லக்ஷர் இ தொய்பா இயக்கத்தில் பெண் தீவிரவாதிகளுக்கு பயிற்சி-தகவல்
டெல்லி: லக்ஷர் இ – தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த 21 பெண் தீவிரவாதிகளுக்கு இந்தியாவிற்குள் நாச வேலைகளை செய்ய பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவை நம்பத்தகுந்த செய்தி எனவும் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு பகுதியான முசாபராபாத் நகரில் பெண்களுக்கு தீவிரவாத பயிற்சி அளித்து வருவதாகவும் ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பெண் தீவிரவாத அமைப்பு
இந்த பெண் தீவிரவாத குழுவிற்கு துஹ்தரீன்-இ-தொய்பா என்று பெயரிடப்பட்டு உள்ளது. இவர்கள் ஊரி பகுதி வழியாக காஷ்மீருக்குள் ஊடுருவியோ, வெளி நாடுகள் வழியாக விமானம் மூலமோ இந்தியாவுக்குள் ஊடுருவி நாச வேலைகளில் ஈடுபட அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என்று ராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவனும், மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவனுமான ஜகியுர் ரெஹ்மான் லக்வியின் மூளையில் உதித்தது இந்த பெண் தீவிரவாதிகள் திட்டம் என்று கூறப்படுகிறது.
காஷ்மீரில் செயல்பட்டு வந்த லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாத முக்கிய பிரமுகர்கள் பலரை ராணுவம் அழித்து விட்டது. இதனால் பெரும் பின்னடைவை சந்தித்த அந்த இயக்கம், காஷ்மீர் மாநிலத்திலேயே புல்வாமா உள்ளிட்ட பல பகுதிகளில் இளைஞர்களை தங்கள் இயக்கத்தில் சேர்த்து பயிற்சி அளிக்க திட்டமிட்டு, அதற்கான பணிகளை உஸ்மான் பாய் என்கிற சோட்டா ரெஹ்மான் என்பவனிடம் ஒப்படைத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications