ஏ.கே. அந்தோணிக்கு லைப் ஜாக்கெட் பரிசளிப்பு: சிபிஐ பெண் எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்
திருவனந்தபுரம்: மத்திய அமைச்சர் ஏகே அந்தோணிக்கு லைப் ஜாக்கெட் பரிசளித்த விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பெண் எம்எல்ஏ பிஜிமோள் புதன்கிழமையன்று நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
மத்திய அமைச்சர் ஏகே அந்தோணி கடந்த வாரம் இடுக்கி மாவட்டம் தொடுபுழாவில் நடந்த ஒரு அரசு விழாவில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பீர்மேடு தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ பிஜிமோள் ஒரு லைப் ஜாக்கெட் கொண்டு வந்திருந்தார்.
நிகழ்ச்சி முடிந்து காரில் ஏறச் சென்ற அந்தோணியிடம் அந்த லைப் ஜாக்கெட்டை பிஜிமோள் கொடுக்க முயன்றார். ஆனால் அந்தோணி சிரித்துக் கொண்டே அந்த லைப் ஜாக்கெட்டை வாங்க மறுத்து விட்டார்.
பின்னர் பிஜிமோள் எம்எல்ஏ கூறுகையில், முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனமாக செயல்படுகிறது. அணை உடையும் ஆபத்தில் இருப்பதால் இடுக்கி மாவட்ட மக்கள் பீதியில் உள்ளனர். அவர்கள் லைப் ஜாக்கெட்டை கையொடு வைத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இதை மத்திய அரசுக்கு உணர்த்துவதற்காக தான் அமைச்சர் ஏகேஅந்தோணிக்கு லைப் ஜாக்கெட் கொடுக்க முயன்றேன் என்றார்.
அந்த லைப் ஜாக்கெட் வனத்துறைக்கு சொந்தமானது. பரிசோதனை செய்ய போவதாக கூறி பிஜிமோள் எம்எல்ஏ வாங்கி சென்றுள்ளார். ஆனால் வனத்துறை அனுமதி இல்லாமல் மத்திய அமைச்சருக்கு வழங்க முயன்றுள்ளார். இதுகுறித்து வனத்துறை சார்பில் பிஜிமோள் மீது குமுளி போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து குமுளி போலீசார் பிஜிமோள் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில பீர்மேடு நீதிமன்றத்தில் பிஜிமோள் புதன்கிழமை சரணடைந்தார். அவருக்கு நீதிபதி ஜமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.












Click it and Unblock the Notifications