம் தேதி சென்னை வரும் அவர் அங்கும் ஒரு விழாவில் பங்கேற்கவுள்ளார். அன்றைய தினம் அவர் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கக் கூடும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications