போச்சு.. மொத்தமாக முடங்கும் தமிழ்நாடு ரியல் எஸ்டேட்.. விஜய் அரசு எடுத்த முடிவால் பெரிய சிக்கல்!
சென்னை: தமிழ்நாடு முழுக்க ரியல் எஸ்டேட் துறை பெரிய அளவில் முடங்கும் அபாயம் உள்ளது. பல்வேறு கட்டுமான திட்டங்கள் போதிய கட்டுமான பொருட்கள் கிடைக்காமல் முடங்கி உள்ளன. முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு எடுத்த சில கொள்கை முடிவுகளால் ரியல் எஸ்டேட் துறை முடங்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த எட்டு வாரங்களாக நூற்றுக்கணக்கான கட்டுமானத் திட்டங்கள் முற்றிலுமாக முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் இருந்து தோண்டி எடுக்கப்படும் மண்ணைக் கொண்டு செல்வதற்குக் கடந்த சில வாரங்களாக மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் அதிகாரிகள் அனுமதி வழங்க மறுப்பதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

ரியல் எஸ்டேட் துறை பாதிப்பு
இதனால், தமிழகத்தின் ரியல் எஸ்டேட் மற்றும் உள்கட்டமைப்புத் துறை கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.
இப்பிரச்சனைக்கு உடனடி தீர்வு காணக் கோரி, சென்னை கிரெடாய் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எம். சாய் குமாருக்கு அவசரக் கடிதம் ஒன்றை இந்த குழு அனுப்பி உள்ளது.
அனுமதிக்கப்பட்ட தளங்களில் இருந்து எடுக்கப்படும் மண்ணை எவ்வித தடையுமின்றி கொண்டு செல்வதற்கு, வெளிப்படையான அவசர அனுமதி வழங்கும் முறையை அரசு உடனடியாக கொண்டு வர வேண்டும் என்று அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய இந்த திடீர் கட்டுமான முடக்கம் குறித்து கிரெடாய் கடுமையான கவலை தெரிவித்துள்ளது. மண் எடுப்பதை தாண்டி, ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட கட்டுமானத் திட்டங்களில் இருந்து எடுக்கப்படும் உபரி மண்ணைக் கொண்டு செல்வதற்கான அனுமதிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
புதிய அனுமதிகள் வழங்கப்படாமல் இருப்பதும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கட்டுமான துறையை முடக்கும் சூழலை உருவாக்கியுள்ளது" என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்டுமானப் பணிகளில் சிக்கல்
மேலும்.. கட்டுமானப் பணியின் ஆரம்பக் கட்டத்தில் அடித்தளம் அமைப்பதற்காக மண்ணைத் தோண்டி எடுப்பது மிக முக்கியமான ஒன்றாகும். அவ்வாறு தோண்டப்படும் மண்ணை உரிய நேரத்தில் அப்புறப்படுத்தினால் மட்டுமே கட்டுமானப் பணிகளைத் தொய்வில்லாமல் தொடர்ந்து நடத்த முடியும். ஆனால், தற்போது அனுமதி கிடைக்காததால் ஒட்டுமொத்த பணிகளும் முடங்கியுள்ளன, என்று கிரெடாய் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தத் தேக்க நிலை காரணமாக கட்டுமான திட்டங்களை முடிப்பதில் பெரும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கட்டுமான நிறுவனங்கள் கவலை தெரிவிக்கின்றன.
இதனால் வீடுகளை வாங்குபவர்களுக்குக் குறிப்பிட்ட காலத்தில் வீடுகளை ஒப்படைக்க முடியாத நிலை ஏற்படுவதால், வாடிக்கையாளர்கள் தரப்பில் சட்ட ரீதியான வழக்குகள் தொடரப்படலாம். சிமெண்ட், கம்பி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், திட்டங்கள் தாமதமாவதால் ஒட்டுமொத்த கட்டுமானச் செலவும் பல மடங்கு அதிகரிக்கும்.
முதலீடு செய்த பணம் முடங்குவதால் டெவலப்பர்களுக்குக் கடுமையான நிதி அழுத்தங்கள் ஏற்படும். கட்டுமானத் தொழில் முடங்குவதால், அதனைச் சார்ந்த தொழிலாளர்கள் மற்றும் சிமெண்ட், செங்கல் போன்ற பிற உள்கட்டமைப்புத் துறைகளும் பாதிக்கப்படும் என்று கட்டுமானத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.














Click it and Unblock the Notifications