அதிமுகவுக்கு துணைபோன தேர்தல் கண்காணிப்பாளர் பற்றி தேர்தல் ஆணையத்திற்கு வைகோ புகார் கடிதம்

இது குறித்து அவர் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ள புகார் கடிதத்தில் கூறியிருப்பதாவது,
சங்கரன்கோயில் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆளும் கட்சியான அதிமுகவின் அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகளும் ஒரு வாக்காளருக்கு ரூ.1,000 வீதம் தொகுதி முழுவதும் அனைவருக்கும் மார்ச் 15,16 தேதிகளில் பணம் கொடுத்தனர் என்பதை தெரிவித்து மார்ச் 16ம் தேதி அன்று இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அனுப்பியிருந்தேன். மார்ச் 15ம் தேதி இரவில் மதிமுக வேட்பாளர் சதன் திருமலைக்குமார் அவர்களும், நானும் தேர்தல் கண்காணிப்பாளர் ராமேஷ்குமார் சுதான்சுவை தொடர்புகொள்ள எவ்வளவோ முயற்சித்தோம். அவரது செல்போன் அணைக்கப்பட்டிருந்தது. அவர் எங்கிருக்கிறார் என்பதையும் அறிய முடியவில்லை.
மார்ச் 16 ம் தேதி காலையில் தொலைநகல் மூலமும், நேரடியாவும் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்பட்டிருந்ததைப் புகாராகத் தெரிவித்திருந்தோம். மார்ச் 16ம் தேதி காலை 8 மணி அளவில் எனது சொந்த கிராமமான கலிங்கப்பட்டியில் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்தபோது பொதுமக்களால் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு, அவர்கள் வந்த வாகனங்களுடன் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இது குறித்து கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு, புகாரும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மார்ச் 18 ம் தேதி வாக்குப்பதிவு அன்று பிற்பகலில் தேர்தல் கண்காணிப்பாளர் ரமேஷ்குமார் சுதான்சுவும், தேர்தல் ஆணையத்தின் காவல்துறை கண்காணிப்பாளர் விஜயராஜ்சிங் கௌதமும் கலிங்கப்பட்டி வாக்குச் சாவடிகளைப் பார்வையிட்டனர்.
பத்திரிகையாளர்களிடம் தேர்தல் கண்காணிப்பாளர் ரமேஷ்குமார் சுதான்சு பணப் பட்டுவாடா குறித்து தனக்கு எந்தப் புகாரும் வரவில்லை என்றும், தொகுதியில் வாக்காளர்களுக்கு எந்த இடத்திலும் பணம் கொடுத்ததாகத் தெரியவில்லை என்றும் கூறியிருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
தேர்தல் சட்டத்தின்படி தண்டனைக்குள்ளாகும் சட்ட மீறல்களை, வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து விதிமுறையை அப்பட்டமாக மீறியதைத் தேர்தல் கண்காணிப்பாளர் ரமேஷ்குமார் சுதான்சுவின் முழு ஒத்துழைப்போடுதான் அதிமுக செய்திருக்கிறது என்பதை எவரும் புரிந்துகொள்ளலாம்.
தேர்தல் கண்காணிப்பாளர் கூறியிருப்பது ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை ஆட்டம் காணச் செய்துவிட்டது. தேர்தல் கண்காணிப்பாளரின் சட்டவிரோதமான, கண்டனத்திற்குரிய நடவடிக்கைகள் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையையும், மதிப்பையும் வெகுவாகப் பாதிக்கும். இந்தியாவில் தேர்தல்கள் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டுவரும் இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கூறிய பிரச்சனையில் தேர்தல் கண்காணிப்பாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications