பயங்கர ரவுடி துப்பாக்கி முனையில் சிக்கினான்-நல்லவேளை என்கவுண்டர் ஆகவில்லை!
சென்னை: சென்னையில் பயங்கரமான கூலிப்படைத் தலைவனை போலீஸார் துப்பாக்கி முனையில் வளைத்துப் பிடித்தனர். இந்த ரவுடி மீது ஏகப்பட்ட வழக்குகள் உள்ளனவாம். இதில் கொலை வழக்குகள் மட்டும் ஐந்து.
சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்தவன் சுரேஷ் என்கிற ஆற்காடு சுரேஷ். இவன் ஒரு பயங்கர ரவுடி. கூலிக்கு ஆட்களைத் தூக்குபவன். கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, கட்டப்பஞ்சாயத்து, அடிதடி என இவன் மீது இல்லாத வழக்குகள் இல்லை. கொலை வழக்குகள் மட்டும் ஐந்து வைத்துள்ளான்.
சில வருடங்களுக்கு முன்பு பூந்தமல்லி கோர்ட்டுக்கு வெளியே வைத்து வக்கீல் பகத்சிங்கை போட்டுத் தள்ளினான் சுரேஷ். அதேபோல பிரபல ரவுடி சென்னாவுக்கு முடிவுரை எழுதியதும் இதே சுரேஷ்தான். மேலும், சைதாப்பேட்டை வெங்கடேசன், ஆந்திராவைச் சேர்ந்த சீனிவாசராவ், சின்ன காஞ்சிபுரம் பரமசிவம் ஆகியோரையும் தீர்த்துக் கட்டினான்.
கூலிக்குப் பணம் வாங்கிக் கொண்டு ஆட்களைக் கொல்வதும், தாக்குவதுமாக இருந்து வந்த இவனது அட்டகாசத்திற்கு முடிவு கட்டுமாறு போலீஸ் கமிஷனர் ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டார். இதையடுத்து ஸ்கெட்ச் போட்ட போலீஸார் தனிப்படை அமைத்து சுரேஷுக்கு வலை விரித்தனர்.
கடந்த வாரம் சுரேஷின் கூட்டாளிகளான ரமேஷ், மகேந்திரன், எழிலரசன் உள்ளிட்ட 7 பேரை போலீஸார் துப்பாக்கி முனையில் வளைத்துப் பிடித்தனர். அவர்களிடம் விசாரித்தபோது நரசிம்மநகரில் உள்ள அவனது வீட்டுக்கு சுரேஷ் வந்து செல்வதாக தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸார் அந்தப் பகுதியை நோட்டமிட்டனர். நேற்று இரவும் சுரேஷ் அங்கு வந்தான். அப்போது போலீஸ் நடமாட்டம் இருப்பதை அறிந்து தப்பி ஓடினான். இதையடுத்து விரட்டிய போலீஸார் துப்பாக்கிகளை கையில் எடுத்து காட்டியதும் பயந்து போனான். வேளச்சேரி என்கவுண்டர் நினைவுக்கு வந்ததோ என்னமோ, போலீஸாரிடம் சரணடைந்தான்.
அவன் கையில் இருந்த கத்தி, பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவனைக் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications