தானே புயல் பாதித்த பகுதிகளில் போர்க்கால நடவடிக்கை கோரி பெரும் போராட்டம்: அன்புமணி
கடலூர்: தானே புயல் பாதித்த பகுதிகளில் போர்க்கால நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ளாவிட்டால் எனது தலைமையில் பெரும் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக இளைஞர் சங்க தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் பாமக சார்பில் இலவச மருத்துவ முகாம்கள் நடந்தன. அதில் கலந்து கொண்டு அன்புமணி பேசுகையில்,
தானே புயலால் கடலூர் மாவட்டம் பலத்த சேதம் அடைந்துவிட்டது. உண்மையான கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. 40 சதவீதம் கிராம நிர்வாக அலுவலர்கள் இல்லாதபோது எப்படி கணக்கெடுத்தார்கள்.
மின்சார சீரமைப்பு பணி 50 சதவீதம்தான் நடந்துள்ளது. விவசாயத்துக்கான மின்சாரம் 1 சதவீதம்கூட வழங்கப்படவில்லை.
மத்திய மாநில அரசுகள் மெத்தனமாக உள்ளன. புதுச்சேரியை பேரிடர் மாநிலமாக அறிவித்தது போல் கடலூர் மாவட்டத்தையும் பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும். புயலால் அனைத்து குடிசை வீடுகளும் சேதம் அடைந்துவிட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு காங்கிரீட் வீடுகள் கட்டித் தர வேண்டும். குறைந்தது 1 மாதம் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். பலா, முந்திரி விவசாயிகளுக்கு இழப்பீட்டுக்கு தகுந்தாற்போல் 10 ஆண்டுகளுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும்.
வீடுகளையும், புத்தகங்களையும் இழந்துள்ள நிலையில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கடலூர் மாவட்டத்தில் அனைத்து மாணவர்களையும் அதிக மதிப்பெண் பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும். நிவாரணம் பாரபட்சமாக வழங்கப்படுகிறது. முதல்வர் இன்னொருமுறை வந்து ஆய்வுசெய்ய வேண்டும்.
ஒன்றியத்துக்கு ஒரு அமைச்சர், பஞ்சாயத்துக்கு ஒரு அதிகாரியை தங்க வைத்து நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். பசுமைத்தாயகம் சார்பில் குறிஞ்சிப்பாடியை அடுத்த சத்திரம் பகுதியில் மா, பலா உள்ளி்ட்ட மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளது.
அடுத்த மாதம் மரக்கன்றுகள் நடும் விழா தேதி அறிவிக்கப்படும். அரசு போர்க்கால அடிப்படையில் துரித நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால் என்னுடைய தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications