விசைத்தறியாளர்களுடன் தமிழக அரசு பேச்சு வார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும் - வைகோ
சங்கரன்கோவில்: சம்பள உயர்வுக்காக போராட்டம் நடத்தி வரும் சங்கரன்கோவில் விசைத்தறியாளர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி சமூக தீர்வு காண வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் நகரம் நெசவுத் தொழிலுக்குப் புகழ்பெற்றது. இங்கு 1973ம் ஆண்டு முதல் இயங்கி வரும் விசைத்தறித் தொழிலில் சுமார் 15,000 பேர் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் அங்கம் வகிக்கும் சிறு விசைத்தறி துணி உற்பத்தியாளர் சங்கம் மற்றும் விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர், கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி கடந்த டிசம்பர் 26ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சங்கரன்கோவில் விசைத்தறிக் கூடங்களில் உற்பத்தி செய்யப்படும் துணிரகங்கள் அமெரிக்கா உள்ளிட்ட பல வெளிநாடுகளில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. மேற்கண்ட வேலை நிறுத்தப் போராட்டத்தால் நாள் ஒன்றுக்கு சுமார் 2 கோடி மதிப்பிலான துணி உற்பத்தி இழப்பும், 15,000 பேருக்கு வேலை இழப்பும் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே முன் அறிவிப்பின்றி தினமும் 4 முதல் 5 முறை ஏற்படும் மின்தடையால் பாதிப்புக்குள்ளாகி வரும் விசைத்தறித் தொழில், தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தால் பெரும் உற்பத்தி இழப்பிற்கும், வருவாய் இழப்பிற்கும் உள்ளாகி உள்ளது.
சிறு விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் விசைத்தறி தொழிலாளர்களின் கூலி உயர்வுப் போராட்டம் ஒரு தொடர் கதையாகவே நடந்து வருகிறது. மேலும் காலதாமதம் செய்யாமல் விசைத்தறி தொழிலாளர்களின் நியாயமான கூலி உயர்வுக் கோரிக்கையை நிறைவேற்றி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாஸ்டர் வீவர்ஸ் மற்றும் சங்க பிரதிநிதிகளை தமிழக அரசு உடனே அழைத்துப் பேசி சுமூகத் தீர்வு காண விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
