'குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால் பதவி விலகுவாரா மன்மோகன் சிங்?' - உதயகுமார் சவால்

கூடங்குளம் அணு மின் திட்டம் செயல்படுவதற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் போராட்டங்களுக்குப் பின்னணியில் அமெரிக்கா மற்றும் ஸ்காண்டினோவிய நாடுகளைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் குற்றம்சாட்டியிருந்தார். அவரது இந்த பேட்டி, 'சயின்ஸ்' இதழில் வெளியாகியுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து கூடங்குளம் போராட்டத்தின் ஒருங்ணைப்பாளர் உதயக்குமார் இன்று நிருபர்களிடம் கூறுகையில், "இந்திய ஜனநாயக நாட்டில் கடந்த 7 மாதங்களாக லட்சக்கணக்கான மக்கள், கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிராக அகிம்சை முறையில் போராடி வருகின்றனர். ஆனால், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமர் இதுவரை போராடும் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. இது, உண்மையில் வெட்கக்கேடான செயல்.
போராட்டிவரும் மக்களின் பிரச்னையைத் தீர்ப்பதற்குப் பதிலாக, அமெரிக்கா, ஸ்காண்டினோவிய நாடுகளைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடம் இருந்து பணம் பெறுவதாகக் குற்றம்சாட்டி, இந்தப் போராட்டத்தை அவர் கொச்சைப்படுத்தியிருக்கிறார்.
பிரதமரின் குற்றச்சாட்டை முற்றிலும் மறுக்கிறோம். எங்களுக்கு சர்வதேச நாடுகள் அல்லது இந்தியாவைச் சேர்ந்த எந்த என்.ஜி.ஓ.க்களும் பணம் தரவில்லை. இதை பலமுறைச் சொல்லியிருக்கிறோம்.
இதே குற்றச்சாட்டைதான் பிரதமரின் அமைச்சரவையில் உள்ள நாராயணசாமி கூறிவந்தார். அதையே இப்போது பிரதமரும் குறிப்பிட்டுள்ளார். மிகுந்த பொறுப்பு மிக்க பிரதமர், இந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் ஏதாவது சில ஆதாரங்களை வெளியிட்டிருக்கலாமே!
மதிப்புமிக்க பதவியில் உள்ள மன்மோகன் சிங், இந்திய மக்களை அவமதித்துள்ளார். மக்கள் தங்களது பிரச்னைகளுக்காக களமிறங்கி போராட மாட்டார்கள் என்று அவர் நினைக்கிறாரா? கொள்கை ரீதியில் முடிவெடுத்து போராடுவதற்கு மக்களுக்கு சொந்த புத்தி இல்லை என்று அவர் நினைக்கிறாரா? அல்லது மக்கள் அனைவரையும் காங்கிரஸார் போலவே இருக்க வேண்டும் விரும்புகிறாரா?
பிரதமர் தனது குற்றச்சாட்டை திரும்பப் பெற வேண்டும். அவர் தனது குற்றச்சாட்டை நிரூபித்தால், போராட்டக் குழுவில் உள்ளவர்கள் எவ்வித விசாரணையையும் சந்திக்கத் தயாராக இருக்கிறார்கள். இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்றால், பிரதமர் தனது பதவியில் இருந்து மட்டுமல்ல; அரசியலில் இருந்தே விலக வேண்டும். அவர் செய்யத் தயாராக இருக்கிறாரா?
இவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் அல்ல; 'தெரிவு' செய்யப்பட்ட பிரதமர். எனவேதான், அவர் இந்திய மக்களை இழிவுபடுத்துகிறார்.
இந்தப் போராட்டத்துக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் பெறுகிறோம் என்று நீங்கள் சொன்னால், சில்லறை வணிகம் போன்றவற்றில் அந்நிய முதலீடுகளை அனுமதிப்பதற்கு, நீங்கள் வெளிநாட்டில் இருந்து எவ்வளவு பணம் வாங்குகிறீர்கள்?
நாங்கள் காங்கிரஸார் அல்ல; இந்திய மக்கள். எங்களுக்கு சுய மரியாதை உண்டு. நாட்டுப் பற்று உணடு. சுயநலத்துக்காகவும், அரசியல் ஆதாயத்துக்காகவும் நாங்கள் போராடவில்லை. எங்கள் எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக போராடுகிறோமே தவிர, பதவிகளுக்காகவும் அதிகாரத்துக்காவும் போராடவில்லை.
எங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு, அடிப்படை ஆதாரமற்றது. கண்டிப்பாக அவர்களால் நிரூபிக்க முடியாது. வெளிநாடுகளில் இருந்தோ அல்லது இந்தியாவில் உள்ள என்.ஜி.ஓ.க்களில் இருந்தோ எவரிடம் நாங்கள் பணம் வாங்கவில்லை," என்றார் உதயகுமார்.
தமிழக நிபுணர் குழுவின் ஒரு சார்பான அறிக்கை
தமிழக அரசு நியமித்த நிபுணர் குழு குறித்து கேட்டதற்கு, "இனியன் குழு ஒரு ஜோக் என்பதை அவர்களின் செயல்பாடுகள் தெளிவுபடுத்தியிருக்கிறது. கூடங்குளம் அணு மின் நிலையைத்தை பார்வையிட்ட அவர்கள், எங்களிடம் பேசினார்கள்.
ஆனால், எங்கள் கோரிக்கையை ஏற்று, கூடங்குளம் மக்களிடமும், எங்களது நிபுணர் குழுவிடமும் அவர்கள் பேசவில்லை. ஒருசார்புத் தன்மையுடன் தான் அவர்கள் செயல்பட்டார்கள்.
இனியன் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பாகவே, 'கூடங்குளம் அணு மின்நிலையம் பாதுகாப்பாக உள்ளது,' என்று நற்சான்று அளித்துள்ளனர். இது ஏற்கத்தக்கது அல்ல. இதில் இருந்தே அவர்களது அறிக்கையின் முடிவுகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ளலாம்.
தமிழக அரசு நியமித்த குழுவின் அறிக்கைக்காக காத்திருக்கிறோம். அந்த அறிக்கையின் முடிவுகளில், நாங்கள் எதிர்பார்த்தபடியே ஒருசார்புத் தன்மை காணப்பட்டால், அந்த அறிக்கையின் நகல்களை கூடங்குளத்தில் எரிப்போம்," என்றார்.












Click it and Unblock the Notifications