சபரிமலை ஐயப்பன் கோவில் வருமானம்-ரூ.135 கோடியை தாண்டியது
சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை திருவிழாக்களின் மூலம், இந்த முறை சுமார் ரூ.20 கோடி வருமானம் அதிகமாக கிடைத்துள்ளது.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுத்தோறும் அதிகரித்து வருகின்றது. சபரிமலை சீசனின் போது, மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம்.
கடந்த ஆண்டு நவம்பர் 16ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. நவம்பர் 17ம் தேதி முதல் டிசம்பர் 27ம் தேதி வரை கோவில் மண்டல பூஜை நடைபெற்றது. பின்னர் டிசம்பர் 31ம் தேதி முதல் மகரவிளக்கு பூஜை தொடர்ந்து நடந்து வருகின்றது.
ஐயப்பன் கோவிலில் நடைபெறும் விழாவையொட்டி, பக்தர்கள் அதிக அளவில் சாமி தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். பக்தர்களின் மூலம் கோவிலுக்கு கடந்த 5ம் தேதி வரை மொத்தம் ரூ.135.06 கோடி வருமானம் கிடைத்துள்ளது.
இது குறித்து திருவிதாங்கூர் தேவசம்போர்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சபரிமலை கோவிலில் இந்த முறை மண்டல பூஜை திருவிழாவின் நாட்களில் மொத்தம் ரூ.119 கோடியே 57 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை திருவிழா காலத்தின் மொத்த வருமானம் ரூ.135 கோடியை தாண்டி உள்ளது. இது கடந்த ஆண்டு இதே நாட்களில் கிடைத்த வருமானத்தை விட ரூ.20 கோடியே 16 லட்சம் அதிகம் ஆகும்.
மகரவிளக்கு பூஜை திருவிழாவுக்காக கோவில் நடை திறக்கப்பட்ட பிறகு, 6 நாட்களின் வருமானமாக ரூ.15 கோடியே 45 லட்சம் கிடைத்துள்ளது. காணிக்கையாக ரூ.6 கோடியே 16 லட்சம் கிடைத்துள்ளது. அரவணை பிரசாதம் விற்பனை மூலம் ரூ.6 கோடியே 70 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. அப்பம் பிரசாதம் விற்பனை மூலம் ரூ.1 கோடியே 9 லட்சம் கிடைத்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications