மறைந்த அமைச்சர் கருப்பசாமி மகன் மீது அதிமுக திடீர் கரிசனம்- புதுப் பதவி!
சென்னை: அதிமுகவால் மறக்கப்பட்டு விட்டார் மறைந்த அமைச்சர் கருப்பசாமி என்பதே பெரும் பிரச்சாரமாக சங்கரன்கோவில் மக்கள் மத்தியில் பரவி விட்டதால் அதிர்ச்சி அடைந்த அதிமுக தலைமை தற்போது கருப்பசாமி குடும்பத்தை கூல்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளது. கருப்பசாமி குடும்பத்தை நேரில் வரவழைத்து ஜெயலலிதாவை பார்க்க வைத்தனர். தற்போது கருப்பசாமி மகனுக்கு திடீரென ஒரு பதவியையும் கொடுத்துள்ளனர்.
சங்கரன்கோவில் தொகுதியின் அசைக்க முடியாத எம்.எல்.ஏவாக விளங்கி வந்தவர் கருப்பசாமி. அவர் மீது அங்கு ஒரு குற்றச்சாட்டும் இல்லை. அனைத்துக் கட்சியினரின் அன்பையும் ஒரு சேரப் பெற்றவர். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிடாதவர், கட்டப் பஞ்சாயத்து செய்யாதவர் என பல நல்ல விஷயங்கள் நிரம்பியிருந்த வித்தியாசமான அரசியல்வாதி.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக அமைச்சரான குறுகிய காலத்திலேயே அகால மரணமடைந்தார். இது சங்கரன்கோவில் மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. அதை விட சோகம், கருப்பசாமி குடும்பத்தினரை அதிமுகவினர் படு வேகமாக மறந்து போனதுதான்.
குடும்பமே வறுமையில் வாடி வந்தது. ஆனால் அதிமுகவினரின் உதவிக் கரம் ஒன்று கூட அந்தக் குடும்பத்தைக் காக்கவில்லை. இதனால் அதிமுகவுக்கு தொகுதி முழுவதும் பெரும் கெட்ட பெயரானது. இதையடுத்து சுதாரித்துக் கொண்ட உள்ளூர் அதிமுகவினர், அம்மாவின் காதுகளுக்கு இதைக் கொண்டு போக கருப்பசாமி குடும்பத்தினரை ஜெயலலிதா சென்னைக்கு வரவழைத்தார். குடும்பத்தின் நிலை குறித்து கேட்டறிந்தார். உதவிகளையும் அளித்தார்.
தற்போது கருப்பசாமி மகனுக்கு கட்சியில் பதவி தரப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி புறநகர் வடக்கு மாவட்ட இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை துணைச் செயலர் பொறுப்பில், சங்கரன்கோவில், புளியம்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்த மாரிச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
இத்தனை காலமாக கருப்பசாமியின் குடும்பத்தைக் கவனிக்காமல் இருந்து வந்த அதிமுக மேலிடம் தற்போது தேர்தல் சமயத்தில் கருப்பசாமி மகனுக்கு பதவியை வாரி வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications