பாஜகவின் உத்தரப் பிரதேச தேர்தல் பிரச்சாரகர்கள் பட்டியலில் வாஜ்பாய்!

பாஜக கூட்டணி ஆட்சி தேர்தலில் தோற்று, பிரதமர் பதவியிலிருந்து விலகிய பின் வெளியுலகில் பெரும்பாலும் தலைகாட்டவில்லை வாஜ்பாய். அவருக்கு உடல் நிலை சரியில்லாததால், அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்து வருகிறார்.
இந் நிலையில், வரும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைகளுக்கு நடக்கும் தேர்தலில் பாஜக சார்பிலான ஸ்டார் பிரச்சாரகர்கள் பட்டியலை அந்தக் கட்சி தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்துள்ளது. அதில் வாஜ்பாயின் பெயரும் இடம் பெற்றுள்ளது.
ஆனால், அவர் பிரச்சாரத்துக்கு வர வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை.
அதே போல இந்த பிரச்சாரகர்கள் பட்டியலில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் பெயரும் இடம் பெற்றுள்ளது.
கடந்த பிகார் சட்டமன்றத் தேர்தலில் இவர் பிரச்சாரத்துக்கு வரக் கூடாது என ஐக்கிய ஜனதா தலைவரான சரத் யாதவ், நிதிஷ் குமார் ஆகியோர் தடை போட்டதால், பிரச்சாரம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முறை உத்தரப் பிரதேச தேர்தலில் மோடியை பிரச்சாரம் செய்ய வைக்க பாஜக திட்டமிட்டிருந்தாலும், கட்சியில் அவருக்கு கொஞ்சமும் ஆகாத தலைவரான சஞ்சய் ஜோஷி தான் உத்தரப் பிரதேச தேர்தல் பொறுப்பாளராக உள்ளார். இதனால், இந்த மாநிலத்திலும் மோடி பிரச்சாரம் செய்வது சந்தேகமே என்கின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் சஞ்சய் ஜோஷி மீண்டும் பாஜகவில் சேர்க்கப்பட்டார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தையே மோடி புறக்கணித்தது நினைவுகூறத்தக்கது.
பாஜக ஸ்டார் பிரச்சகர்கள் பட்டியலில் கட்சியின் மூத்த தலைவர்களான அத்வானி, சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.
ஆனால், இவர்கள் ஊழல், கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய பாஜக வேட்பாளர்களான ஷாக்ஷி மகாராஜ், சத்ரபால் சிங், பாத்ஷா சிங், தட்டண் மிஸ்ரா ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய மாட்டார்கள் என்று தெரிகிறது.
மேலும் மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் செளகான், சட்டீஸ்கர் முதல்வர் ரமன் சிங், ஜார்க்கண்ட் முதல்வர் அர்ஜூன் முண்டா, பிகார் துணை முதல்வர் சுஷில் மோடி ஆகியோரும் உத்தரப் பிரதேச தேர்தல் பிரச்சாரகர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications