ஈரான் மீது விழுந்த குண்டு.. அடுத்த நொடி இந்தியாவின் ரூ.1,000 கோடி கனவுக்கு பின்னடைவு! அது எப்படி?
டெல்லி: அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், ஈரானில் இருக்கும் சபஹார் துறைமுகம் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானில் மற்ற இடங்களைப் போல இல்லாமல் சபஹார் மீதான தாக்குதல் என்பது இந்தியாவை நேரடியாகப் பாதிக்கக்கூடியது. இந்த சபஹார் இந்தியாவுக்கு ஏன் முக்கியம்.. இதன் பின்னணி தொடர்பாக நாம் பார்க்கலாம்!
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த மாதம் நிலைமை சீராகி தற்காலிக அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. இருப்பினும், ஒரு மாதம் கூட ஆகவில்லை அதற்குள் அந்த அமைதி ஒப்பந்தம் முறிந்துவிட்டது. இந்தச் சூழலில் தான் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே மீண்டும் போர் வெடித்துள்ளது. இரு நாடுகளும் மாறி மாறி தாக்க ஆரம்பித்துள்ளன.

சபஹார் துறைமுகம்
குறிப்பாக ஈரான் நாட்டில் பல முக்கிய பகுதிகளைக் குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. அதன்படி ஈரானின் முக்கிய துறைமுகமான சபஹார் மீதும் அமெரிக்கா தாக்குதல் நடத்தி இருக்கிறது. மற்ற இடங்களை விட சபஹார் துறைமுகம் என்பது இந்தியாவுக்கு முக்கியமானது. ஏனென்றால் இந்த சபஹார் துறைமுகத்தை இவ்வளவு பெரிய துறைமுகமாக மாற்றியதில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. பல ஆயிரம் கோடியை இந்தியா முதலீடு செய்திருந்தது.
இப்போது இந்தியா அந்த துறைமுகத்தை நேரடியாக கண்ட்ரோல் செய்யவில்லை. முதலீடும் செய்வதில்லை. ஆனாலும், இந்த தாக்குதல் இந்தியாவின் எதிர்கால திட்டங்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஏன் முக்கியம்
ஈரானின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள சபஹார் துறைமுகம், இந்தியாவுக்கு மிகவும் முக்கியமான திட்டமாக கருதப்பட்டு வந்தது. குறிப்பாக பாகிஸ்தானை தவிர்த்துவிட்டு, ஆப்கானிஸ்தான் மற்றும் இதர மத்திய ஆசிய நாடுகளுடன் நேரடி வர்த்தகம் செய்ய மாற்று வழியாக இந்த துறைமுகம் பார்க்கப்பட்டது. இதற்காக பல ஆண்டுகளாக இந்தியா இந்த திட்டத்தில் முதலீடு செய்து வந்தது. ஷாஹித் பெஹெஷ்தி முனையத்தை மேம்படுத்தும் பணிகளிலும் இந்தியா பங்கேற்றது. இதை விட முக்கியமாக இந்தியா - ஈரான் - ரஷ்யா நாடுகளை இணைக்கும் சர்வதேச போக்குவரத்து வழித்தடத்தின் முக்கிய மையமாகவும் சபஹார் துறைமுகம் கருதப்பட்டது.
இப்படி பல வழிகளில் இந்தியாவுக்கு இந்த துறைமுகம் முக்கியமானதாக இருந்தது. இந்தச் சூழலில் தான் சில ஆண்டுகளுக்கு முன்பு ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க ஆரம்பித்தது. இதனால் இந்தியா தனது அணுகுமுறையை மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது இந்தியா தனது 120 மில்லியன் டாலர் முதலீட்டை பாதுகாக்கும் வகையில் சபஹார் துறைமுகத்தில் தனது பங்குகளை தற்காலிகமாக உள்ளூர் ஈரான் நிறுவனத்திடம் ஒப்படைத்ததாக தகவல்கள் வெளியாகின.
இந்தியாவின் திட்டம்
அதாவது பொருளாதார தடைகளில் இருந்து தப்பிக்க இதுபோல உள்ளூர் நிறுவனத்திடம் தற்காலிகமாக தனது பங்குகளை ஒப்படைத்தது. அதேநேரம் எதிர்காலத்தில் நிலைமை சீரானால் மீண்டும் இதில் நுழையலாம் என்று கருதியே நிரந்தரமாக விற்காமல், தற்காலிகமாக ஒப்படைக்க மட்டும் செய்தது. இந்தச் சூழலில் தான் அமெரிக்கா அந்த துறைமுகம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்காவின் இந்த தாக்குதலால் இந்தியாவுக்கு ஏற்படும் பாதிப்பு குறைவு தான். ஏனென்றால் இந்தியா தற்போது துறைமுகத்தை நேரடியாக நிர்வகிப்பதில்லை.
இருப்பினும், இந்த தாக்குதலால் அங்கு உருவாகியுள்ள குழப்பமே இந்தியாவுக்கு பெரிய தலைவலியாக மாறியுள்ளது. ஏற்கனவே அமெரிக்க தடைகள் காரணமாக சபஹார் திட்டம் முடங்கும் ஆபத்தில் இருந்தது. தற்போது ராணுவ மோதல்களும் அதிகரித்துள்ளதால், சர்வதேச முதலீடுகள் மற்றும் வர்த்தகம் மேலும் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.
இந்தியாவை பாதிக்கும்!
சபஹார் துறைமுகம் என்பதை வெறும் மற்றொரு முதலீடாக மட்டுமே கருதிவிட முடியாது. பாகிஸ்தானை சாராமல் மத்திய ஆசிய சந்தைகளை அடைய இந்தியாவுக்கு கிடைத்த முக்கிய ரூட் இந்த சபாஹார். ஒரு பக்கம் பாகிஸ்தானில் சீனா குவாதர் துறைமுகத்தை உருவாக்கிய நிலையில், அதற்கு மாற்று சக்தியாகவும் சபஹார் பார்க்கப்பட்டது. எனவே, சபஹாரில் ஏற்படும் பாதிப்பு இந்தியாவின் நீண்ட கால திட்டத்தை பாதிக்கும். அதாவது அமெரிக்காவின் தாக்குதல் உடனடி பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும் நீண்ட கால நோக்கில் இந்தியாவுக்கு சிக்கலையே தரும்.














Click it and Unblock the Notifications