வழி தவறி சென்ற என்னை எம்எல்ஏ ஆக்கி அழகு பார்ப்பவர் 'புரட்சித் தலைவி அம்மா': கு.ப.கிருஷ்ணன்

முன்பு அதிமுக அமைச்சராக இருந்த கு.ப.கிருஷ்ணன் அதிலிருந்து விலகி தமிழர் பூமி என்ற கட்சியை தொடங்கினார். அந்த கட்சியை கலைத்து விட்டு தே.மு.தி.கவில் இணைந்தார். அங்கு அவருக்கு மாநில துணை பொது செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் கு.ப. கிருஷ்ணன் தேமுதிகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்து கடந்த தேர்தலில் போட்டியிட்டு வென்றார்.
இந் நிலையில் சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் கு.ப.கிருஷ்ணன் பேசுகையில்,
பத்து பிள்ளைகளைப் பெற்ற தாய் பிள்ளைகளோடு திருவிழா காண செல்கிறாள். கூட்டத்தில் ஒரு பிள்ளை காணாமல் போய் விடுகிறது. பத்தில் ஒன்று குறைந்தால் என்ன? ஒன்பது இருக்கிறதே என நிறைவு கொள்ளமாட்டார். காணாமல் போன பிள்ளையை கண்டுபிடித்து வாரி அணைத்து உச்சி முகந்து, பக்குவமாக அறிவுரை கூறி, அன்பு பாரட்டுவார். இதுவே தாயின் உள்ளம்.
வழி தவறிப் போன என்னை வழிகாட்டி அறிவு புகட்டி அவையில் அமர வைத்து அழகு பார்க்கும் எங்களின் 'அருந்தவமே'.
வாழ்வே அற்றுப் போய்விட்டது என வாடியிருந்த மக்களுக்கு நடுவனரசை எதிர் நோக்காமல் ரூ.850 கோடியை கொட்டிக் கொடுத்ததோடு ஓராயிரம் கோடியில் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகளை கட்டிக் கொடுப்பதோடு உலக வரலாற்றில் எந்த தலைவருக்கும் உதிக்காத உயரிய திட்டம் கண்டார்.
மா, பலா, வாழை, முந்திரி மரங்களெல்லாம் வேரோடு, வேரடி மண்ணோடு வீழ்ந்துக் கிடப்பதை கண்டு பொறுக்காத நெஞ்சத்தாருக்கு மரக்கன்று தந்து, சிறுதளை பை தந்து உயிர் வாழ நுண்ணீர்ப் பாசனம் தந்து நட்ட மா, பலா, வாழை, முந்திரி பலன் தரும் காலம் வரை பாடுபடும் உழவருக்கு 790.18 கோடி பணக்கொடை தந்து பாரினில் உயர்ந்துள்ளார்.
தங்கள் எண்ணக் கனவு இனிதே நிறைவேறும் பத்தாண்டு காலமென்ன? பாராளும் காலம் தொலைவில் இல்லை.
உணவு பெருக்க நடவடிக்கையாக இரண்டாம் பசுமை புரட்சியை ஏற்படுத்த முன் எப்பொழும் இல்லாத வேளாண் துறைக்கு 3804.96 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீங்கள் ஆளும் போதுதான் காவிரித் தாயின் கைவிலங்கு கழற்றப்படுகிறது.
காவிரி நடுவர் நீதி மன்றத்தின் இறுதி தீர்ப்பில் தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட இன்னல்களை போக்க உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு நடைபெறுகிறது. அடுத்து வரும் ஆண்டிற்கு தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய உரிய நீரின்றி காத்துக் கிடக்கும் அவல நிலையைப் போக்க உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கொன்றை தொடுத்திருப்பது உரிமையை நிலைநாட்ட தாங்கள் எடுத்திருக்கும் உரிமைப் பிரகடனமாகவே இதைக் கருதுகிறேன்.
கருணாநிதியின் திட்டங்கள், பார்ப்பதற்கும், படிப்பதற்கும் நன்றாக இருக்கும். ஆனால், உண்மையில் திட்டங்களின் பலன், அவரின் குடும்பத்திற்கு போய் சேரும் வகையில் தான் இருக்கும் என, எம்.ஜி.ஆர் கூறியிருக்கிறார் என்றார் கு.ப.கிருஷ்ணன்
முன்னதாக அமைச்சர் விஸ்வநாதன் பேசுகையில், சங்கரன்கோவில் இடைத்தேர்தல் இடைத்தேர்தல் அல்ல; எடைத் தேர்தல். திமுக ஆட்சியில் செய்த திட்டங்களை எடை போட்டு பார்த்து, மக்கள் தீர்ப்பளிக்க வேண்டும் என கருணாநிதி கூறினார். ஆனால், எந்த திட்டத்தையும் நீங்கள் நிறைவேற்றவில்லை. எதையுமே செய்யாமல் ஆட்சி நடத்தியதால் தான், தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பு அளித்தனர் என்றார்.
திமுக மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் பெயரை குறிப்பிட்டு அதிமுக உறுப்பினர்கள் பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது.
திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன், கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தார். அவரை, இருக்கையில் அமருமாறு, சபாநாயகர் பலமுறை கூறினார். அதன் பிறகும், தொடர்ந்து அன்பழகன் பேசிக்கொண்டே இருந்தார். இதையடுத்து, அன்பழகனை வெளியேற்ற, சபாநாயகர் ஜெயக்குமார் உத்தரவிட்டார். உடனே, சபைக் காவலர்கள் அன்பழகனை வெளியேற்றினர்.












Click it and Unblock the Notifications