நல்லபடியா 'நன்றிக்கடனை' செலுத்திட்டோம்... சொல்கிறார்கள் சங்கரன்கோவில் வாக்காளர்கள்!

அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா தலைமையிலான அரசு கடந்த 2011ம் ஆண்டு நடந்த பொது தேர்தலில் இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
அதிமுக ஆட்சி அமைந்த உடனே அமைச்சர் மரியம் பிச்சை விபத்தில் உயிரிழப்பு, அமைச்சர் கருப்பசாமி உடல் நலக்குறைவால் மரணம் என அதிமுகவுக்கு இழப்பு ஏற்பட்டது. இந்நிலையில் மின்தட்டுப்பாடு பிரச்சனை ஆளும்கட்சிக்கு பெரும் சவாலாக மாறியது. மேலும் 10 ஆண்டு காலமாக உயர்த்தப்படாத பேருந்து கட்டணமும் உயர்த்தப்பட்டது. அத்திவாசிய பொருட்கள் விலை உயர்வு, சமச்சீர் பாடத்திட்ட குளறுபடி போன்ற பல்வேறு நெருக்கடிகள் ஒருபுறம், மறுபுறம் கட்சியில் சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கத்தால் நெருக்கடி என்ற நிலையில் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் சங்கரன்கோவில் தொகுதியில் அதி்முக கால் பதித்து தேர்தல் பணிகளை முடுக்கி விட்டு 32 அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளை களத்தில் இறங்கியது. இத்தேர்தல் களத்தில் மின்வெட்டு, அடிப்படை வசதி, சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகள் தலை தூக்கி நின்றன. அவசரம் அவசரமாக அடிப்படை வசதிகள் போர்க்கால அடிப்படையில் செய்து முடிக்கப்பட்டன.
தமிழகம் எங்கும் மின்வெட்டு இருந்தாலும் சங்கரன்கோவில் தொகுதியில் மட்டும் பவர் கட் பாலிசி மாறியது. வைகோ, விஜயகாந்த், பிரேமலதா, கலைஞர், ஸ்டாலின், ஜிகே வாசன், திருமாவளவன் என தலைவர்கள் பிரச்சாரம் தீவிரமாக இருந்தாலும் மக்கள் மனதில் வைகோவுக்கு வாய்ப்பு கை கூடும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதிக் கொண்டிருந்தனர்.
ஜெ. எச்சரிக்கை
தேர்தல் களத்தில் அதிமுக, மதிமுகவுக்கு இடையே போட்டி கடுமையாகவும் இருந்தது. இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு வந்த முதல்வர் ஜெயலலிதா 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும், எதிர்கட்சிகளை டெபசிட் இழக்க செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இது வாக்காளர்களுக்கு பணிவான வேண்டுகோளாகவும், தேர்தல் பணியாற்றிய அமைச்சர்களுக்கு எச்சரிக்கை மணியாகவும் இருந்தது. அன்றிலிருந்து இரண்டு நாட்களில் தீவிரமாக கரன்சிகளோடு களத்தில் அதிமுகவினர் முனைப்பு காட்ட குடிசை முதல் கோபுரம் வரையுளள வீடுகளுக்கு கவர்கள் கச்சிதமாக போய் சேர்ந்தன.
அதிமுகவுக்கு வாக்களித்ததை நன்றிக் கடனாக சிலர் சொல்கின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கொடுத்தாங்க, கையைநீட்டி வாங்கிட்டோம். போடாம இருக்க முடியாதே. அதான் நன்றி மறக்காமல் நன்றிக் கடனை செலுத்திட்டோம் என்கின்றனர் அவர்கள். அத்தனை பேரும் டெபாசிட் இழக்கும் அளவுக்கு அதிமுக வேட்பாளர் வாக்குகளை அள்ளியிருக்கிறார் என்றால், எந்த அளவுக்கு மக்களை நன்றிக் கடன் செலுத்த வைத்துள்ளனர் அதிமுகவினர் என்பதை கணக்குப் போட்டுப் பார்த்துக் கொள்ளலாம.்
மேலும் கடந்த முறை வெற்றி பெற்ற மறைந்த முன்னாள் அமைச்சர் கருப்பசாமியை விட 20 ஆயிரம் வாக்குகள் அதிகம் அதிமுகவுக்கு கிடைத்துள்ளது. கடந்த தேர்தலில் மொத்தம் பதிவான வாக்கு 1 லட்சத்து 44 ஆயிரத்து 622 தான். ஆனால் இந்த தேர்தலில் பதிவான வாக்கு 1 லட்சத்து 59 ஆயிரத்து 756 வாக்குகள். கடந்த தேர்தலைவிட 15 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. பொது தேர்தலில் கூட வாக்களிக்காத 15 ஆயிரம் பேர் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்ட சகலத்தையும் பெற்று விட்டு இம்முறை தங்கள் வாக்குகளை பதிவு செய்து அடுத்து வரப்போகும் மின் கட்டண உயர்வக்கும், சங்கட வரவேற்பு தெரிவித்துள்ளது அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் தான்.
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வாக்குப் பதிவு விவரம்:
மொத்த வாக்காளர்கள் 2,06,087
ஆண் 1,02,921
பெண் 1,03,160
மொத்தம் பதிவான வாக்குகள் 1,59,760
ஆண் 77,280
பெண் 82,480
முத்துசெல்வி (அதிமுக) - 94,964
ஜவகர் சூரிய குமார் (திமுக) - 26,220
சதன் திருமலைக்குமார் (மதிமுக) - 20,675
முத்துகுமார் (தேமுதிக) - 12,144
முருகன் (பா.ஜ.க) - 1633
கணேசன் (சுயே) - 355
நாகேஸ்வரராவ் (சுயே) - 277
அய்யனு (சுயே) - 152
ஆறுமுகம் (சுயே) - 220
உடையார் (சுயே) - 300
சங்கர் (சுயே) - 377
பெருமாள் (சுயே) - 1324
வெள்ளத்துரை (சுயே) - 1115












Click it and Unblock the Notifications