சலிக்காமல் சமூக சேவை செய்த சுகுமாறன் நம்பியாரை இழந்துவிட்டோம்: ஜெயலலிதா இரங்கல்
சென்னை: சலிக்காமல் சமூக சேவை செய்து வந்த சுகுமாறன் நம்பியாரை இழந்துவிட்டோம் என்று முதல்வர் ஜெயலலிதா தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது,
பாரதீய ஜனதா கட்சி தேசிய செயற்குழு உறுப்பினர் சுகுமாறன் நம்பியார் திடீரென மறைந்துவிட்டார் என்பதை அறிந்து நான் பெரும் அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அடைந்தேன். பல்வேறு தற்காப்புக் கலையில் நிபுணத்துவம் பெற்றிருந்த அவர், கராத்தேயில் பிளாக் பெல்ட் பெற்றுள்ளார். இந்திய ராணுவ வீரர்களுக்கு தற்காப்பு கலை பயிற்சியும் அளித்திருக்கிறார். பாரதீய ஜனதா கட்சியில் பல்வேறு பொறுப்புகள் வகித்துள்ளார்.
மறைந்த அவரது தந்தை நடிகர் எம்.என்.நம்பியாரைப் போலவே, சுகுமாறன் நம்பியாரும் சிறந்த தெய்வபக்தி மிக்கவராகவும், அனைத்திந்திய ஐயப்ப சேவா சங்கத்தின் தலைவராகவும் இருந்தார். அவரது மறைவு, பாரதீய ஜனதா கட்சிக்கு பேரிழப்பாகும். அவரது மறைவால், சலிக்காமல் சமூக சேவை ஆற்றிய சிறந்த தேசபக்தரை நாம் இழந்துவிட்டோம்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அவரது மறைவால் ஏற்பட்டுள்ள ஈடுசெய்ய முடியாத இழப்பை அவர்கள் தாங்கிக் கொள்வதற்கு தேவையான மன தைரியத்தை எல்லாம் வல்ல இறைவன் அளிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். சுகுமாறன் நம்பியாரின் ஆன்மா சாந்தியடையட்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications