போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும், என் கடன் பணி செய்து கிடப்பதே-ஜெ.

திருச்சி, ஸ்ரீரங்கம் அருகே நவலூர் குட்டப்பட்டு என்ற இடத்தில் சுமார் 25 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 100 கோடி ரூபாய் முதலீட்டில் தேசிய சட்டப்பள்ளிக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று அடிக்கல் நாட்டினார். மேலும் நலத் திட்ட உதவிகளையும் வழங்கி அவர் பேசினார்.
முதல்வர் ஜெயலலிதாவின் உரை...
தமிழகத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட, சரித்திரப் புகழ் வாய்ந்த ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் இந்த இனிய விழாவிலே கலந்து கொண்டு, எனது அருமை தொகுதி மக்களாகிய உங்களை எல்லாம் கண்டு, முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, உங்களோடு உரையாடும் வாய்ப்பினைப் பெற்றுள்ளதில் உள்ளபடியே நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
கடந்த சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் உங்களை எல்லாம் சந்தித்து, உங்களிடம் வாக்குகளை சேகரித்த போது, பல்வேறு வாக்குறுதிகளை நான் உங்களிடம் தெரிவித்திருந்தேன். என்னுடைய வாக்குறுதிகளை நம்பி, கடந்த சட்டமன்றத் தேர்தலில், என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தீர்கள். இதனையடுத்து, மூன்றாவது முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக நான் பொறுப்பேற்றுக் கொண்டேன்.
முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டவுடன், கடந்த ஆண்டு ஜூன் மாதம் இங்கு வந்து உங்களையெல்லாம் சந்தித்து நன்றி தெரிவித்ததோடு, நான் அளித்த தேர்தல் வாக்குறுதிகளுக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், 190 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் சென்றேன். மீண்டும், தற்போது இரண்டாம் முறையாக உங்களை எல்லாம் சந்தித்து, மொத்தம் 240 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களையும், நலத் திட்ட உதவிகளையும் வழங்குவதில் நான் மன நிறைவு அடைகிறேன்.
எனது அரசு, ஏழை எளிய மக்களின் நலனுக்காக பாடுபடும் அரசு. மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் அரசு. மக்களுக்கு இடர்ப்பாடுகள் ஏற்படும் போதெல்லாம் ஓடோடிச் சென்று அவர்களின் துயர் துடைக்கும் அரசு.
அந்த வகையில் தான், அண்மையில் வீசிய 'தானே' புயல் காரணமாக கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள் முழுவதுமாக புரட்டி போடப்பட்டு, அந்த மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு, அவர்களின் வாழ்க்கையே ஒரு கேள்விக்குறியாக இருந்த நேரத்தில், அவர்களின் உற்ற நண்பனாக இந்த அரசு பல்வேறு உதவிகளை உடனடியாக செய்தது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய நிவாரண உதவிகளுக்காகவும், சேதமடைந்த கட்டமைப்புகளின் உடனடி சீரமைப்பிற்காகவும், 850 கோடி ரூபாயை உடனடியாக நான் வழங்கினேன்.
நிவாரண நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையிலே எடுத்து, புயல் பாதிக்கப்பட்ட இடங்கள் மிகக் குறுகிய கால அளவிலேயே இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உங்கள் அன்புச் சகோதரியின் அரசு எடுத்தது. இதனால், புயலின் தாக்கத்திலிருந்து அப்பகுதி மக்கள் மீண்டனர். மேலும், வீடுகளை இழந்த மக்களுக்கு 1,000 கோடி ரூபாய் செலவில் 1 லட்சம் கான்க்ரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
புயல் வேகத்தில் செயல்பட்ட எனது அரசு, புயல் பாதிப்பை தணித்ததோடு மட்டுமல்லாமல், நான் ஏற்கெனவே சட்டமன்றத்தில் தெரிவித்தபடி, அனைவரும் அசந்து போகும் அளவுக்கு 790 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 5 ஆண்டுகளுக்கான மறுவாழ்வு திட்டங்களை எனது பதிலுரையில் அறிவித்தேன். அந்த மறுவாழ்வு திட்டத்தினை அனைத்துத் தரப்பு மக்களும், பல்வேறு அரசியல் கட்சிகளும் பாராட்டி வரவேற்றுள்ளன.
ஆனால் அதனை விமர்சிக்கும் வகையில், 'அசந்து தான் போனார்கள்' என்ற தலைப்பில் 'அசடு' வழியும் ஓர் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார் 'ஊழல் மூலம் உலகத்தையே அசர வைத்த' ஒரு கட்சியின் தலைவர். இதைப் பார்க்கும் போது, ஒரு நிகழ்ச்சி எனது நினைவிற்கு வருகிறது.
பட்டினத்தார் கதை..
பெருஞ் செல்வந்தரான பட்டினத்தார், தன்னுடைய சொத்துக்களை அப்படியே விட்டுவிட்டு துறவறம் பூண்டவர். கௌதம புத்தருக்கு இணையாக தமிழகத்திலே கருதப்படுகின்றவர். இவர் ஒரு நாள் நடந்த களைப்பால், மேல் சட்டை போடாமல் வயலில் படுத்துக் கொண்டிருந்தார். அறுவடை நடந்திருந்த வயல் அது. குச்சி குச்சியாய்ப் பூமியில் இருந்து கிளம்பி அறுபடாதிருந்த வைக்கோல், அவர் உடம்பை குத்திக் கொண்டிருந்தது. அதைச் சட்டை செய்யாமல், வரப்பு மீது தலை வைத்து படுத்துக் கொண்டிருந்தார்.
அந்த வழியாக போன இரண்டு பேரில் ஒருவர், 'யாரோ மகான்' என்று கூறி அவரை வணங்கி, வரப்பிலிருந்து இறங்கி நடந்தார். மற்றொருவர், 'ஆமாம், ஆமாம். இவர் பெரிய சாமியாராக்கும்! தலையணை வைச்சுத் தூங்குற சுகம் மாதிரி வரப்பு மேல தலை வைச்சு தூங்குகிறார் பாரு! ஆசை பிடித்தவர்' என தூற்றினார். அவர்கள் அங்கிருந்து போனதும் எழுந்து உட்கார்ந்த பட்டினத்தார், 'நமக்கு இது தோன்றவில்லையே' என்று வருத்தப்பட்டு, வரப்பிலிருந்து தலையைக் கீழே வைத்துப் படுத்தார்.
சற்று நேரத்தில், அந்த இருவரும் அதே வழியாகத் திரும்பி வந்தனர். வரப்பிலிருந்து தலையை இறக்கிக் கீழே வைத்திருந்த பட்டினத்தாரைப் பார்த்து, முதல் நபர் 'பார்த்தியா, நீ சொன்னதைக் கேட்டு உடனே அவர் கீழே இறங்கிப் படுத்துவிட்டார். இப்பவாவது ஒத்துக்கொள் இவர் மகான் தானே?' என்றார். மற்றவரோ, 'இவனெல்லாம் ஒரு சாமியாரா? தன்னைப் பற்றி, யார் யார், என்னென்ன பேசுகிறார்கள் என்று ஒட்டுக் கேட்கிறார்' என்று கேலி செய்தார். பட்டினத்தாருக்கே தலை சுற்றியது.
தரமானவர்களின் தரமான விமர்சனத்தை மதிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால், அரசின் நல்ல திட்டங்களை, பாராட்ட மனமில்லாமல், வரப்பில் நடந்து சென்றவரைப் போன்று விமர்சிக்க வேண்டும் என்கிற வெறியுடன், குறை கூற வேண்டும் என்ற ஒரே நோக்குடன் விமர்சிக்கும் விமர்சனங்களை புறந்தள்ளுவதைத் தவிர வேறு வழி ஏதும் இல்லை.
யார் போற்றினாலும், தூற்றினாலும், என் கடன் பணி செய்து கிடப்பதே. தமிழ்நாட்டின் வளர்ச்சி, தமிழக மக்களின் வளர்ச்சி தான் என்னுடைய வளர்ச்சி என்ற முறையில் நான் தொடர்ந்து பணியாற்றுவேன்.
என்னைப் பொறுத்தவரையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது, ஏழை எளிய மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றும் வளர்ச்சியாக இருக்க வேண்டும். எனவே தான், எனது அரசு, ஏழை மக்கள் உடனடியாக பயன்பெறும் வண்ணம், எந்தவித விலையும் கொடுக்காமல் பெறக்கூடிய திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.
