ஈரான் விஞ்ஞானிகள் படுகொலைக்கு டெல்லியி்ல் 'பதில்' கிடைக்கும் என்பதை எதிர்பாராத மொஸாத்!

Subscribe to Oneindia Tamil

Delhi Car Blast
டெல்லி: ஈரானிய அணு விஞ்ஞானி படுகொலைசெய்யப்பட்டதால் இஸ்ரேல் மீது ஈரான் மறைமுகமாகத் தாக்குதல் நடத்தலாம் என்று ஊகித்து வைத்திருந்த இஸ்ரேல் உளவு நிறுவனமான மொஸாத், அதற்குப் பதில் டெல்லியில் வைத்து தங்களது நாட்டை ஈரான் குறி வைத்துத் தாக்கியதை சற்றும் எதிர்பார்க்கவில்லையாம்.

காந்த வெடிகுண்டு, ஸ்டிக்கர் வெடிகுண்டு என டெல்லியே அல்லோகல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது. இஸ்ரேல் தூதரக அதிகாரியின் காரில் வைக்கப்பட்ட குண்டு எந்த குண்டு என்பதை விட புதிய வகை குண்டை இந்தியாவுக்குள் கொண்டு வந்து விட்டார்களே, இனி இது எங்கெல்லாம் பரவுமோ என்ற அச்சம்தான் இந்திய உளவுத்துறையினர் மற்றும் பாதுகாப்புத் துறையினர் மத்தியில் பெரிதாக நிலவி வருகிறது.

அதேபோல இஸ்ரேலைக் குறி வைத்து இந்தியாவில் தாக்குதல் நடைபெறும் என்பதை இந்தியாவும் கூட எதிர்பார்க்கவில்லை. வழக்கமாக அமெரிக்கர்களைக் குறி வைத்துத்தான் தாக்குதல் நடத்தப்படும் என்று உளவுத் தகவல்கள் அடிக்கடி வருவது வழக்கம். ஆனால் இதுவரை ஒருமுறை கூட யூதர்களைக் குறி வைத்தோ அல்லது இஸ்ரேலியர்களைக் குறி வைத்தோ நடக்கும் என்று இந்திய உளவுத்துறையினருக்குத் தகவல் வந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த வெடிகுண்டுச் சம்பவத்தால் இஸ்ரேல் பெருமளவில் அதிர்ந்து போயுள்ளது. காரணம், எதிர்பார்த்தது ஒன்று, நடந்தது வேறொன்றாக இருப்பதால். காரணம் இஸ்ரேல் மீதுதான் மறைமுகமாக ஈரான் சார்பில் தாக்குதல்கள் நடைபெறலாம் என்று இஸ்ரேலின் உளவு அமைப்பான மொஸாத் எதிர்பார்த்திருந்தது. இதற்காக அனைத்து நாடுகளிலும் தங்களது உளவு கட்டமைப்புகளை உஷார் நிலையில் வைத்திருந்தனர். அத்தனை உளவு தகவல்களும் கூட இஸ்ரேலில்தான் தாக்குதல் நடைபெறலாம் என்று கணித்திருந்தன. ஆனால் சற்றும் எதிர்பாராமல் டெல்லியில் கை வைத்து விட்டதால் இஸ்ரேல் சற்றே அதிர்ந்து போயுள்ளதாம்.

கடந்த வாரம் கூட இஸ்ரேலிய மொஸாத் அதிகாரிகள், இந்திய உளவுத்துறை அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனையை நடத்தியுள்ளனர். அதில் இஸ்ரேலியர்கள் மீதான தாக்குதல் வாய்ப்புகள் குறித்து அவர்கள் விவாதித்துள்ளனர். இருப்பினும் ஈரான் சார்பில் இந்தியாவில் இஸ்ரேலியர்கள் மீதான தாக்குதலுக்கு வாய்ப்பில்லை என்று அந்தக் கூட்டத்தில் முடிவுக்கு வரப்பட்டிருந்தது.

மேலும், துருக்கி, கிழக்கு ஆசிய மற்றும் தென் அமெரிக்க நாடுகளை விட இந்தியாவில்தான் யூதர்களுக்கு பாதுகாப்பு அதிகம் என்று மொஸாத்தின் தலைவர் தமீர் பர்டோவும் கூட உறுதியாக நம்பியிருந்தார். காரணம், ஈரானுக்காக, இந்தியாவில் வைத்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த எந்த அமைப்பும் இல்லை என்பதால். ஆனால் அத்தனை பேரின் கண்ணிலும் மண்ணைத் தூவி விட்டு நடந்துள்ள இந்த தாக்குதல் இஸ்ரேலை மட்டுமல்லாமல் இந்தியாவையும் கூட சற்றே ஆட வைத்து விட்டது.

