காரைக்கால் மருத்துவக் கல்லூரி விவகாரம்: புதுவை அரசிடம் விளக்கம் கேட்கும் சுப்ரீம் கோர்ட்
புதுச்சேரி: காரைக்கால் மருத்துவக் கல்லூரிக்கு புதுச்சேரி ஆளுநர் அனுமதி அளித்தற்கு எதிரான விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. மேலும் இது குறித்து 4 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு புதுவை அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து புதுவை மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் பெருமாள், மாநிலக் குழு உறுப்பினர் முருகன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
புதுவை அமைச்சரவையை மீறி காரைக்காலில் மருத்துவக் கல்லூரி துவங்க ஆளுநர் இக்பால்சிங் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்க தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்தனர். அதோடு இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் மேல்முறையீடு செய்ய உயர் நீதிமன்றம் தடையாக இருக்காது என்றும் தெரிவித்தனர். மேலும் உள்துறை அமைச்சகத்துக்கு அவர்கள் இந்த மனுவை அனுப்பி வைத்தனர். ஆனால் உள்துறை அமைச்சகம் இந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் நாங்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகினோம். எங்கள் மனுவை கடந்த 3 நாட்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு, இது குறித்து வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக புதுச்சேரி அரசு 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் அது உத்தரவிட்டுள்ளது.
ஆளுநர் இக்பால்சிங் பதவி விலகும் வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும் என்றனர்.












Click it and Unblock the Notifications