அதே சமயத்தில், ஏழை எளியோர் அரசின் சலுகைகளை மட்டுமே எப்போதும் சார்ந்தில்லாமல், தங்கள் சொந்தக் கால்களிலேயே நிற்கும் வகையிலான பொருளாதார வளத்தை அவர்கள் பெற வேண்டும் என்பது இந்த அரசின் முக்கிய குறிக்கோளாகும். அதன் அடிப்படையில், குடும்ப அளவில் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டங்களான, விலையில்லா கறவைப் பசுக்கள் மற்றும் ஆடுகள் வழங்கும் திட்டமும் எனது அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. என்னால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எல்லாம், இவ்வாறு மக்களின் அத்தியாவசியத் தேவைகளை உடனடியாக தீர்க்க வழிவகை செய்வதுடன்; தங்களின் தேவைகளை தாங்களே பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் தீட்டப்பட்ட திட்டங்களாகும்.
ஆனால், முந்தைய தி.மு.க அரசின் ஆட்சிக் காலத்தில் தீட்டப்பட்ட திட்டங்கள் எல்லாம் உங்கள் வருவாயை பெருக்குவதற்கு பதிலாக, அவர்களின் குடும்ப வருவாயை பெருக்கும் திட்டங்களாக அமைந்தன. இலவச வண்ண தொலைக்காட்சி வழங்கும் திட்டம் அவர்களின் குடும்ப தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு வருவாய் கிடைக்கும் வகையிலேயே அமைந்தது. அதாவது, அரசு செலவில் அவர்கள் தங்கள் குடும்ப வருமானத்தை பன்மடங்கு பெருக்கிக் கொண்டனர். இந்த இலவசத் திட்டத்தை நினைக்கும் போது எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது.
இலவசத்தை நினைத்து இன்னொரு கதை...
ஒரு ஊரில் இருந்த ஒரு பெரிய குளத்தில் நிறைய மீன்கள் இருந்தன. குளத்திலிருந்து தண்ணீர், வெளியே செல்வதற்காக அமைக்கப்பட்ட மதகின் பக்கத்தில் இருந்து கொண்டு, ஒரு கொக்கு, மீன்கள் ஏமாந்த நேரத்தில் யாருக்கும் தெரியாமல் மீன்களை பிடித்து தின்று வந்தது. ஒரு நாள், இந்த கொக்கு மிகுந்த துயரமுடன் இருப்பது போல் குளத்தின் கரையில் வந்து அமர்ந்து கொண்டது.
இவ்வாறு சோகமாக இருந்த அந்த கொக்கிடம், ஒரு நண்டு வந்து கொக்கின் துயரம் என்னவென்று கேட்டது. 'ஒன்றுமில்லை. இந்த குளத்தினை குத்தகை எடுத்தவர், தண்ணீரை இறைத்துவிட்டு, இந்த மீன்களை பிடித்து சென்று விடுவாராம். இதனால் மீன்களின் கதி என்னவாகுமோ? என்ற கவலையில் தான் நான் சோகமாக உள்ளேன்' எனக் கூறியது அந்த கொக்கு. இதனை உண்மை என்று நம்பிய நண்டு, இதை குளத்திலுள்ள மீன்களிடத்தில் கூறியது. இதனால் கவலையடைந்த மீன்கள், இனி என்ன செய்யலாம் என அந்த கொக்கிடம் சென்று ஆலோசனை கேட்டன.
அதற்கு அந்த கொக்கு, 'நான் சிரமம் பார்க்காமல், கொஞ்சம் தொலைவில் உள்ள குளத்திற்கு மீன்களையெல்லாம் ஒவ்வொன்றாக எடுத்துச் சென்று, சேர்த்து விடுகிறேன். மீன்கள் கவலையின்றி வாழலாம்' எனக் கூறியது. இதனை நம்பிய மீன்கள், இந்த திட்டத்திற்கு இணங்கியது. கொக்கு, மீன்களை ஒவ்வொன்றாக, கொஞ்சம் தொலைவில் உள்ள குளத்திற்கு எடுத்துச் செல்வது போல் சென்று, குளத்தின் அருகில் உள்ள பாறையின் மீது வைத்து தின்றுவிட்டு, மீண்டும் பறந்து வந்து, அடுத்த மீனை தூக்கிச் சென்றது.