தற்போது இந்தியாவின் மிகப் பெரிய கவலை என்னவென்றால், இஸ்ரேல் தூதரக அதிகாரியின் காரில் வைக்கப்பட்ட புதுவிதமான குண்டுதான். இந்த காந்த குண்டு கலாச்சாரம் விரைவில் தெற்காசியா முழுவதும் பரவி விடுமோ என்ற அச்சம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மேலும் இந்த குண்டை வைப்பது எளிது என்பதால் இது வேகமாக தீவிரவாதிகள் கையில் தவழ ஆரம்பிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

மேலும் பாகிஸ்தானைக் களமாக கொண்ட சில தீவிரவாத அமைப்புகள் இத்தகைய குண்டுகளை ஏற்கனவே வைத்துள்ளதாகவும் ஒரு தகவல் உளவு அமைப்புகளுக்குக் கிடைத்துள்ளது. எனவே அத்தகைய அமைப்புகளில் யாருக்கேனும் இந்த சம்பவத்தில் தொடர்பு இருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

ஆரம்பத்தில் இத்தகைய காந்த வெடிகுண்டுகள் ஈராக்கில்தான் பயன்படுத்தப்பட்டன. பின்னர் இது ஈரானுக்கும் பரவியது. இதனால்தான் தற்போதைய தாக்குதலில் ஈரான்தான் பின்னணியில் இருக்கும் என்ற சந்தேகத்தை இஸ்ரேல் வலுவாக எழுப்பி வருகிறது.

இதுவரை எத்தனையோ வகையான குண்டுகளை இந்திய பாதுகாப்புப் படையினரும், உளவுப் படையினரும் பார்த்து விட்டனர். தற்போது புதிதாக பிறந்துள்ள இந்த வகை குண்டுகளால் பாதுகாப்புப் படையினருக்கான சவால் மேலும் அதிகரித்துள்ளது.

இதுவரை இந்த வெடிகுண்டுச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட டெட்டனேட்டரையோ அல்லது டைமரையோ காவல்துறையினராலும், புலனாய்வுப் படையினராலும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு நுனுக்கமான முறையில் இந்த வெடிகுண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வெடிகுண்டை வைத்தது நிச்சயம் இந்தியாவைச் சேர்ந்த நபராகத்தான் இருக்க முடியும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.காரணம், வெளிநாட்டுக்காரராக குறிப்பாக ஈரானியராக இருந்தால் மூலப் பொருட்களைப் பெறுவதில் பெரும் சிரமம் ஏற்படும். அதுவே உள்ளூர்க்காரராக இருந்தால் அதைப் பெறுவது எளிதானது. எனவே உள்ளூர்க்காரரைப் பயன்படுத்தி இந்த வெடிகுண்டைத் தயாரித்து அவர் கையிலேயே கொடுத்து அனுப்பியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இதற்கிடையே தாய்லாந்தில் நடந்த வெடிகுண்டுச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளின் தன்மை குறித்த தகவல்களை இந்திய விசாரணை அமைப்புகள் கோரியுள்ளன. அதேபோல ஜார்ஜியாவில் நடந்த சம்பவம் குறித்தும் இந்தியா சார்பில் தகவல்கள் கோரப்பட்டுள்ளன. 3 இடத்திலும் நடந்த தாக்குதல்களின் பின்னணியில் ஈரான் இருப்பதாக இஸ்ரேல் சந்தேகிக்கிறது.

இந்த குண்டுவெடிப்புகளுக்குக் காரணம், இஸ்ரேலிய மொஸாத் மற்றும் இஸ்ரேலியப் படையினரின் கூட்டு முயற்சியால் படுகொலை செய்யப்பட்ட ஈரான் அணு விஞ்ஞானி முஸ்தபா அகமதி ரோஷன் மற்றும் ஹிஸ்புல்லா கமாண்டர் இமாத் முக்னியாக் ஆகியோரின் கொலைகளுக்குப் பழிவாங்கும் செயலாகவே கருதப்படுகிறது.

ஜனவரி 11ம் தேதி கார் குண்டு மூலம் முஸ்தபா கொல்லப்பட்டார். அதேபோல 2008ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி இமாத் கொல்லப்பட்டார். இந்தக் கொலைகளுக்கு இஸ்ரேல் பழிவாங்கப்படலாம் என்ற உளவுத் தகவல் மட்டும் மொஸாத்திடம் இருந்தது. இருப்பினும் இந்தியாவில் தாக்குதல் நடத்தப்படும் என்பதை மொஸாத்தே எதிர்பார்க்கவில்லையாம்.

டெல்லி சம்பவம் மூலம், யானைக்கும் அடி சறுக்கும் என்பது உறுதியாகி விட்டது...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+