பிரச்சாரம் செய்ய சென்ற கிருஷ்ணசாமியை புறக்கணித்த கிராமத்தினர்!
சங்கரன்கோவில்: அதிமுக வேட்பாளரை ஆதரித்து இலவன்குளத்தில் பிரச்சாரம் செய்ய சென்ற புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமிக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அவரது பிரச்சாரத்தை புறக்கணித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்துசெல்விக்கு ஆதரவாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. நேற்று சங்கரன்கோவில் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கழுகுமலை ரோடு, புளியம்பட்டி, சீவலராயனேந்தல் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது,
1996ம் ஆண்டு முதல் நாம் திமுகவுக்கு ஆதரவு அளித்து வந்தோம். நம் மக்களை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அறிவிக்கக் கோரி சட்டசபையில் குரல் எழுப்பினேன். அதை யாரும் நிறைவேற்றவில்லை. எனவே, நம் மக்கள் அனைவரும் இந்த தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும். அப்போது தான் நம் கோரிக்கைகளை சட்டசபையில் வலியுறுத்த முடியும் என்றார்.
தொடர்ந்து அவர் இலவன்குளம் கிராமத்திற்கு பிரச்சாரம் செய்ய சென்றார். அப்போது அப்பகுதி மக்கள் தேர்தல் நேரத்தில் மட்டும் தான் நாங்கள் இருப்பது உங்களுக்கு தெரியுமா, மற்ற நேரங்களில் எங்களை உங்களுக்கு தெரியவில்லையா, இப்போது மட்டும் ஏன் ஓட்டு கேட்க வந்தீர்கள், நீங்கள் பிரச்சாரம் செய்ய வேண்டாம் என கூறி அனைவரும் வீ்ட்டிற்குள் சென்றனர். இதையடுத்து கிருஷ்ணசாமி பிரச்சாரத்தை கைவிட்டு திரும்பிச் சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Click it and Unblock the Notifications
