திண்டுக்கல்லில் எண்கெளன்டர்: கேரள ரவுடி சுட்டுக் கொலை-ரவுடி வரிச்சியூர் செல்வம் கைது!
திண்டுக்கல்: திண்டுக்கல் விடுதியில் தங்கியிருந்த ஒரு கூலிப்படைக் கும்பலைப் பிடிக்க போலீஸார் கடும் சண்டையில் இறங்க நேரிட்டது. போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவன் கொல்லப்பட்டான். அவன் கேரளாவைச் சேர்ந்தவன். பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் துப்பாக்கி முனையில் மடக்கிப் பிடித்தனர்.
பட்டப் பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த திடீர் என்கவுண்டர் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திண்டுக்கல் பஸ் நிலைய பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் ஒரு பயங்கர கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு நம்பகமான தகவல் வந்தது. இதையடுத்து பெருமளவில் போலீஸார் அங்கு குவிந்தனர். லாட்ஜை முற்றுகையிட்டனர்.
பின்னர் அந்தக் கும்பல் தங்கியிருந்த அறைகள் எது என்பதை உறுதி செய்து கொண்டு அங்கு துப்பாக்கி சகிதம் போலீஸார் விரைந்தனர். ரவுடிகள் இருந்த ஒரு அறையின் கதவை இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தட்டினார். கதவைத் திறந்து பார்த்த ரவுடிகள், போலீஸார் நிற்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் போலீஸாரைத் தாக்க முயன்றனர். ஒருவன் பாய்ந்து வந்து ஜெயச்சந்திரனின் கழுத்தைப் பிடித்து நெரித்தான்.
இதையடுத்து அவரைக் காப்பாற்றுவற்காக போலீஸார் சுட்டனர். இதில் ஒருவனின் இடது பக்கம் குண்டு பாய்ந்து விழுந்தான். இதையடுத்து மற்ற இருவரையும் துப்பாக்கி முனையில் போலீஸார் மடக்கிப் பிடித்தனர். பின்னர் அடுத்த அறைக்குப் போனபோது அங்கிருந்த இருவரில் ஒருவன் அரிவாளைக் காட்டி தப்பி ஓடி விட்டான். இன்னொருவன் சிக்கிக் கொண்டான்.
குண்டுக் காயமடைந்து விழுந்தவனை போலீஸார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவன் இறந்து விட்டதாக போலீஸார் தெரிவித்தனர். விசாரணையில் அவனது பெயர் சினோஜி என்றும் 30 வயதான இவன் கேரளாவைச் சேர்ந்தவன் என்றும் கூலிப்படையாக செயல்பட்டவன் என்றும், இவன் மீது பல்வேறு பயங்கர வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது.
பிடிபட்ட மூவரில் ஒருவன் பிரபல மதுரை ரவுடி, வரிச்சியூர் செல்வம். இன்னொருவன் பிஜூ. இவனும் கேரளாவைச் சேர்ந்தவன். பிடிபட்ட இன்னொரு நபரின் பெயர் விவரம் வெளியிடப்படவில்லை. தப்பி ஓடியவன் குறித்தும் தெரியவில்லை.
இந்தக் கும்பல் பல்வேறு கடத்தல் வழக்குகளில் தொடர்புடையவர்கள். குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டம் புகளூர் ஒன்றிய திமுக செயலாளர் கதிரவனை கடத்தி்ச சென்று ரூ. ஒன்றரை லட்சம் பணம் நகைகளைப் பறித்த கும்பல்.
இதுதொடர்பாக ஏற்கனவே ராமநாதபுரம் போலீஸார் வரிச்சியூர் செல்வம் உள்ளிட்ட ஐந்து பேரைத் தேடி வந்தனர். அந்த ஐவரும் இவர்கள்தான் என்று தெரிய வந்துள்ளது.
போலீஸார் நேற்று பட்டப் பகலில் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் நடத்திய இந்த அதிரடி நடவடிக்கையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வரிச்சியூர் செல்வம் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன. போலீஸாரின் ஹிட் லிஸ்ட்டில் இருப்பவன். பலமுறை போலீஸ் பிடியிலிருந்து தப்பியவன். இந்த முறை போலீஸார் நடத்திய என்கவுண்ட்டரில் அவன் உயிர் தப்பியிருக்கிறான்.












Click it and Unblock the Notifications