அனுமின் நிலையம் மீது அமெரிக்கா தாக்குதல்? பதறிய ஈரான்! வளைகுடாவில் ஹை டென்ஷன்
தெஹ்ரான்: அமெரிக்கா - ஈரான் இடையிலான மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல்களை தீவிரப்படுத்தியதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த சூழலில், ஈரானின் முக்கிய அனுமின் நிலையம் அருகே அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது. இதற்கு ஈரானின் பதிலடியால் ஜோர்டானில் ஏவுகணை எச்சரிக்கை சைரன்கள் ஒலித்தது. இதனால் மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்துள்ளது.
அமெரிக்கா தனது வான்வழித் தாக்குதல்களை நிறுத்தியதாக அறிவித்த சில மணி நேரத்தில், ஈரானின் முக்கிய அனுமின் நிலையமான புஷெஹர் அருகே அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக புஷெஹர் மாகாண அதிகாரி எஹ்சான் ஜஹானியன் கூறுகையில், "நண்பகல் நேரத்தில் இந்த தாக்குதல் நடந்தது" என்று கூறினார்.

ஜோர்டானில் சைரன்கள் ஒலித்தன
எனினும் ஈரானில் உள்ள அனுமின் நிலையம் அருகே தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை. மேலும் இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்பட்ட நேரத்திற்கு முன்பே "ஈரான் மீது மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகள் நிறைவடைந்ததாக" அமெரிக்க ராணுவத்தின் சென்ட்காம் அறிவித்திருந்தது.
இதற்கு பதிலடியாக உடனே ஈரானும் ஏவுகணைத் தாக்குதல்களை தீவிரப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது ஜோர்டான் தலைநகர் அம்மான் உள்ளிட்ட பல பகுதிகளில் ஏவுகணை எச்சரிக்கை சைரன்கள் ஒலித்தன. இதனால் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தக்கூடும் எனவும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
அலி கமேனி உடல் இன்று நல்லடக்கம்
இது ஒருபுறம் இருக்க அமெரிக்கா தாக்குதலில் கடந்த பிப்ரவரி மாதம் கொல்லப்பட்ட ஈரான் முன்னாள் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் உடல் இன்று அவரது சொந்த ஊரான வடகிழக்கு ஈரானின் மஷ்ஹத் (Mashhad) நகரில் உள்ள புனித இமாம் ரேசா தர்காவில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இதற்காக ஈரானில் தெஹ்ரான், கோம் உள்ளிட்ட நகரங்களில் கடந்த ஒரு வாரமாகவே இறுதி ஊர்வலங்கள் மற்றும் அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. இன்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
அமெரிக்கா தாக்குதல் அதற்கு ஈரான் பதிலடி என நிலைமை தீவிரமான நிலையில், புஷெஹர் அனுமின் நிலையம் அருகே அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு மற்றும் ஜோர்டானில் ஏவுகணை எச்சரிக்கை, அலி கமேனி உடல் நல்லடக்கம் என்ற சூழலால் ஹை டென்ஷன் நிலவி வருகிறது.
ஈரான் அமெரிக்கா தாக்குதல்
அணு ஆயுதம் தயாரிப்பதாக கூறி ஈரான் மீது கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தியது. இதில் அந்நாட்டின் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக ஈரானும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியது. சர்வதேச அளவில் எண்ணெய் போக்குவரத்துக்கு உயிர்நாடியான ஹார்முஸ் ஜலசந்தியையும் ஈரான் மூடியது.
இதனால் சர்வதேச அளவில் எண்ணெய் வினியோகம் பாதிக்கப்பட்டது. கச்சா எண்ணெய் விலையும் கடுமையாக உயர்ந்தது. கடந்த 4 மாதங்களாக நீடித்த இந்த தாக்குதல்களுக்கு ஜூன் மாதத்தில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. இதையடுத்து படிப்படியாக நிலைமை சரியான நிலையில் இறுதி ஒப்பந்தம் ஏற்பட்டு அமைதி திரும்பும் என எண்ணிய நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் சென்ற எண்ணெய் கப்பல்க மீது ஈரான் தாக்குதல் நடத்தி மீண்டும் தாக்குதல் ஏற்படும் சூழலை உருவாக்கி விட்டது.
14 பேர் பலி
தொடர்ந்து 4 எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதால் கோபமடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அமைதி ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாகவும், ஈரான் மீது இன்று இரவே தாக்குதல் நடத்துவோம் என்று கூறி ஈரானில் உள்ள 90-க்கும் மேற்பட்ட முக்கிய இடங்களில் குறி வைத்து தாக்குதலை மேற்கொண்டது. எதற்கும் அஞ்சமாட்டோம் என்ற தொனியில், அமெரிக்கா தாக்கினால் மீண்டும் ஹார்மூஸ் ஜலசந்தியை மூடுவோம் என பதிலடி கொடுத்தது ஈரான்.
அமெரிக்கா தாக்குதலில் உயிரிழந்ததாக ஈரான் அறிவித்துள்ள உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் உடல் இன்று அந்நாட்டின் புனித நகரமான மஷ்ஹத் நகரில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இதற்காக கடந்த ஒரு வாரமாக துக்க நிகழ்வுகள் அந்நாட்டில் நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்காவின் இந்த தாக்குதல் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் இந்த தாக்குதல்களில் ஈரானில் 14 பேர் பலியாகியுன்னர் என்றும் பலர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.














Click it and Unblock the Notifications