பெண் மருத்துவர் கொலை எதிரொலி: தூத்துக்குடி இன்ஸ்பெக்டர், எஸ்ஐ நெல்லைக்கு மாற்றம்
தூத்துக்குடி: தூத்துக்குடி பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக மருத்துவருக்கு பாதுகாப்பு வழங்க மறுத்ததாக கூறி செவ்வாய்கிழமை மாலை தென்பாகம் இன்ஸ்பெக்டர் அன்னராஜ், எஸ்ஐ அரிகரன் ஆகியோர் நெல்லை மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நெல்லை சரக டிஐஜி இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
தூத்துக்குடி இஎஸ்ஐ மருத்துவமனை தலைமை டாக்டர் சேதுலட்சுமி என்பவர் நேற்று முன்தினம் இரவு 3ம் மைல் காமராஜர் நகரில் தனது கிளினிக்கில் வைத்து வாளால் வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். தூத்துக்குடி மட்டுமின்றி தமிழகத்தையே இந்த சம்பவம் உலுக்கியது. கொலையாளிகளை உடனே கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செவ்வாய்கிழமை முதல் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.
இதற்கிடையில் டாக்டர் சேதுலெட்சுமி கொலை வழக்கில் தூத்துக்குடி பாலவிநாயகர் கோவில் தெரு ஆவுடையார்புரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மகேஷ் என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். தனது மனைவி நித்யா மற்றும் குழந்தை இறந்ததால் டாக்டரை அவர் கொலை செய்தது தெரிய வந்தது. இதையொட்டு அவரது கூட்டாளிகளாக ஆவுடையார்புரத்தை சேர்ந்த நீலச்சந்திரன் மகன் ராஜா, இஸ்மாயில் மகன் அப்பாஸ், மூன்றுசெண்டை சேர்ந்த வேலுசாமி மகன் குருமுத்து ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடக்கிறது.
இந்நிலையில் டாக்டர் சேதுலட்சுமி கொலை செய்யப்படுவதற்கு முன் ஆட்டோ டிரைவர் மகேஷ் அவரை மிரட்டிய தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.
மகேஷ் மனைவி நித்யா கடந்த 30ம் தேதி இறந்தார். அன்று தனியார் மருத்துவமனையில் வைத்து மகேஷ் மற்றும் அவரது உறவினர்கள் டாக்டரை மிரட்டியுள்ளனர். இதுகுறித்து டாக்டர் சேதுலட்சுமி 31ம் தேதி தென்பாகம் போலீசை போனில் தொடர்பு கொண்டு தன்னை மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால் போலீசார் அதை பெரிதுபடுத்தவில்லை. அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் திங்கட்கிழமை இரவு சேதுலட்சுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இது தூத்துக்குடி அரசு மருத்துவமனை டாக்டர்களை கொந்தளிக்க செய்தது.
இவர்கள் தென்பாகம் போலீஸ் நிலையத்துக்கு சென்று முற்றுகையிட்டனர். போலீசாரின் அலட்சியத்தால் இந்த சம்பவம் நடந்துள்ளது. முதலிலேயே நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த கொலை நடந்திருக்காது என்று மருத்துவர்கள் முறையிட்டனர்.
காத்திருப்போர் பட்டியல்
எஸ்பி ராஜேந்திரன், நெல்லை சரக டிஐஜியிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்ததைத் தொடர்ந்து செவ்வாய்கிழமை மாலை தென்பாகம் இன்ஸ்பெக்டர் அன்னராஜ், எஸ்ஐ அரிகரன் ஆகியோரை நெல்லை மாவட்டத்திற்கு அதிரடியாக மாற்றம் செய்தார். தற்போது அவர்கள் காத்திருப்போர் பட்டியிலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆட்டோ டிரைவர் மீது மேலும் பல வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications