விருதுநகரில் கூட்ட நெரிசலில் கைவரிசை காட்டி வந்த 3 பெண்கள் கைது
விருதுநகர்: விருதுநகரில் பல இடங்களில் செயின் பறிப்பு மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 3 பெண்கள் பேருந்தில் ஒருவரிடம் நகையை திருடிக் கொண்டு ஓடிய போது போலீசாரிடம் சிக்கினர்.
விருதுநகர் மாவட்டம் லட்சுமி நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி(35). நேற்று முன்தினம் மாலையில் திருமங்கலத்தில் இருந்து ஆரப்பாளையத்திற்கு அரசு பேருந்து ஒன்றில் பயணித்தார். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது 3 பெண்கள் அவர் அருகே வந்து நெருக்கமாக நின்று அவரைக் கவனித்து கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் பழங்காநத்தம் நிறுத்தத்தில் பேருந்தைவிட்டு இறங்கிய 3 பெண்களும் வேக வேகமாக நடந்தனர். இதனால் சந்தேகமடைந்த சுப்பிரமணி தனது கையில் இருந்த பையைப் பார்த்தார். அப்போது பையில் இருந்த 5 பவுன் நகையைக் காணவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பேருந்தில் இருந்து இறங்கி அந்த 3 பெண்களையும் துரத்தினர். இதனை கவனித்த அவர்கள் ஓட ஆரம்பித்தனர். அப்போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சுப்பிரமணியபுரம் போலீசார் 3 பெண்களையும் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் சுப்பிரமணியிடம் இருந்த 5 பவுன் நகையை திருடிவிட்டு தப்பிச் செல்வது தெரிய வந்தது. மேலும் இதேபோல கூட்ட நெரிசல் அதிகம் உள்ள இடங்களுக்கு செல்லும் 3 பேரும் சேர்ந்து திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.
விசாரணையில் போலீசாரிடம் சிக்கியவர்கள் மேலூர் ஆட்டுக்குளத்தைச் சேர்ந்த பாலசுந்தரி(30), வெளிச்சநத்தத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவரின் மனைவிகள் கவிதா(33), மணிமாலா(30) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 11 பவுன் நகை, வெள்ளி கொலுசு உட்பட ரூ.4 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications