உ.பியில் தொங்கு சட்டப்பேரவை தான்: சமாஜ்வாடி-காங் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு- கருத்துக் கணிப்புகள்
லக்னெள: உத்தரப் பிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காது என்று தேர்தல் கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. இதனால் தொங்கு சட்டப்பேரவைக்கான வாய்ப்புகளே அதிகம் என்றும் கூறப்படுகிறது.
உத்தரப் பிரதேசத்தில் வரும் 8,11,15,19,23,28 மற்றும் மார்ச் 3ம் தேதிகளில் 7 கட்டங்களாக சட்ட்ப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று ஓய்ந்தது.
இத்தேர்தலில் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி, பா.ஜ.க. ஆகிய முக்கிய கட்சிகள் தனித்தே போட்டியிடுகின்றன.
உத்தரப் பிரதேசம் ஒருகாலத்தில் காங்கிரஸ் கோட்டையாக இருந்த வரலாறு மலையேறி பல்லாண்டுகளாகிவிட்டன. பாஜகவைப் பொறுத்தவரை ஆட்சிக் கனவு கானல் நீராகத்தான் இருக்கிறது
முலாயம் சிங்கின் சமாஜ்வாதியும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும்தான் ஆட்சி அமைக்கக் கூடிய சக்திகளாக இருந்து வருகின்றன.
மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 202 இடங்களைப் பெறும் கட்சிகள்தான் ஆட்சி அமைக்க முடியும்.
ஜெயிக்கப் போவது யாருமில்லை...
சமாஜ்வாதி கட்சி அல்லது மாயாவதி கட்சி இரண்டில் ஒன்று கூடுதல் இடங்களைப் பெற்றாலும் பெரும்பான்மைக்குரிய 206 தொகுதிகளை தனித்துப் பெறுவது இம்முறை முயல்கொம்பாகவே இருக்கிறது என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து.
கூட்டணி இல்லாமல் தனித்தே அனைத்து கட்சிகளும் போட்டியிடுவதால் இந்த சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சியே அதிக இடங்களைப் பிடிக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் தொங்கு சட்டப்பேரவை உருவாகும் என்றும் சில தேர்தல் ஆருடங்கள் கூறுகின்றன.
முலாயம் கட்சிக்கு அதிகபட்சமாக 130 இடங்கள்தான் கிடைக்கும் என்பது தொங்கு சட்டப்பேரவை ஏற்படும் என்போரின் கருத்தாக உள்ளது.
இதனால் வேறு ஏதேனும் ஒரு கட்சியுடன் இணைந்து கூட்டணி அரசு அமைக்க வேண்டிய சூழல் சமாஜ்வாதிக்கு ஏற்படும் எனத் தெரிகிறது.
உத்தரப்பிரதேசத்தில் மூன்றாவது இடத்தை தக்க வைக்க பெரும் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கும் காங்கிரஸ் இம்முறை ராகுல், பிரியங்கா என சோனியா வீட்டு படை பரிவாரங்களை களத்தில் இறக்கியிருக்கிறது.
என்னதான் குடும்பமே களத்துக்கு வந்தாலும் கடந்த முறையை விட அனேகமாக 10 அல்லது 20 தொகுதிகள்தான் கூடுதலாக அக்கட்சிக்குக் கிடைக்கக் கூடும்.
இதனால் காங்கிரசுடன் சேர்ந்து சமாஜ்வாதி கட்சி ஆட்சி அமைக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
கடந்த தேர்தலில் 205 தொகுதிகளைக் கைப்பற்றி அதிரடி கிளப்பிய பகுஜன் இந்தத் தேர்தலில் தனது ஊழல் சாம்ராஜ்யத்தினால் மரண அடிவாங்க நேரிடும் என்று கூறப்படுகிறது. இம்முறை 100 தொகுதிகளைப் பிடிப்பதே பகுஜனுக்கு பகீர பிரயத்தனமாக இருக்கலாம்.
பாஜக கடந்த தேர்தலில் 51 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இதில் பெரியளவு இம்முறை மாற்றம் இருக்காது என்கின்றனர்.
பாஜகவும் மாயவதியின் பகுஜனும் இணைந்தாலும் கூட ஆட்சியைக் கைப்பற்ற முடியாத நிலையே உருவாகலாம்.
இதனால் உத்தர ப்பிரதேசத்தில் தொங்கு சட்டப்பேரவையும் கூட்டணி அரசும் தவிர்க்க முடியாததாக இருக்கலாம் என பல்வேறு கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications