உத்தர்கண்ட் முதல்வராக காங். எம்.பி. பஹுகுணா பதவியேற்பு-பாதி எம்எல்ஏக்கள் வரவில்லை

ஆனால், இந்த நிகழ்ச்சியில் பாதிக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் கலந்து கொள்ளவில்லை. 15 பேர் மட்டுமே பங்கேற்றனர்.
பஹுகுணாவுக்கு முதல்வர் பதவி கொடுத்ததற்கு மத்திய இணையமைச்சரான ஹரீஷ் ராவத்தும் அவரது ஆதரவு எம்எலஏக்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். தனது எதிர்ப்பைத் தெரிவிக்க தனது மத்திய அமைச்சர் பதவியை ராவத் ராஜினாமா செய்துள்ளார்.
ஆனாலும் காங்கிரஸ் தலைமை விஜய் பஹுகுணாவையே உத்தர்கண்ட் முதல்வராக இன்று பதவியேற்க வைத்தது. பதவியேற்பு விழா டேராடூனில் உள்ள பரேட் மைதானத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் மொத்தமுள்ள 32 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 15 பேர் மட்டுமே பங்கேற்றனர். மற்றவர்கள் விஜய் முதல்வராவதை எதிர்க்கும் ராவத் கோஷ்டியை சேர்ந்தவர்கள் ஆவர்.
70 இடங்கள் உள்ள உத்தர்கண்ட் சட்டசபையில் காங்கிரஸுக்கு 32 இடங்கள் கிடைத்தது. ஆட்சியமைக்க 36 எம்.எல்.ஏ.க்களாவது வேண்டும். இதையடுத்து 3 பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உத்தர்கண்ட் கிராந்தி தளத்தைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ.வின் ஆதரவை காங்கிரஸ் பெற்றது. இதன்மூலம் அந்தக் கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது.
இந் நிலையில் சுமார் 16 எம்எல்ஏக்கள் ராவத்துக்கு ஆதரவாக உள்ளதால் அவர் பாஜகவுடன் சேர்ந்து ஆட்சியமைக்க முயலலாம் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications