இத்தாலியர்களை விடுவிப்பது தொடர்பாக பேச மூன்று தூதர்கள் : மாவோயிஸ்டுகள்
கந்தமால்: பிணைக்கைதிகளாக உள்ள இத்தாலிய சுற்றுலாப் பயணிகளை விடுவிப்பது தொடர்பாக ஒரிசா அரசுடன் பேச்சு நடத்த 3 பேரின் பெயர்களை மாவோயிஸ்டுகள் திங்கள்கிழமை அறிவித்துள்ளனர்.
சிறையில் உள்ள மாவோயிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர் நாராயண் சன்யால், மனித உரிமை ஆர்வலர்கள் தண்டபாணி மொஹந்தி, விஸ்வபிரியா கணுங்கோ ஆகியோரின் பெயர்களை அறிவித்து அவர்களுடன் பேச்சு நடத்துமாறு மாவோயிஸ்டுகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
பேச்சுவார்த்தை குழுவினரை அறிவிக்குமாறு மாநில முதல்வர் நவீன் பட்நாயக் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து மாவோயிஸ்டுகள் 3 பேரின் பெயர்களை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நிபந்தனைகள் என்ன?
இத்தாலிய சுற்றுலாப் பயணிகளை பிணைக்கைதிகளாக வைத்துள்ள மாவோயிஸ்டுகள், தங்களுக்கு எதிரான பசுமை வேட்டை நடவடிக்கையை நிறுத்த வேண்டும், ஒரிசா பழங்குடிகளை காட்சிப் பொருளாக மாற்றும்வகையில் சுற்றுலாத்துறை செயல்படக் கூடாது, மாவோயிஸ்டுகள் உட்பட இடதுசாரி அமைப்புகள் மீதான தடையை நீக்க வேண்டும், ஆர்த்தி மாஜி பாலியல் வன்முறை வழக்கில் தொடர்புடைய காவல்துறை
அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ராயகடா உட்பட 8 மாவட்டங்க்ளில் மாவோயிஸ்டுகள் என்ற பெயரில் கைது செய்யப்பட்ட பழங்குடிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 13 நிபந்தனைகளை மாவோயிஸ்டுகள் விதித்துள்ளதாக ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
தாக்குதல்
இதனிடையே மல்காங்கிரி மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் பஞ்சாயத்து அலுவலகம் ஒன்றை தாக்கியுள்ளனர். மல்காங்கிரி மாவட்டத்தில் ஹரிபுட் என்ற இடத்தில் நாட்டின் எல்லையோரங்களில் நிறுத்தப்படும் எல்லைப் பாதுகாப்புப் படை முகாம் உள்ளது. இம்முகாமிலிருந்து 20கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முதலிபோடா என்ற கிராமத்தில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். முதலிபோடா
அமைந்துள்ள போண்டோ மலையில்தான் இந்தியாவில் அழிவின் விளிம்பில் இருக்கும் போண்டோ இன ஆதிவாசிகள் வாழ்கின்றனர்.












Click it and Unblock the Notifications