சென்னையில் ஆளில்லாத வீடுகளை குறிவைத்து நகை கொள்ளை: மர்மநபர்கள் அட்டகாசம்
சென்னை: சென்னையில் ஆளில்லாத வீடுகளை குறி வைத்து நகை கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. இது தவிர கடைக்கு சென்ற 2 பெண்களை வழிமறி்த்து அதில் ஒருவர் அணிந்திருந்த 8.5 பவுன் செயினை பறித்துச் சென்றுள்ளனர்.
சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரம் ரயில்வே குடியிருப்பைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். ரயில்வே ஊழியரான இவர் நேற்று காலையில் பணிக்கு சென்றுவிட்டு, மாலை 7 மணி அளவில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
தாம்பரத்தை அடுத்த பீர்க்கங்காரணையைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர் குமார் என்பவர் வீட்டை பூட்டிவிட்டு நேற்று வெளியே சென்றிருந்தார். அவர் திரும்பி வருவதற்குள் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டிற்குள் வைக்கப்பட்டிருந்த 3 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது
பீர்க்கங்காரணை அவ்வை தெருவைச் சேர்ந்தவர் சந்திரமூர்த்தி. இவர் அதே பகுதியில் சலூன் கடை நடத்தி வருகின்றார். நேற்று வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருவண்ணாமலைக்கு புறப்பட்டு சென்றார். இன்று காலையில் அவரது வீடு திறந்து கிடந்தது. இது குறித்து அப்பகுதியினர்,சந்திரமூர்த்திக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர் உடனடியாக ஊர் திரும்பினார். வீட்டிற்கு வந்து பார்த்த போது 3.5 பவுன் நகையை காணவில்லை.
புழல் லட்சுமிபுரம் பாரதியார் முதல் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி சாந்தகுமாரி. இவர் நேற்று வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். மாலையில் வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது 20 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
மேற்கண்ட 4 சம்பவங்கள் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 4 சம்பவங்களும் ஆளில்லா வீடுகளில் தான் நடந்துள்ளது. இது தவிர அதே பகுதிகளில் 2 வழிப்பறி சம்பவங்களும் நடந்துள்ளன.
பீர்க்கங்காரணை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தேவசந்திரன். இவரது மனைவி சவுகாம்பிகா(32). இவர் சேலையூர் பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண் உடன் கடைக்கு சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் இருவரையும் வழிமறித்து சவுகாம்பிகை அணிந்திருந்த 8.5 பவுன் செயினை பறித்துச் சென்றனர்.












Click it and Unblock the Notifications