2ஜி விலை நிர்ணயம் தொடர்பாக பிடிவாதம் காட்டினார் தயாநிதி-மாஜி டெலிகாம் செயலாளர்
டெல்லி: 2ஜி அலைக்கற்றைக்கு விலை நிர்ணயிக்கும் விவகாரத்தை மத்திய அமைச்சர் குழுவின் பரிசீலனைக்கு விட வேண்டாம் என்று கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அப்போதைய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் எழுதியதாகக் கூறப்படும் கடிதங்கள் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் பார்வையில் உள்ளது.
தொலைத் தொடர்பு அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது, அமைச்சர் குழு கவனிக்கும் விவகாரங்களின் பட்டியலில் அலைக்கற்றைக்கான விலை நிர்ணயம் செய்வதும் ஒரு அம்சமாக இடம்பெற்றிருந்தது. இதற்கான அறிவிக்கை 2006 பிப்ரவரி 23-ல் வெளியிடப்பட்டது.
பின்னர் அது திருத்தி அமைக்கப்பட்டு அதே ஆண்டு டிசம்பர் 7-ம் தேதி புதிய அறிவிக்கை வெளியிடப்பட்டது. திருத்தி அமைக்கப்பட்ட பட்டியலில் அலைக்கற்றை நிர்ணயம் இடம்பெறவில்லை.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரித்து வரும் காங்கிரஸ் எம்.பி. சாக்கோ தலைமையிலான நாடாளுமன்றக் கூட்டுக் குழு, இந்த அறிவிக்கை தொடர்பாகவும் ஆய்வு செய்து வருகிறது.
இந்நிலையில், நாடாளுமன்றக் கூட்டுக் குழு முன்பு இப்போதைய தொலைத் தொடர்பு ஒழுங்காற்று ஆணையத் தலைவரும், அந்தக் காலகட்டத்தில் தொலைத் தொடர்புத் துறை செயலாளராக இருந்தவருமான ஜே.எஸ்.சர்மா புதன்கிழமை ஆஜரானார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் சாக்கோ கூறியதாவது:
அமைச்சர் குழுவின் பரிசீலனைப் பட்டியலில் இருந்து அலைக்கற்றை விலை நிர்ணயம் செய்யும் விவகாரத்தை நீக்குவது தொடர்பாக பிரதமருக்கு அமைச்சர் தயாநிதி மாறன் எழுதிய 3 கடிதங்களை சர்மாவிடம் ஜே.பி.சி. சுட்டிக் காட்டியது.
இந்த விஷயத்தில் அப்போதைய தொலைத் தொடர்புத்துறை செயலாளர் என்கிற முறையில் அவரது நிலைப்பாடு என்னவாக இருந்தது என்பது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அது உயர் நிலையில் எடுக்கப்பட்ட முடிவு என்பதால், சொந்தமாக எந்த நிலைப்பாட்டையும் எடுக்க முடியவில்லை அவர் தெரிவித்தார்.
அலைக்கற்றை விலை நிர்ணயம் செய்வது தொலைத் தொடர்புத் துறையின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்று தயாநிதி மாறன் விரும்பினார் என்றும் சர்மா தெரிவித்தார் என்றார் சாக்கோ.
இதனிடையே, சர்மா அளித்திருக்கும் தகவல்கள் சரிதானா, மாறன் தன்னிச்சையாகக் கடிதம் எழுதினாரா என்பவற்றை ஆய்வு செய்வதற்காக, இது தொடர்பான அசல் கோப்புகளை தருமாறு தொலைத் தொடர்புத் துறையிடம் நாடாளுமன்றக் கூட்டுக் குழு கோரியிருக்கிறது.












Click it and Unblock the Notifications