இடைத் தேர்தல் : பணம் பறிமுதல், விளம்பரங்கள் அழிப்பு -தேர்தல் ஆணையம் நடவடிக்கை
சங்கரன்கோவில்: சங்கரன் கோவில் இடைத் தேர்தலை ஒட்டி தொகுதி முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக அமல்படுத்திவருகிறது. கணக்கில்
வராத பணத்தை கைப்பற்றி வரும் அதிகாரிகள், தொகுதி முழுவதும் கட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பரங்களை அகற்றும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
பணம் பறிமுதல்
சங்கரன்கோவில் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து அங்கு பணப்புழக்கத்தை தடுக்க தேர்தல் ஆணையம் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே சங்கரன்கோவிலில் இருந்து ராஜபாளையம் செல்லும் சாலையில் இடைத்தேர்தலை முன்னிட்டு வாகன சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை சாவடியில் பறக்கும் படை தாசில்தார் முகம்மது ஜாகிர்உசேன் தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது ராஜபாளையத்தை சேர்ந்த கணேசன் என்பவர் காரை அதிகாரிகள் சோதனை செய்த போது ஒரு லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் இருந்தது. பணம் குறித்து கணேசன் பறக்கும் படையினரிடம் போதிய ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளம்பரங்கள் அகற்றம்
இதேபோல் இடைத் தேர்தலையொட்டி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முழுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விதிமுறைகளை மீறி செயல்படுவோர் மீது தேர்தல் கமிஷன் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதில் மாவட்டத்தில் நகர்ப்புறங்களில் சுவர் விளம்பரங்கள் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. தனியார் சுவர்களில் உரிமையாளர்களிடம் அனுமதி பெற்று சுவர் விளம்பரங்களை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக மாவட்டத்தில் ரோட்டோரங்களில் இருந்த டிஜிட்டல் பேனர்கள் அகற்றப்பட்டன. நகர்ப்புறங்களில் சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கிராமப்புற பகுதிகளில் சுவர் விளம்பரங்களுக்கு தனியாரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications