For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலவசத்தை நிறுத்தக்கூடாது: மின்கட்டணத்தை உயர்த்தக்கூடாது– கருத்து கேட்பு கூட்டத்தில் அமளி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மதுரை: மின் கட்டணத்தை உயர்த்துவதற்கு பொதுமக்கள், விவசாயிகள், தொழில் துறையினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதே சமயம் இலவச மின்சாரத்தை நிறுத்தக்கூடாது எனவும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வருகிற ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முதல் வீடுகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் மின் கட்டணத்தை மாற்றி அமைக்க திட்டமிட்டு, அதற்கு அனுமதி கேட்டு தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தது. மின்கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்துக்கு தான் உள்ளது.

கருத்துக் கேட்பு கூட்டம்

மின்கட்டணத்தை மாற்றி அமைப்பது குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஏற்கனவே சென்னை, திருச்சி, கோயமுத்தூர் ஆகிய இடங்களில் கூட்டங்கள் நடத்தி பொதுமக்களின் கருத்துக்களை கேட்டுள்ளது. வெள்ளிக்கிழமையன்று மதுரை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள இந்திய மருத்துவ கழக அரங்கில் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இதில், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.

கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு

கூட்டத்தில் பேசிய அனைவரும் மின்சார கட்டணத்தை உயர்த்தவே கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். அதே வேளையில் மின்சார உற்பத்தியை உயர்த்துவதற்கான திட்டத்தை செயல்படுத்த வேண்டும், மின்வாரியத்தில் உள்ள நிர்வாக சீர்கேடுகளை களைய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

தனியார் காற்றாலை திட்டத்தை மட்டும் ஊக்குவிக்கும் மின்வாரிய அதிகாரிகள் சூரிய ஒளி மின்சாரம் போன்றவற்றை செயல்படுத்த நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று ஒருவர் பேசினார்.

வெளிநாட்டினருக்கு பிரியாணி

தமிழகத்தில் செயல்படும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆனால் அன்றாட வாழ்க்கையை நடத்தவே சிரமப்பட்டு வரும் சிறு, குறு தொழிலாளர்களுக்கு மின்சாரம் கிடைப்பது இல்லை. வெளிநாட்டில் இருந்து வந்த விருந்தினர்களுக்கு பிரியாணி கொடுத்து விட்டு சொந்த மண்ணில் இருப்பவர்களுக்கு கஞ்சியை கொடுப்பது போன்று உள்ளது என்று கூட்டத்தில் பேசிய ஒருவர் தெரிவித்தார். காலையில் இருந்து மாலை வரை பேசிய அனைத்து தரப்பினரும் மின்கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்று வலியுறுத்தினர்

இலவச மின்சாரத்திற்கு எதிர்ப்பு

கூட்டத்தில் பேசிய ஒருவர், இலவச மின்சாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றார். அதே போன்று இன்னொரு நபர் இலவச மின்சாரத்துக்கு பயன்படுத்தும் மின்சாரத்தை மின் மீட்டர் மூலம் கணக்கிட வேண்டும் என்றார். இதற்கு விவசாய சங்கத்தை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது என்று விவசாயிகளும், விவசாய சங்கத்தை சேர்ந்தவர்களும் பேசும் போது வலியுறுத்தினர். அப்போது குறுக்கிட்ட ஆணைய உறுப்பினர் நாகல்சாமி, விவசாயிகளுக்கும், குடிசைகளுக்கும் வழங்கப்படும் இலவச மின்சாரத்துக்கு தமிழக அரசு தொடர்ந்து மானியத்தை அளிப்பதாக உறுதி அளித்துள்ளது. எனவே இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட மாட்டாது என்று தெரிவித்தார்.

English summary
TNEB held public opinion meeting at Madurai hike for power tariff. Public against for power tariff hike.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X