கூடங்குளம் விவகாரம்: எந்த உத்தரவாதமும் தராத ஜெயலலிதா!
சென்னை: கூடங்குளம் அணு மின் நிலையப் பிரச்சனையில் முதல்வர் ஜெயலலிதாவை மட்டுமே நம்பி உள்ளோம் என்று அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறியுள்ளார்.
தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை போராட்டக் குழுவைச் சேர்ந்த உதயகுமார், புஷ்பராயன், வழக்கறிஞர் சிவசுப்பிரமணியன், அறிவியல் நிபுணர் ரமேஷ் ஆகியோர் சந்தித்துப் பேசினர். 15 நிமிடங்கள் மட்டுமே இந்தச் சந்திப்பு நடந்தது. அப்போது கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான கருத்துகளை முதல்வரிடம் தெரிவித்த அவர்கள், அதுதொடர்பான அறிக்கைகளையும் வழங்கினர்.
பின்னர் நிருபர்களிடம் உதயகுமார் கூறுகையில், முதல்வரிடம் எங்கள் தரப்பு வாதங்களையும், கருத்துகளையும் முன்வைத்தோம். முக்கியமாக தமிழ்நாடு அரசு மின்சார உற்பத்திக்காக எடுத்துவரும் நடவடிக்கைகளை பாராட்டினோம்.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு அமைத்த டாக்டர் இனியன் தலைமையிலான குழு, கூடங்குளம் அணு மின் நிலையத்தை வெறுமனே 2 மணி நேரம் மட்டும் சுற்றிப்பார்த்துவிட்டு, எங்கள் தரப்பு நிபுணர் குழு உறுப்பினர்களை சந்திக்காமலும், எங்கள் பகுதி மக்களை சந்திக்காமலும், ஒருதலைப்பட்சமாக அறிக்கை தயாரித்து கொடுத்துள்ளது என்ற எங்களது ஆதங்கத்தை முதல்வரிடம் தெரிவித்தோம்.
தமிழக அரசின் தீர்மானத்தை மதிக்காமல், அணு சக்தித்துறை, அணு மின் நிலைய திட்ட நிர்வாகம் ரகசியமாக உள்ளே வேலை செய்து வந்திருப்பதையும் சுட்டிக்காட்டினோம். அணு சக்தி ஒழுங்காற்று வாரியம் அண்மையில் கூடங்குளம் வந்து, அங்கு அடுத்தகட்ட பணிகள் பற்றி திட்டமிட்டு இருப்பதையும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வந்தோம்.
எங்களைப் போன்ற அடித்தட்டு மக்களுக்கு சிந்திக்கின்ற, சீர்தூக்கிப் பார்க்கின்ற திறன் உண்டு. ஒரு கொள்கை பிரச்சனையிலே முடிவு எடுக்கின்ற திறமை உண்டு. எங்கள் மக்களுக்கும், அவர்கள் உரிமைக்காக போராடுகின்ற கடமையும், உணர்வும், உரிமையும் உண்டு என்பதை மத்திய அரசு மதிக்காமல், எந்தவித மரியாதையும் கொடுக்காமல், அன்னிய நாட்டு பணத்தை வாங்கிக்கொண்டு கூலிக்கு மாரடிக்கின்ற கூட்டம் போன்று எங்களை சித்தரிப்பது பற்றியும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வந்தோம்.
எனக்கோ, எங்களது போராட்ட குழுவில் உள்ள யாருக்குமோ எந்த வெளிநாடுகளோடோ, வெளிநாட்டு நிறுவனங்களோடோ எவ்வித தொடர்பும் கிடையாது. மத்திய அரசு ஒரு உளவியல் போரை எங்கள் மீது நடத்திக் கொண்டிருக்கிறது.
வெளிநாட்டவர்களை கைது செய்வது, தொண்டு நிறுவனங்களுடைய கணக்குகளை முடக்குவது, எங்களுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருகிறது என்ற பொய் குற்றச்சாட்டுகளை சொல்வது என்று எங்களை முடக்கப் பார்க்கிறார்கள்.
இந்தப்போராட்டத்திலே முன்நிற்கின்ற எங்களுக்கு எந்தவித பண வெறியோ, பதவி வெறியோ, பதவி ஆசையோ, வேறு சுயநல நோக்கங்களோ கிடையாது. அரசியலுக்குள் வருவதற்காக நாங்கள் இந்தப் போராட்டத்தை நடத்தவில்லை. எம்.எல்.ஏ., எம்.பி ஆவதற்காக போராடவில்லை என்று முதல்வரிடம் தெரிவித்தோம்.
கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து வெளிவர இருக்கின்ற கதிர்வீச்சு கொண்ட கழிவுகள் பற்றி நாங்கள் உண்மையான கருத்துகளை கேட்கின்றோம். டாக்டர் எஸ்.கே.ஜெயின் மிகவும் குறைவாக கழிவுகள் வெளிவரும் என்கிறார். டாக்டர் காசிநாத் பாலாஜி சிறிய அளவு கழிவுகள் என்கிறார். அப்துல்கலாம் 25 சதவீத கழிவுகள் அங்கே பூமிக்குள் வைத்து பாதுகாக்கப்படும் என்கிறார்.
யாரும் விஞ்ஞானிகள் போல பேசவில்லை. உண்மையான தகவல்களை சொல்லவில்லை என்ற உண்மையான கருத்தை நாங்கள் முதல்வரிடம் சுட்டிக்காட்டினோம்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை குளிர்விப்பதற்காக கடலில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர், சூடான கதிர்வீச்சு கலந்த தண்ணீராக மீண்டும் கடலில் கொட்டப்படும்போது எங்கள் மீனவ மக்கள் அனைவரும் தொழில் இழந்து போவார்கள். எங்கள் பகுதியின் உட்பகுதியை சேர்ந்தவர்கள் அனைவரும் மீன் உணவு இல்லாமல் உணவுப் பாதுகாப்பு பிரச்சனைக்கு உள்ளாகிவிடுவார்கள் என்பதையும் எடுத்துச் சொன்னோம்.
எங்கள் மக்கள், முதல்வர் ஜெயலலிதா மட்டுமே நம்பி இருக்கிறார்கள். எங்கள் மக்களை சந்திக்க வேண்டும் என்று முதல்வரிடம் அன்பான வேண்டுகோள் விடுத்தோம்.
கூடங்குளம் அணுமின் நிலைய பகுதியிலே 30 கிலோ மீட்டர் சுற்றளவில் 15 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். நாளை ஒரு விபத்து நடந்தால் இவ்வளவு பெரிய மக்கள் கூட்டத்தை அணுசக்தித் துறையும், மத்திய அரசும் உடனடியாக அப்புறப்படுத்த முடியாது என்பது போன்ற ஆபத்துகளையும் எடுத்துரைத்தோம்.
நாங்கள் தெரிவித்த கருத்துகளை முதல்வர் மிகவும் பொறுமையாக, கவனத்தோடு கேட்டார். நாங்கள் அளித்த புத்தகங்களையும், அறிக்கைகளையும் வாங்கிக் கொண்டு, நான் இவற்றை மிக கவனமாக படிப்பேன் என்று எங்களுக்கு உத்தரவாதம் அளித்துள்ளார். நாங்கள் மிகுந்த நம்பிக்கையோடு திரும்பிச் செல்கிறோம் என்றார் உதயகுமார்.
கேள்வி: இந்தச் சந்திப்பின்போது முதல்வர் ஜெயலலிதா நேரடியாகவோ, மறைமுகமாகவோ போராட்டத்தை கைவிடும்படி எச்சரிக்கை விடுத்தாரா? இறுதிக்கெடு எதுவும் விதித்தாரா?
பதில்: அதுபோல எதுவும் சொல்லவில்லை. கூடங்குளம் அணு மின்நிலையத்தை இயற்கை எரிவாயுவால் இயக்கப்படும் மின் நிலையமாக உடனடியாக மாற்ற முடியும். அமெரிக்காவிலே லாங்க் ஐலேண்ட் என்ற இடத்தில் ஸோர் ஹேம் என்ற இடத்தில் உள்ள அணு மின்நிலையத்தையும், ஒஹாயோ மாகாணத்தில் உள்ள வில்லியம் ஹிஸ்லர் அணுமின் நிலையத்தையும் அதுபோல மாற்றி இருப்பதையும், மிச்சிகன் மாகாணத்திலே இப்படியொரு அணு மின் நிலையத்தை மாற்றி இருப்பதையும் எடுத்துக் காட்டி அதுபோல செய்யலாம் என்ற வேண்டுகோள் விடுத்தோம்.
கேள்வி: அணு மின் நிலையம் தொடர்பாக முதல்வர் ஏதேனும் கருத்து தெரிவித்தாரா?
பதில்: நாங்கள் தெரிவித்த கருத்துகளை மிகவும் கவனமாக கேட்டார். நாங்கள் கொடுத்த புத்தகங்களையும், அறிக்கைகளையும் கவனமாக படிப்பேன் என்று உறுதி அளித்தார். அதைத்தவிர வேறு எந்தக் கருத்தையும் முதல்வர் எங்களிடம் தெரிவிக்கவில்லை. எங்கள் பகுதிக்கு வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தோம். அதற்கு வருவேன் என்றோ அல்லது வரவில்லை என்றோ ஏதும் சொல்லவில்லை.
கேள்வி: அணு மின்நிலையத்தை திறப்பது என்று மத்திய அரசு முடிவெடுத்தால், நீங்கள் போராட்டத்தை தொடர்வீர்களா? அல்லது கைவிடுவீர்களா?
பதில்: இதற்கு முன்பு முதல்வரை நாங்கள் சந்தித்து கோரிக்கை விடுத்த பிறகு, தமிழக அமைச்சரவையை கூட்டி ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். இந்த முறை நிச்சயமாக ஒரு நல்ல முடிவு எடுப்பார். சாதாரண, சாமானிய அடித்தட்டு மக்களுக்கான அரசு இது என்று முதல்வர் கூறியுள்ளார். அதனால்தான் சாதாரண, சாமானிய மக்களும் முதல்வர் ஜெயலலிதாவை நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், ஊகத்தின் அடிப்படையில் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது.
கேள்வி: உங்கள் மீதான வழக்குகள் பற்றி முதல்வரிடம் பேசினீர்களா?
பதில்: அதுதொடர்பாக எதுவும் பேசவில்லை.
கேள்வி: மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பேட்டி அளித்தபோது, ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த சான்டெக் ரெய்னர் ஹெர்மன் என்பவர் சுற்றுலா விசாவில் இந்தியா வந்தார். ஆனால், சுற்றுலா விசாவில் குறிப்பிட்டுள்ள நிபந்தனையின்படி அவரது செயல்பாடுகள் இருக்கவில்லை என்று சொல்லியிருக்கிறாரே?
பதில்: அப்படியானால் அவர் மீது இந்திய சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுத்திருக்கலாமே. அதைவிட்டு அவரை ரகசியமாக நாடு கடத்த வேண்டியதன் அவசியம் என்ன? என்றார் உதயகுமார்.












Click it and Unblock the Notifications