கடலூரில் மத்திய குழு: பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க அரசியல் கட்சிகள் கோரிக்கை
கடலூர்: தானே புயலால் ஏற்பட்ட சேதத்தை மதிப்பீடு செய்யும் மத்திய குழு இன்று கடலூரில் ஆய்வு மேற்கொண்டது. அந்த குழுவை சந்தித்த அரசியல் கட்சிகள் கடலூரை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்குமாறு கோரிக்கை விடுத்தன.
கடந்த 30ம் தேதி வீசிய தானே புயலால் கடலூர் மற்றும் புதுவையில் வரலாறு காணாக அளவு சேதம் ஏற்பட்டது. புயலுக்கு தமிழகத்தில் 57 பேரும், புதுவையில் 9 பேரும் ஆக மொத்தம் 66 பேர் பலியாகினர்.
புயல் சேதத்தை மதிப்பீடு செய்ய மத்திய அரசு ஒரு குழுவை அமைத்து அனுப்பி வைத்துள்ளது. அந்த குழு தனுது ஆய்வறிக்கையை சமர்பித்த பிறகு மத்திய அரசு நிவாரணத் தொகையை இறுதி செய்யும்.
மத்திய அரசின் உள்துறை இணைச் செயலாளர் லோகேஷ் ஜா தலைமையில், மத்திய வேளாண்மைத் துறை இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் கே.மனோகரன், மத்திய திட்டக்குழு முதுநிலை ஆராய்ச்சி அலுவலர் முரளீதரன், மத்திய நீர்வள ஆதாரத் துறை கண்காணிப்புப் பொறியாளர் ஆர்.சுந்தரமூர்த்தி, மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளர் திக்விஜய் மிஸ்ரா, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதுநிலை மண்டல இயக்குனர் டாக்டர் டி.பழனிவேலு, மத்திய மின்துறை இயக்குனர் விவேக் கோயல், மத்திய குடிநீர் மற்றும் பொது சுகாதாரத் துறை துணை ஆலோசகர் ஆர்.ஜெ.தத்தா சவுத்ரி, மத்திய கால்நடை மற்றும் மீன்வளத்துறை நிர்வாக இயக்குனர் டாக்டர் பி.பால்பாண்டியன் ஆகியோர் அடங்கிய அந்த குழு நேற்று முன்தினம் சென்னையில் வைத்து தமிழக அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது.
இதையடுத்து அந்த குழு நேற்று மதியம் புதுவை சென்றது அங்கு தலைமைச் செயலகத்தில் வைத்து அம்மாநில உயர் அதிகாரிகளுடன் புயல் சேதம் குறித்து ஆலோசனை நடத்தியது. அவர்களுக்கு புயல் சேதக் காட்சிகள் போட்டுக் காட்டப்பட்டன. இது குறித்த அறிக்கையும் அவர்களிடம் கொடுக்கப்பட்டது.
அதன் பிறகு பிற்பகல் 2.30 மணிக்கு அந்த குழுவினர் புயல் பாதித்த இடங்களைப் பார்வையிட புறப்பட்டனர். அவர்கள் கடற்கரை சாலை, பாரதி பூங்கா, சட்டமன்ற வளாகம், மணல் மேடு, புதிய துறைமுகம், தாவரவியல் பூங்கா, கருவடிக்குப்பம் நரிகுறவர் காலனி, பொறையுர், வில்லியனூர், உறுவையாறு, கரிக்கலாம்பாக்கம், அரங்கனூர், பாகூர், கன்னியகோவில், மூர்த்திக்குப்பம் ஆகிய இடங்களைப் பார்வையிட்டனர்.
முன்னதாக அந்த குழுவின் தலைவர் லோகேஷ் ஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது,
புதுவையில் புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினோம். அவர்கள் சேதம் குறித்த முதல் அறிக்கையை எங்களிடம் கொடுத்தனர். அதை ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம். ஆய்வு முடிந்த பிறகு அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்வோம் என்றார்.
ஆய்வை முடித்துக் கொண்டு அவர்கள் நேற்றிரவு புதுவையிலேயே தங்கினர். இன்று காலை கடலூருக்கு வந்தனர். அங்கு அந்த குழுவினரை அரசியல் கட்சியினர் சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் கடலூரை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். மேலும் கடலூர் மாவட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கக் கோரி காங்கிரஸ் எம்.பி. அழகிரி மனு கொடுத்தார். தேமுதிக எம்.எல்.ஏ. சிவகொழுந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல கட்சியினரும் மனு கொடுத்தனர்.
அந்த குழு இன்று மதியம் 13க்கும் மேற்பட்ட கிராமங்களை பார்வையிடுகின்றது.












Click it and Unblock the Notifications