எடியூரப்பா அதிரடி- ராஜ்யசபா இடங்களுக்கு போட்டி வேட்பாளர்களை அறிவித்தார்

கர்நாடக மாநிலத்திலிருந்து ராஜ்யசபாவுக்காக பாஜக சார்பில் பசவராஜ் பாட்டீல் மறும் ராமகிருஷ்ணா ஆகியோர் போட்டியிடுவர் என்று மாநில பாஜக தலைவர் ஈஸ்வரப்பா இன்று காலை அறிவித்திருந்தார். மார்ச் 30-ந் தேதி ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடைபெறுகிறது.
புட்டசாமி
இந்நிலையில் பாரதிய ஜனதா சார்பில் தாம் போட்டியிடப் போவதாக எடியூரப்பாவின் தீவிர ஆதரவாளரும் தற்போதைய முதல்வர் சதானந்தாவின் செயலாளருமான புட்டசாமி அதிரடியாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக புட்டசாமி கூறியுள்ளதாவது:
பாரதிய ஜனதாவின் 3-வது வேட்பாளராக நான் வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளேன். 10 எம்.எல்.ஏக்களின் கையெழுத்துடன் இந்த வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளேன். கட்சி அளிக்க வேண்டிய பி-பார்மை நாளை பெற்று வேட்புமனுத் தாக்கல் செய்வேன் என்றார்.
மேலும் முதலமைச்சரின் அரசியல் செயலாளர் என்ற பொறுப்பிலிருந்து விலகிவிட்டதற்காக சான்றிதழையும் இணைத்து தாக்கல் செய்ய உள்ளதாக புட்டசாமி அறிவித்துள்ளார்.
நிதின்கட்காரி அட்வைஸ்
இதனிடையே எடியூரப்பா பொறுமை காக்க வேண்டும் என்று பாஜக தலைவர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக நிதின் கட்காரி கூறியுள்ளதாவது:
எடியூரப்பாவின் கோரிக்கை தொடர்பாக உரிய நேரத்தில் கட்சி முடிவு மேற்கொள்ளும். அதற்காக எந்த ஒரு நிர்பந்தத்துக்கும் பாரதிய ஜனதா கட்சி பணிந்துவிடாது.
எடியூரப்பா பொறுமை காக்க வேண்டும். இந்த விவகாரத்திக் கட்சித் தலைமையுடன் இணைந்து அவர் செயல்பட வேண்டும். மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்காக காத்திருந்தோம். இப்பொழுது முடிவு எடுக்க வேண்டிய நேரம் வந்துள்ளது என்றார்
அருண்ஜேட்லி
இந்நிலையில் எடியூரப்பா விவகாரத்துக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று மூத்த பாஜக தலைவர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
"எடியூரப்பாவுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அவருடன் நான் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன். இது முழுவது உட்கட்சி விவகாரம். விரைவில் தீர்வு காணப்படும்" என்றார் அவர்.












Click it and Unblock the Notifications