இவ்விதமாக கொக்கிற்கு, எவ்வித சிரமமும் இல்லாமல், தினமும் நல்ல விருந்து கிடைத்தது. ஒரு நாள் நண்டு, தன்னையும் அந்த குளத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் எனக் கேட்டது. இதற்கும் கொக்கு சம்மதித்தது. நண்டு, கொக்கின் கழுத்தில் மாலை போன்று தொங்கிக் கொண்டது. கொக்கு பறக்க ஆரம்பித்தது. தாழ்வாக பறந்துச் சென்ற கொக்கின் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த நண்டு, கொஞ்சம் தொலைவிலுள்ள பாறையை பார்த்தது. பாறையில் ஆங்காங்கே, மீன்களின் முட்கள் நிறைய கிடப்பதைப் பார்த்து, கொக்கு அந்த மீன்களை தின்று விட்டது என்பதை உணர்ந்தது.
இனிமேல் கொக்கினை உயிருடன் விட்டு வைக்கக் கூடாது என்று எண்ணிய நண்டு, தனது கொடுக்குகளினால் கொக்கின் கழுத்தினை பிடித்து, இறுக்க ஆரம்பித்ததும், கொக்கு துடி துடிக்க ஆரம்பித்தது. பறக்க முடியாமல் கீழே விழுந்த கொக்கின் கழுத்தை இறுக்கி கொன்று விட்டது நண்டு. இறந்த கொக்கின் தலையை துண்டித்து இழுத்துக் கொண்டு பழைய குளத்திற்கு வந்தது. கொக்கின் தலையுடன் வந்த நண்டை பார்த்து, மீன்கள் என்னவென்று கேட்டன. அதற்கு நண்டு, கொக்கு மீன்களை கொன்று தின்று விட்டதை கூறியது. நல்லகாலம், கொக்கிடமிருந்து தப்பித்து விட்டோம் என மகிழ்ந்து, மீன்கள் நண்டிற்கு நன்றி தெரிவித்துக் கொண்டன.
இந்த கொக்கைப் போன்ற சுயநலம் கொண்டதாகத்தான், முந்தைய தி.மு.க. அரசின் செயல்பாடு இருந்தது. ஆனால், எனது தலைமையிலான அரசு மக்கள் நலம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
இன்று நடைபெறும் இந்த இனிய விழாவில், 7 கோடியே 89 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மணப்பாறை அரசு மருத்துவமனை கட்டடம்; பள்ளி வகுப்பறைகள்; குடிநீர் வசதிகள்; ஆய்வகங்கள்; பிற்படுத்தப்பட்டோர் விடுதிக் கட்டடம்; கூட்டுறவுத் துறை வங்கிக் கட்டடம்; கிராம சந்தை மற்றும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் கட்டப்பட்ட பாலங்கள்; சமுதாயக் கூடங்கள்; பள்ளிக் கட்டடங்கள்; சாலைகள் ஆகியவற்றை மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்ததில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
சட்டக் கல்விக்கு என தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் என்ற பல்கலைக்கழகம் இயங்கி வருகின்றது. இந்த சட்டப் பல்கலைக்கழகத்துடன், 7 அரசு சட்டக் கல்லூரிகளும், ஒரு தனியார் சட்டக் கல்லூரியும் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில், சீர்மிகு சட்டப் பள்ளி 2002 ஆம் ஆண்டு என்னால் தொடங்கி வைக்கப்பட்டது. எனினும், தமிழக சட்டக் கல்வியின் தரத்தை, சர்வதேச சட்டப் பள்ளிகளின் தரங்களுக்கு இணையாக அமையச் செய்யும் வகையில், நமது மாநிலத்தில் தேசிய நிலையிலான சட்டப் பள்ளி ஒன்று தேவை என்பதைக் கருத்தில் கொண்டு, ஸ்ரீரங்கம் வட்டத்தில், தேசிய சட்டப் பள்ளி ஒன்றை நிறுவுவதற்கான சட்டம் சட்டமன்றத்தில் இயற்றப்பட்டது.
ஸ்ரீரங்கம் வட்டம், நவலூர் குட்டப்பட்டு என்ற இடத்தில், சுமார் 25 ஏக்கர் நிலப் பரப்பில், சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அமையவிருக்கும் இந்த தேசிய சட்டப் பள்ளிக்கான அடிக்கல்லை இன்று நாட்டியதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, ஏழை, எளிய மாணவ – மாணவியரின் கல்வி மேம்பாட்டிற்காக, பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கடந்த ஜூலை மாதம் துவங்கப்பட்டது. இனாம்குளத்தூர், அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் இந்தக் கல்லூரிக்கு, நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு சொந்தமான இடத்தில் 5 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சொந்தக் கட்டடம் கட்ட இன்று அடிக்கல் நாட்டியதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில், அதிக அளவில் சாகுபடியாகும் வாழையின் தரத்தை நீண்ட காலம் பாதுகாக்கும் வகையில், அந்தநல்லூர் ஒன்றியம், திருசெந்துறை கிராமத்தில், 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில், குளிர்பதன கிட்டங்கியுடன் கூடிய வாழை வணிக வளாகம் அமைக்க நான் அடிக்கல் நாட்டியுள்ளேன்.
விவசாயிகளின் வருமானத்தை பெருக்க உதவும் கால்நடைகளை நல்ல முறையில் பராமரிக்க ஏதுவாக, அந்தநல்லூர், குழுமணி, நவலூர் குட்டப்பட்டு மற்றும், பெட்டவாய்த்தலை ஆகிய கிராமங்களில் 1 கோடியே 6 லட்சம் ரூபாய் செலவில், புதிதாக கால்நடை மருத்துவமனைக் கட்டடங்கள் கட்ட இன்று நான் அடிக்கல் நாட்டியுள்ளேன்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊரக மற்றும் நகர்ப் பகுதி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுவதற்கு ஏதுவாக, பல்வேறு திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், அந்தநல்லூர் ஒன்றியத்தில் 18 குடியிருப்புகளிலும்; மணப்பாறை ஒன்றியத்தில் 22 குடியிருப்புகளிலும்; மணிகண்டம் ஒன்றியத்தில் 7 குடியிருப்புகளிலும்; ஆக மொத்தம் 47 குடியிருப்புகளில் 3 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பில் தனி மின் விசைத் திட்டம் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்திற்கு இன்று அடிக்கல் நாட்டியதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இதுவன்றி, ஏற்கெனவே பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ள 40 இடங்களில், அங்குள்ள கூடுதல் தேவையை கருத்தில் கொண்டு, 2 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் தனி மின்விசைத் திட்டத்திற்கான அடிக்கல்லையும் இன்று நான் நாட்டியுள்ளேன்.
இதே போன்று, புதிதாக குடியிருப்புகள் உருவாகியுள்ள 114 இடங்களில், 1 கோடியே 93 லட்சம் ரூபாய் செலவில் சிறுமின் விசைத் திட்டம் ஏற்படுத்தவும் இன்று நான் அடிக்கல் நாட்டியுள்ளேன். மணப்பாறை ஒன்றியத்தில், 64 குடியிருப்புகளும்; மணிகண்டம் ஒன்றியத்தில், 50 குடியிருப்புகளும் இதன் மூலம் பயன் பெறும். இது தவிர, போதுமான குடிநீர் வசதி இல்லாத இடங்களில், 42 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் மதிப்பில், குடிநீர்க் குழாயினை நீட்டிப்பதற்கான திட்டத்திற்கும், இன்று நான் அடிக்கல் நாட்டியுள்ளேன்.
இந்தக் குடிநீர் திட்டங்கள் அனைத்தும் வரும் கோடைக் காலத்திற்கு முன்பாக நிறைவேற்றப்பட்டுவிடும்.
திருச்சிராப்பள்ளி மற்றும் ஸ்ரீரங்கம் பகுதிகளில் வசிக்கும், 432 குடிசைவாழ் மக்கள் பயன்பெறும் வகையில், ஸ்ரீரங்கம் வட்டம், வெள்ளிதிருமுத்தம் என்ற இடத்தில், 24 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான அடிக்கல்லை இன்று நாட்டியதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீரங்கத்தில், தமிழை வளர்க்கும் விதமான கலை அரங்கம் ஏதுமில்லை என்பதால், ஸ்ரீரங்கம் சிங்கபெருமாள் கோயில் வளாகத்தில், 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள நவீன கலை அரங்கத்திற்கு இன்று அடிக்கல் நாட்டியதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதரை தரிசிப்பதற்காக, அம்மா மண்டபம் படித்துறையில் நீராடி, ராஜ கோபுரம் வரை பாத யாத்திரையாக வரும் பக்தர்களுக்கு, மழை மற்றும் வெயில் காலங்களில் ஏற்படும் சிரமத்தை நீக்கும் வகையில், அம்மா மண்டபம் முதல் ராஜ கோபுரம் வரை 1 கோடி ரூபாய் செலவில், மேற்கூரையுடனான நடைபாதை அமைப்பதற்கு இன்று அடிக்கல் நாட்டியுள்ளேன்.
சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, முக்கொம்பு சுற்றுலாத் தலத்தை 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கும் பணிகளுக்கான அடிக்கல்லை இன்று நாட்டியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இவையன்றி, 10 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையால் கட்டப்பட உள்ள பாலங்கள், சாலைகள், அங்கன்வாடி மையங்கள், சமையல் கூடங்கள், நியாய விலைக் கடைகள், சமுதாயக் கூடங்கள், பள்ளி கழிவறைகள், பால் கூட்டுறவு சங்கக் கட்டடம், ஆகியவற்றிற்கும் அடிக்கல் நாட்டியதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மேலூர், வெள்ளத் திருமுத்தம், கொண்டயம் பேட்டை, திம்மராய சமுத்திரம் ஆகிய பகுதிகளில் 1927 ஆம் ஆண்டு முதல் குடியிருந்து வரும் 1810 நபர்களுக்கு பட்டா வழங்கப்படாமல் இருந்து வந்தது. இவர்களுக்கு உடனடியாக வீட்டுமனைப் பட்டா வழங்க நான் உத்தரவிட்டிருந்தேன். இதன் அடிப்படையில், இவர்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை இன்று வழங்குவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றாக விளங்கும் திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில் 18.65 ஏக்கர் நிலப்பரப்பில், நீண்ட பிரகாரங்களுடன் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் எவ்வித சிரமும் இன்றி நீண்டப் பிரகாரத்தை சுற்றி சுவாமி தரிசனம் செய்ய வசதியாக, 6 நபர்கள் அமரக்கூடிய மின்கலன் மூலம் இயக்கப்படும் சீருந்து அதாவது Battery operated vehicle திருக்கோயில் நிர்வாகம் மூலம் வாங்கப்பட்டுள்ளது. இதனை இன்று முதல் இயக்கி வைப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தப் பகுதியில் உள்ள மாணவ – மாணவியர் மற்றும் பொது மக்கள் கூடுதல் போக்குவரத்து வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்று விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், 6 புதிய நகர வழித்தடங்களிலும், ஒரு புறநகர வழித்தடத்திலும் பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படும். இதனை தொடங்கி வைப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
சமுதாயத்தின் அடித்தளத்து மக்களுக்கு திருமண உதவித் திட்டத்தின் கீழ் நிதியுதவி மற்றும் தங்கக் காசு; வீட்டுமனைப் பட்டா; முதியோர் ஓய்வூதிய உதவித் தொகை; முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவிகள்; விலையில்லா வேட்டி-சேலை; விலையில்லா மின்விசிறி, மிக்சி, கிரைண்டர்; விலையில்லா சைக்கிள்; பள்ளி மாணவ-மாணவியருக்கான ஊக்கத் தொகை; விலையில்லா மடிக்கணினி; விலையில்லா கறவைப் பசுக்கள் மற்றும் ஆடுகள்; மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள்; விலையில்லா தையல் இயந்திரம்; மாற்று திறனாளிகளுக்கான இரு சக்கர நாற்காலி; பசுமை வீடுகள்; சுய உதவிக் குழுக்களுக்கான சுழல் நிதி; பொருளாதாரக் கடன்; ஊராட்சி அளவிலான குழுக் கூட்டமைப்புக்கான ஊக்கத் தொகை என, 71 கோடியே 82 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், அரசின் நலத் திட்ட உதவிகளை 1,02,364 பயனாளிகளுக்கு வழங்குவதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.
இதன் அடையாளமாக, 25 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை இந்த மேடையில் நான் வழங்க உள்ளேன். மற்ற பயனாளிகளுக்கு, அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் அந்தந்த பகுதிகளுக்கு நேரில் சென்று வழங்குவார்கள் என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications