ஒரு சில மணி நேரம் மட்டுமே பிரசாரம் செய்த பண்ருட்டியார்!

விஜயகாந்த்துக்கு அரசியல் கற்றுக் கொடுத்து, அவருக்கு சரியான வழிகாட்டியாக திகழ்ந்து, எந்த முடிவை எப்போது, எப்படி எடுக்க வேண்டும் என்பதை பண்ருட்டியார்தான் ஆரம்பத்திலிருந்து சரியாக சொல்லிக் கொடுத்து வந்தார் என்று கூறப்படுவதுண்டு. அதனால்தான் கட்சியில் அவருக்கு அவைத் தலைவர் பொறுப்பைக் கொடுத்து நல்ல மரியாதையுடன் வைத்திருந்தார் விஜயகாந்த்.
இருப்பினும் அதிமுகவுடன் முதல் முறையாக கூட்டணி சேர்ந்து, அதன் பின்னர் ஜெயலலிதாவால் அவமானப்படுத்தப்பட்டதால் பெரும் அப்செட் ஆகி விட்டார் விஜயகாந்த். இதற்காக பண்ருட்டியாரிடம் அவர் கடுமையாக கோபித்துக் கொண்டதாகவும் கூறப்பட்டது.
அன்று முதல் பண்ருட்டியாரிடம் முன்பு போல விஜயகாந்த் பேசுவதில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் தேமுதிக நிர்வாகிகளும் கூட பண்ருட்டியாரிடம் முன்பு போல நெருக்கம் காட்டுவதில்லை என்றும் கூறப்படுகிறது. இடையில் பண்ருட்டியார் அதிமுகவுக்குப் போகப் போவதாகவும் கூட வதந்திகள் வந்தன.
இருப்பினும் எப்போதும் போல பண்ருட்டியார் செயல்பட்டு வருகிறார். இருப்பினும் இத்தனை கால அரசியல் அனுபவத்தால், தனக்கு எது சரி என்று படுகிறதோ அதை மட்டுமே அவர் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து விஜயகாந்த்திடமே அவர் தெளிவாக சொல்லி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் சங்கரன்கோவில் பிரசாரத்திற்குக் கூட ஆரம்பத்தில் பண்ருட்டியாரை விஜயகாந்த் அனுப்பவில்லை. இதனால் கட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டு விடும் என்று அவருக்கு எடுத்துச் சொல்லப்பட்டதால் ஒரே ஒரு கூட்டம் அவர் பேச கட்சி மேலிடம் அனுமதித்ததாக தெரிகிறது. அதன்படி நேற்று சங்கரன்கோவிலில் நடந்த ஒரு கூட்டத்தில் மட்டும் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசினார்.
அரசியல் நாகரீகத்துடன் அவரது பேச்சு இருந்தது. யாரையும் தேவையில்லாமல் திட்டவில்லை, யாரையும் தேவையில்லாமல் விமர்சிக்கவில்லை. அநாகரீகமாகப் பேசவில்லை. மாறாக எது நடந்தது, என்ன நடந்தது, என்ன நடக்க வேண்டும் என்பது பற்றிப் பேசினார் பண்ருட்டியார்.
அவர் பேசுகையில், சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் திராணி இருந்தால் போட்டியிடுங்கள் என்றனர். அதனால் போட்டியிடுகிறோம். நாம் உண்மையை சொன்னது, அவர்களுக்குப் பிடிக்காமல் போய் விட்டது. நெருப்போடு நெருப்பு மோதி பெரும் நெருப்பாகி விட்டது.
அவர்கள் திராணி இருக்கிறதா என்று கேட்டது நம்மிடம்தான். ஆனால் தேவையில்லாமல் பிறரும் -அதாவது மதிமுக, திமுகவை குறிப்பிட்டு - போட்டியிடுகின்றனர்.
கடந்த, 20 ஆண்டுகளில், சரியான மின் திட்டம் இல்லாததே, தற்போதைய மின்வெட்டுக்கு காரணம். கடந்த ஆட்சியில், மின் திட்டங்களை கருணாநிதி செய்திருந்தால், இந்த பற்றாக்குறை இருந்திருக்காது. இந்தியா முழுவதும் மின்சாரம் இல்லாத போது, தமிழகத்திற்கு மட்டும், மத்திய அரசு எப்படி தர முடியும்.
சட்டசபையில் நாங்கள், 29 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளோம், அதை 30 ஆக மாற்றுங்கள். அதற்காக சங்கரன்கோவிலில் தேமுதிகவுக்கு வாக்களியுங்கள் என்று பேசினார் பண்ருட்டியார்.












Click it and Unblock the Notifications