பேச்சு வார்த்தையில் சுமூகம்: 28 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற கடலூர் மீனவர்கள்
கடலூர்: தமிழக அரசின் மீன்வளத் துறைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதால், 28 நாள்களாக மீன் பிடிக்கச் செல்லாமல் இருந்த கடலூர் மாவட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு சென்றனர்.
கடலூர் மாவட்டத்தில் 30,000 மேற்பட்ட மீனவ குடும்பங்கள் உள்ளன. கடந்த ஆண்டு(2011) டிசம்பர் 26ம் தேதி முதல் 4 நாட்களாக கடல் நீரோட்டத்தில் மாற்றம் தெரிந்தது. இதனால் கடலூரை சேர்ந்த பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
அதன்பிறகு தமிழகத்தை 'தானே' புயல் தாக்கியதால், கடலூரை சேர்ந்த மீனவர்களின் படகுகள், வலைகள், வீடுகள் உட்பட பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு படகுகளுக்கு நிவாரணமாக ரூ.10.91 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியது. ஆனால் புதுச்சேரி அரசை போல தகுந்த நிவாரணம் அளிக்காமல், குறைந்த தொகை அறிவித்து இருப்பதாக கூறி, கடலூர் மீனவர்கள் கடலுக்கு செல்ல மறுத்தனர்.
கடலூர் மாவட்ட நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியும், மீனவர்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில் ‘தானே' புயல் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட முன்னாள் கடலூர் கலெக்டரும், கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் மீன்வளத் துறைச் செயலருமான ககன் தீப்சிங் பேடி கடலூருக்கு வந்தார்.
பாதிக்கப்பட்ட மீனவர்களுடன் ககன் தீப்சிங் பேடி பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் மீனவர்கள், நேற்று முதல் மீன் பிடிக்க செல்வதாக தெரிவித்தனர்.
இது குறித்து ககன் தீப்சிங் பேடி கூறியதாவது,
கடலூர் மாவட்டத்தில் ‘தானே' புயலில் சேதம் அடைந்த படகுகளுக்கு நிவாரணத் தொகையாக ரூ. 10.91 கோடி வழங்க முதல்வர் உத்தரவிட்டார். ஆனால் மீனவர்களுக்கு ஏற்பட்ட சில பிரச்சனைகளால் நிவாரணம் பெறாமல் இருந்தனர். மீனவர்களுடன் 2 கட்ட பேச்சுவார்த்தையில் மீனவர் மீன் பிடிக்கச் செல்வதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து நேற்று தேவனாம்பட்டினம், அண்ணன்கோயில் கிராமங்களை சேர்ந்த மீனவர்கள், 100 படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். கடலூர் மாவட்டத்தில் 57 கி.மீ. நீளமுள்ள கடற்கரையில் 45 மீனவ கிராமங்கள் உள்ளன. இதில் அண்ணன்கோயில் கிராமத்தில் ரூ.13.05 கோடியில் மீன் இறங்குதளம் அமைக்கப்பட உள்ளது.
வெள்ளாறு முகத்துவாரத்தை ஆழப்படுத்தும் வகையில் ரூ.10.24 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் கடலூரிலும் ஜெகதாப்பட்டினத்திலும் மீன் இறங்கு தளங்கள் அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்றார்.












Click it and Unblock the Notifications