பொங்கல் கொண்டாட்டம்: டாஸ்மாக் கடைகளில் ரூ. 276 கோடிக்கு மது விற்பனை

பண்டிகை நாட்கள் வந்ததாலே முதலில் விழாக்கோலம் பூணுவது டாஸ்மாக் கடைகள் தான். குடிமகன்கள் டாஸ்மாக் கடைகளை ஈ போன்று மொய்த்துவிடுவார்கள். பண்டிகை காலங்களில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை சக்கை போடு போடும். தமிழகத்தில் மொத்தம் 6,696 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 20 நாட்களில் மட்டும் கூடுதலாக 40 கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
சாதாரண நாட்களில் டாஸ்மாக் கடைகளில் ரூ.45 முதல் ரூ.50 கோடி வரை மது விற்பனையாகும். ஆனால் அதுவே பண்டிகை காலங்களில் விற்பனை 2 முதல் 3 மடங்காக அதிகரிக்கும். கடந்த புத்தாண்டில் ரூ.107 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது. ஆனால் இந்த புத்தாண்டில் மாநிலம் முழுவதும் ரூ.142 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.
புத்தாண்டு வந்த சில நாட்களில் பொங்கல் பண்டிகை வந்ததால் டாஸ்மாக் கடைகளில் விற்பனை படுஜோராக நடந்தது. கடந்த 14ம் தேதி மட்டும் ரூ.76 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. பொங்கல் பண்டிகை அன்று இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்கள் 2,96,000 பெட்டிகளும், 1, 36,000 பீர் பெட்டிகளும் விற்றுத் தீர்ந்தது. இந்த விற்பனை மூலம் ரூ.108 கோடி வசூலானது.
காணும் பொங்கல் அன்று இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்கள் 2,21,000 பெட்டிகளும், 1,36,000 பீர் பெட்டிகளும் விற்றுத் தீர்ந்தது. இந்த விற்பனை மூலம் ரூ.92 கோடி வசூலானது.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை நாட்களில் மட்டும் ரூ.276 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. இது கடந்த ஆண்டு விற்பனையை விட ரூ.35 கோடி அதிகமாகும். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி ரூ.62 கோடிக்கு மது விற்பனையானது. மேலும் 15ம் தேதி ரூ.99 கோடிக்கும், 17ம் தேதி ரூ.80 கோடிக்கும் ஆக மொத்தம் ரூ.241 கோடிக்கு மது விற்பனையானது.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை நாட்களில் பீர் 15.5 சதவீதமும், லிக்கர் 9 சதவீதமும் விற்பனையாகியுள்ளது. மேலும் மொத்த விற்பனை 12.3 சதவீதம் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications